ஜூனியர் விகடன் சுட்டிக் காட்டியது நிஜமானது!.. காலாவதியாகும் ரேஷன் கடைகள்Sponsoredதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தமிழக பொது விநியோகத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக, முன்னுரிமை குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிக்கையும் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுவிட்டது. இதன் அடிப்படையில், 'வருட வருமானம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு இனிமேல், அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படமாட்டாது' என்று வெளியாகிவரும் தகவல் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதையடுத்து, 'ரேஷன் பொருள் ரத்து செய்யக்கூடாது' என எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புக் குரல் எழுப்ப, தமிழக அரசியலே தகித்துக்கிடக்கிறது. இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ''உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழகம் ஏற்றுக்கொண்டாலும்கூட, அனைத்துத் தரப்பினரும் வழக்கம்போல் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கலாம்'' என்று புது விளக்கம் கொடுத்தார். ஆனால், ''இது மக்களை ஏமாற்றும் செயல். உலக வர்த்தக ஒப்பந்தத்தில், ஏற்கெனவே இந்தியா கையெழுத்து போட்டுவிட்ட நிலையில், மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து ரத்து செய்யப்படும். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்திய சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்! இனி இதுதான் நடக்கும்'' என்று அடித்துச் சொல்கிறார்கள் இவ்விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே உற்றுக் கவனித்துவரும் பொருளாதார நிபுணர்கள்!

தமிழகத்தை தடதடக்க வைத்திருக்கும் இவ்விவகாரம் குறித்து கடந்த மார்ச் மாத ஜூனியர் விகடனிலேயே (15-3-17) 'ரேஷன் கடை இனி இருக்குமா?' என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையில் உள்ள சில முக்கியப் பகுதிகள்  கீழே தரப்பட்டுள்ளன....

Sponsored


Sponsored


''உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில், நடைமுறைப்படுத்தமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா! இதையடுத்து தமிழக அரசை நிர்பந்திக்க தந்திரம் செய்தது மத்திய அரசு. வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு வழங்கும் 1,26,255 மெட்ரிக் டன் அரிசியை 2014 ஜூலை மாதம் முதல் நிறுத்தியது. மேலும், அந்த அரிசிக்கான விலையை, கிலோ ரூ.8.30 என்பதிலிருந்து ரூ.22.54 என்று உயர்த்தியது. இதுதான் நியாய விலைக்கடைகள் எதிர்கொண்ட முதல் சிக்கல். ஆனாலும் ஜெயலலிதா உடல் நலத்தோடு இருந்த காலம் வரை உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.''

“வழக்கமாக, ஒரு ரேஷன் கடையில் 1,000 குடும்ப அட்டைகள் இருந்தால், ஓர் அட்டைக்கு 20 கிலோ எனக் கணக்கிட்டு, சப்ளை செய்வார்கள். கடந்த மூன்று மாதங்களாக, ஆதார் கார்டு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அரிசி என்று கணக்கிட்டு வழங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் மூன்று பேருடைய ஆதார் அட்டைகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள் என்றால், அந்த மூன்று பேருக்கான அரிசியை மட்டுமே ரேஷன் கடைக்கு வழங்குகிறார்கள். இப்படி சுமார் 40 முதல் 50 சதவிகித அளவுக்கு அரிசி குறைக்கப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டுக்காக நாம் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் சத்தமில்லாமல் இதைச்செய்து முடித்துவிட்டார்கள்.

மேலும், கோதுமை கூடுதலாகவும் விலை மலிவாகவும் கிடைப்பதால், அதை வாங்கி ரேஷன் கடைகளில் இறக்கியிருக்கிறார்கள். அரிசி வாங்க வருபவர்களிடம் 10 கிலோ அரிசியையும் 10 கிலோ கோதுமையையும் இலவசமாகக் கொடுத்து சரிக்கட்டி விடுகிறார்கள். அரிசியின் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதையும் மாநில அரசால் போதிய அளவுக்குக் கொள்முதல் செய்ய முடியாததையும் வெளியில் சொல்லாமல், இந்த வேலையைச் சத்தமின்றி செய்துவருகிறார்கள்.

நியாய விலைக் கடைகளில் இப்போது மூன்று விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 'டி.வி இருக்கிறதா? டூவீலர் இருக்கிறதா? ஆண்டு வருமானம் எவ்வளவு?' என்றெல்லாம் அதில் கேள்விகள் இருக்கின்றன. அந்தப் படிவங்களின் அடிப்படையில், முன்னுரிமை உள்ளோர், முன்னுரிமை இல்லாதோர் என்று இரண்டு பிரிவாக ரேஷன் அட்டைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சத்தமே இல்லாமல் பிரித்து வகைப்படுத்திவிட்டார்கள். காலப்போக்கில், முன்னுரிமை இல்லாதவர்கள் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படலாம்'' என்கிறார் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி.

''இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் மிகப்பெரிய உணவுச் சந்தையாக இந்தியா இருக்கிறது. மானியங்களைக் கொடுத்து அரசே பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்றால், பாவம்... பன்னாட்டு வணிகர்கள் என்ன செய்வார்கள்? அதனால்தான் 'மானியத்தை ரத்து செய், பொருள்களைப் பொது சந்தையில் வாங்கச் செய்' என்று ஆணையிடுகிறது உலக வர்த்தக அமைப்பு. அதைச் செயல்படுத்துகிறது மத்திய அரசு.''

- உலக வர்த்தக ஒப்பந்தத்தில் ஆரம்பித்து ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருள்களில் மத்திய - மாநில அரசுகளின் பங்கு, பற்றாக்குறையாகும் பொருள்களின் அளவு, ஈடுகட்டுவதற்காக மாநில அரசு எடுத்துவரும் முயற்சிகள், அடுத்தக்கட்டமாக பொதுவிநியோகத் திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்பதுவரையிலான அனைத்துத் தகவல்களும் நிபுணர்களின் விரிவான பேட்டியோடு 'ரேஷன் கடை இனி இருக்குமா?' கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களோடு கூடிய, இந்தக் கட்டுரையை முழுவதுமாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்....Trending Articles

Sponsored