‘ஜி.எஸ்.டி-யும் இந்தியாவின் வல்லரசுக் கனவும்!’- சாமானியனின் உளவியல் சொல்வது என்ன?Sponsoredஅதே வேலை... அதே சம்பளம்... அதே அம்மா... (என் அம்மாவைச் சொல்கிறேன்) விடியும்போது, வேறு காரணம்... ஆனால், அதே திட்டு!

``விலை ஏறப் போகுது, போன மாசமே, `எக்ஸ்ட்ராவா நாலு வாங்கி வை’னு சொன்னேன், கேட்டியா? இப்ப நீயே போய் வாங்கிக்கோ. எனக்கு வேலைக்கு நேரமாகுது’’ என்று முணுமுணுத்தபடி செல்கிறாள் அம்மா. காரணம், மெனோபாஸ் அல்ல; பெண்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையானதாகக் கருதப்படும் சானிடரி பேட்-ன் (Sanitary Pad) விலை 12 சதவிகிதம் அதிகரித்திருப்பது.

 

Sponsored


`விலை ஏறப் போகுதுனு எத்தனைப் பொருள்களைத்தான் வாங்கி குவிக்க முடியும்?’ என மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன். அம்மாவின் எரிச்சலும் சேர்ந்து ஜி.எஸ்.டி என்னை இன்னமும் இறுக்கமாக்கிக்கொண்டிருந்தது.

Sponsored


தினமும் செல்லும் அதே குண்டும் குழியுமான சாலையில்தான் இன்றும் பயணம் செய்துகொண்டிருக்கிறேன். வழக்கத்துக்கு மாறாக, ஏற்ற இறக்கங்கள் என்னை அச்சுறுத்திக்கொண்டிருந்தன. நான் சொல்வது சாலையை மட்டும் அல்ல, அதிலும் நான் சொல்வது என்னுடைய பிரச்னையை மட்டும் அல்ல, இது குடும்பப் பொருளாதாரம் குறித்த எல்லா நடுத்தர வர்க்கத்தினரிடமும் இருக்கும் சிக்கல் எனப் பார்க்க முடிகிறது.

‘இல்லாத ரோடுக்கு எதுக்கு...?’ என உரிமைகளைக்கூட சராசரி புலம்பல்களாகக் கேட்டுக்கொண்டும், புலம்பிக்கொண்டும் வாழும் சாமான்ய மக்களின் மன நெருக்கடி இப்போது உச்சகட்டத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னரே ஜி.எஸ்.டி பற்றிய பீதியில் போதுமான அளவுக்கு பிரஷர் ஏறியிருந்தது. வரி அமலுக்கு வந்த பின்னரும், சரியாக விளக்கப்படாத அல்லது புரிந்துகொள்ள முடியாத இந்த விதிமுறை எத்தனை பேரை சலிப்புடன் மட்டுமே வாழவைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

 

ஜி.எஸ்.டி என்ற வார்த்தையைத் தவிர எந்த அறிமுகமும் இன்னமும் பலருக்கு கிடைக்கவில்லை. ஆனால், குடி தண்ணீர் கேனின் விலை, `30 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரைகூட உயரலாம்’ எனச் சொல்கிறார்கள். (இதில் பல இடங்களில் பில் கொடுப்பது கிடையாது, அட்டையில் கையெழுத்தும், கேன்களின் எண்ணிக்கையும்தான் இருக்கும்) மூன்று நாளைக்கு ஒரு கேன் என்று வைத்துக்கொண்டால்கூட, தினமும் தண்ணீருக்காக குறைந்தபட்சம் ஐந்து ரூபாயையாவது அதிகம் செலவழிக்க வேண்டும். அப்படியே மார்க்கெட்டிங் மற்றும் வீட்டைவிட்டு வெளியில் சென்று வேலை செய்யும் குடும்ப நபர்களின் ஹோட்டல் செலவுகள், ஒரு வருடத்துக்கான துணி மற்றும் இத்யாதிகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விகிதத்தை தோராயமாக கணக்கிட்டாலும், ஜாண் ஒன்று ஏற, முழம் ஒன்று சருக்குவதாகத் தெரிகிறது. `இதுதான் எங்களைப் போன்ற சாமான்யனுக்கு வேலை மற்றும் தொழில் மீதான அதீதத் தேவையை உருவாக்கி வைத்திருக்கிறது’ என வைஸ் வெர்ஸா (Vise Versa)-க்களை கூட்டி, கழித்துக்கொண்டேன், ஆனாலும், கணக்கு தப்புத்தாளமாகவே இருந்தது.

வாழ்வதற்காக சம்பாதிப்பதா, இல்லை வரிக்காக சம்பாதிப்பதா என்ற குழப்பம் மேலோங்குகிறது. இந்தியா, வல்லரசாக மாற வேண்டும் என ஒவ்வோர் இந்தியனும் ஆசைப்படுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் ஆணைகளைப் பிரதிபலித்தே எங்கள் தலைமுறையும் அதன் உடல், மனம் சார்ந்த வழக்கங்களையும் மாற்றி அமைத்து வந்திருக்கிறது.

என் எள்ளுப்பாட்டிக்கு ஒரு டஜன் குழந்தைகள்; அடுத்த தலைமுறை பாட்டிக்கு அரை டஜன் குழந்தைகள்; அரசாங்கம் சொன்னதும், அதற்கடுத்த தலைமுறை மூன்று குழந்தைக்கு `சரி’ என்றது; அந்த மூன்றும் இரண்டானது; இன்று இரண்டுகூட வேண்டாம் ஒன்றே போதும் என்றானது. ஆனாலும், பட்ஜெட்டிலும் உழைப்பிலும் இன்னமும் அதிகச் சுமைதான் மிஞ்சுகிறது.

 

`மரங்கள் வெட்டப்படுவது குறைக்கப்பட வேண்டும்’ எனச் சொல்லி பிளாஸ்டிக்கை அறிமுகம் செய்தனர். உடனே மஞ்சள் பைகளை எல்லாம், `அவுட் ஆஃப் ஃபேஷன்’ எனச் சொல்லி தாத்தா, பாட்டியுடன் மூட்டைகட்டி அனுப்பிவிட்டோம். ஆனால், அதே மஞ்சள் பையை இப்போது `ஆரோக்கியம் அவசியம்’ எனச் சொல்லி, வேறு வண்ண வடிவங்களில் விற்பனை செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் `பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்’ என ஆரம்பித்து, பிளாஸ்டிக் கவர்களுக்கு விலை நிர்ணயம் செய்தது இப்போது தேவையில்லாமல் ஏன் நினைவுக்கு வருகிறது என்பது தெரியவில்லை. அது வரை இலவசமாகப் பெற்றுக்கொண்டிருந்த பிளாஸ்டிக்குகளுக்கும் சேர்த்து இன்று நுகர்வோரான நாம்தான் பணம் செலுத்துகிறோம். 

பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதில் விற்பனையாளருக்கு பங்கு இல்லாமல், வெறும் நுகர்வோர் என்ன செய்துவிட முடியும்? `மாற்றங்களையெல்லாம் சாமான்ய மனிதன்தான் முதுகில் சுமந்துகொள்ள வேண்டுமா?’ என்ற நடைமுறைச் சிக்கல் இதிலும் உருவாகிவிட்டால்? இந்த அச்சமும் சலிப்பும்தான் புதிய திட்டங்கள் வரும்போதெல்லாம் எங்களைப் போன்ற சாமான்யர்களை அச்சுறுத்துவதற்கான அடிப்படைகள்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குள் பல பொருளாதார மற்றும் வாழ்வியல் சிக்கல்களை அதிகமான அளவில் சந்திக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். இது, தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மறைந்திருந்து தாக்குகிறது. மாற்றங்கள் அவசியம்தான். ஆனால், கற்கவும் கற்பிக்கவும் வாய்ப்பற்ற குறைந்த கால அவகாசத்தில், டிஜிட்டல், பண பரிவர்த்தனை... என இயல்பான எல்லா வழக்கங்களும் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதை உணர முடிகிறது. அப்பா, தாத்தா போன்ற நாற்பது வயதைத் தாண்டியவர்கள் டிஜிட்டலுக்குள் நுழைவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். வங்கியில் மனிதர்களிடம் பெற்றுக்கொண்டிருந்த பென்ஷன் பணத்தை, ஏ.டி.எம் கவுன்ட்டரில் நடுங்கியபடி, கார்டைப் பயன்படுத்த தெரியாமல் விழிக்கும் வயதானவர்கள்போல இப்போது இந்த ஜி.எஸ்.டி வரிக்கும் அப்படியான தடுமாற்றங்கள் ஒவ்வொருவரிடமும் வந்திருக்கின்றன.

‘கிஸ்தி, திரை, வரி, வட்டி...’ என வீரபாண்டிய கட்டபொம்பன் பட வசனமெல்லாம் மறந்துபோன நிலையில், ஜி.எஸ்.டி அதை நினைவுகூரச் செய்கிறது.

பயணத்தில் வாங்கும் ஒரு லிட்டர் தண்ணீர் கேனுக்கு ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விலை. பல இடங்களில் பில் கிடையாது. அப்படியென்றால், வரிக்காகக் கொடுக்கப்படும் நம் பணம் அரசுக்கு எப்படி சென்றடையும்? `மீண்டும் மீண்டும் நாட்டின் வளர்ச்சிகள் அனைத்தும் சாமான்ய மக்களுக்கான தேவைகளின் மீது கட்டமைக்கப்படாமலேயே இருக்கிறதோ’ என்ற ஐயத்தை உருவாக்குகிறது.

ஒருவழியாக பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் வீட்டு வாசலுக்குள் வந்தபோது, அப்பா நோட்டு புத்தகத்தில் கணக்கு எழுதிக்கொண்டிருந்தார். அம்மாவுக்கோ, எந்த வேளை சாப்பாட்டுக்கு உப்புமாவைக் கிண்டி சமாளிக்கலாம் என்ற குழப்பம்; கூடவே, காட்டன் புடவைகளின் விலை ஏற்றம் இனி தன்னைக் கடையைத் திரும்பிப் பார்க்கக்கூட அனுமதிக்காதோ என்ற ஏக்கம்!

முன்பெல்லாம் ஆறு பேர்கொண்ட வீட்டுக்கு ஒருவர் சம்பாதித்த நிலையிலும் நிம்மதியாகவே வாழ்ந்தார்கள். இன்று இருக்கும் மூன்று பேரும் வாழ்வாதாரம் இருக்கும் திசையை நோக்கி ஓடினாலும், பட்ஜெட்டில் துண்டல்ல... வேட்டி, புடவை, சுரிதார் எல்லாமும் விழுகின்றன. `அதற்கும் ஜி.எஸ்.டி உண்டு’ என்பது எங்கள் அளவில், எங்கள் இந்தியாவை வல்லரசாக்க நாங்கள் செய்து காட்டவேண்டிய அரசியல் கட்டமைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது.Trending Articles

Sponsored