"அவமானப்படுத்தி வெட்டிக் கொல்வேன்!" இயக்குநர் திவ்யபாரதிக்கு மிரட்டல்Sponsoredf

மூகப் பிரச்னைகளுக்காகப் பொதுவெளிக்கு வந்து போராடும் பெரும்பாலான பெண்கள்மீது பாலியல்ரீதியாக வக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவதும், அவர்களைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதும் அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது. அந்த வகையில், 'கக்கூஸ்' ஆவணப்படத்தை இயக்கிய திவ்யபாரதியை மர்ம நபர்கள் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி, ஆபாசமான வார்த்தைகளாலும் அவரைத் திட்டியுள்ளனர்.   

2009-ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டதாகத் திவ்யபாரதியைக் கடந்த 25-ம் தேதி மதுரை போலீஸார் கைதுசெய்தனர். இதற்குப் பல கண்டனங்கள் எழுந்ததுடன், கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பதிவுசெய்தனர். இதுதொடர்பாகத் திவ்யபாரதியிடம் அப்போது பேசினோம். ''2009-ல், தலித் மாணவர்களின் விடுதிகளின் தரத்தை உயர்த்தக்கோரி நடத்தியப் போராட்டத்தில் என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குக்காகத்தான் போலீஸார் தற்போது என்னைக் கைது செய்துள்ளனர்'' என அவர் தெரிவித்திருந்தார். ஆனால், திவ்யபாரதியின் கைதுக்கான காரணம் அது இல்லை என்று பரவலாகப் பேசப்பட்டது. 

Sponsored


Sponsored


அண்ணா பல்கலைக்கழக திண்டுக்கல் கிளையில் பணியாற்றிவரும் முதல்வர் சித்ராதேவி, பல்கலைக்கழகத் துப்புரவுத் தொழிலாளர்கள்மீது நிகழ்த்திய கொடூரத் தாக்குதல்கள் குறித்த வீடியோவை எடுத்து வெளியிட்டு அம்பலப்படுத்தியிருந்தார். அந்த விவகாரத்தில்தான் திவ்யபாரதியைப் போலீஸ் கைதுசெய்ததாகச் சொல்லப்பட்டது. அவர், கைதுசெய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள்... 'தனக்குத் தற்போது தொலைபேசி வழியாகக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன' என திவ்யபாரதி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக அவரைத் தொடர்புகொண்டபோது, "புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எனக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக ஈ போஸ்ட் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில், 'கக்கூஸ்' படத்துக்கு எதிராக வழக்குப் போட இருப்பதாக இருந்தது. அதற்கு நான், 'சட்டரீதியாக அதை எதிர்கொள்வேன்' எனப் பதிவிட்டிருந்தேன். இந்தநிலையில், அந்தக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் சிலர்... இந்த ....மகளைத் திட்டித் தீருங்கள்' என போஸ்ட் போட்டு... அதில் என்னுடைய நம்பரையும் பதிவிட்டிருந்தனர். இதையடுத்துதான் எனக்குக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த ஆவணப்படத்தில், இங்கு தலித் சமூகம் மட்டும் துப்புரவுத் தொழிலைச் செய்யவில்லை பலரும் செய்து வருகிறார்கள் எனச் சுட்டிக்காட்டி இருப்பேன். அந்தப் படத்தின் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதை வைத்துக்கொண்டு, 'எங்களுடையச் சமூகத்தை இழிவுபடுத்திவிட்டாய்' எனத் தொடர்ந்து போனில் மிரட்டிவருகிறார்கள். 'அவமானப்படுத்தி வெட்டிக் கொல்வேன்' என்று மிரட்டுவதுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டுகிறார்கள். இப்படித் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளும் எஸ்.எம்.எஸ்-களும் வந்துகொண்டிருக்கின்றன. அதன்காரணமாகவே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தேன். உண்மை, அந்த ஆவணப்படம் மட்டுமே அல்ல... அதற்குப் பின்னால் வேறு அரசியல் உள்ளது'' என்றவரிடம்,

''இந்தப் படத்துக்கும் புதிய தமிழகம் கட்சிக்கும் என்ன தொடர்பு'' என்று நாம் கேட்டபோது, "அண்ணா பல்கலைக்கழக முதல்வர் சித்ராதேவி குறித்த வீடியோ தொடர்பாகவே இந்தத் தாக்குதல் அரங்கேறிவருகிறது. என்னைக் கைதுசெய்ததற்கும் தற்போது ட்ரோல் செய்வதற்கும் சித்ராதேவி குறித்த அந்த வீடியோதான் காரணம். அதைக் காரணம் காட்டமுடியாது என்பதால், என் ஆவணப்படத்தை வைத்து என்மீது தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகத் தவறான தகவலைப் பரப்பிவிட்டு என்மீது வார்த்தை வக்கிரமங்களைத் தெளித்துவருகிறார்கள். தொலைபேசியில் அழைத்து ஊரையும், பேரையும் சொல்லாமல்...தனக்குத் தெரிந்த நான்கு கெட்டவார்த்தைகளைப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுகின்றனர்.இதற்குப் பெயர் வீரம் இல்லை. இப்படிச் செய்வதன்மூலம் என்னுடைய வேலைகளை நிறுத்திவிடலாம், முடக்கிவிடலாம் எனக் கணக்குப் போட்டு இவ்வாறு செய்கிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நானில்லை.இதுதொடர்பாக மதுரை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்க  உள்ளேன்'' என்றார் மிகவும் தீர்க்கமான முடிவுடன். 

இது குறித்து புதிய தமிழகம் கட்சியின்  தலைவர் கிருஷ்ணசாமியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, " இந்த விவகாரம் தொடர்பாக எங்களுடைய நிர்வாகிகளுடன் பேசினேன் . திவ்யா எடுத்துள்ள  'கக்கூஸ் ' படத்தின் காட்சிகளைக் காட்டினர். திவ்யா குறிப்பிட்டுள்ள சமூத்தினர் அந்த வேலையைச் செய்யவில்லை. .இதை சாதிய ரீதியாக சொல்லவில்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணத்தொகை தவறான நபர்களுக்குப் போய்விடக்கூடாது என்ற  நல்ல நோக்கத்தில் சொல்கிறேன் . அதேநேரத்தில் திவ்யா குறிப்பிட்டுள்ள ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் துப்புரவுத்தொழிலில் ஈடுபடவில்லை. தவறான  தகவலை அதில் சொல்லியுள்ளார். அந்தக் காட்சிகளை  நீக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை ." என்றவரிடம் 'அதற்கு மிரட்டல் விடுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது' எனக் கேட்டபோது "மிரட்டுபவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்பது உண்மை இல்லை. இருப்பினும் இது தொடர்பாக எங்களுடைய கட்சியில் உள்ளவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்" என்று முடித்துக் கொண்டார். 

"நாங்கள் எதார்த்தமானவர்கள்... அதனால்தான் அசாத்தியங்களைக் கனவு காண்கிறோம்'' என்கிற சேகுவேராவின் வலிமைமிக்க வரிகள்தான், திவ்யபாரதியின் ஃபேஸ்புக் பக்கத்தின் நிரந்தரப் பதிவாக இருக்கிறது. இந்த ஒரு பதிவே,அவர்களுக்குப் பதில் சொல்லும் என்பதுதான் அவரது நம்பிக்கையாகவும் இருக்கிறது..Trending Articles

Sponsored