டெங்கு பலி அதிகரிக்க என்ன காரணம்?



ந்திய அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில்  மட்டும் சுமார் 5,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் சொல்லப்படுகிறது. திருவள்ளூர் தொடங்கி திருநெல்வேலி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் என பல மாவட்டங்களிலும் இந்நோய் பரவி தீவிரமடைந்து வருகிறது. டெங்குவால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகிவரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, வருமானவரித்துறை விசாரணைக்காக டெல்லிக்கும், சென்னைக்குமாக பறந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு முற்றிலுமாக தோல்வி அடைந்ததன் விளைவே டெங்குநோய் தாக்குதல் அதிகரித்து பலர் உயிரிழக்கக் காரணம் என்று தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Sponsored


செயலிழந்த சுகாதாரத்துறை...! 

Sponsored


தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத்திடம் பேசியபோது, 

Sponsored


"தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் தண்ணீரைச் சேமித்துவைக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தேக்கி வைக்கப்படும் நன்னீரில் எ.டி.எஸ் வகை கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தவகை கொசுக்கள் நல்ல நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. தற்போது, இந்த கொசுக்கள், அனைத்து நீரிலும் இனப்பெருக்கத்தைத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 4,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நோய்க்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். டெங்குநோய் தாக்குதல் அதிகரித்திருப்பதற்கு, தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடின்மையும், சுகாதாரத்துறையின் தோல்வியுமே காரணம் ஆகும்.   

கொசு ஒழிப்புப் பணிக்காக இதுவரை தமிழக அரசு முறையான எந்த நடடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தப் பணியில் உள்ளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்ளனர். அதுவும் வருடம் முழுவதும் ஒப்பந்தப் பணியாளர்கள் இல்லை. டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்கள் 20

நாள்கள் மட்டுமே உயிர்வாழக்கூடியவையாக இருந்தன. தற்போது அவற்றின் வாழ்நாள் நாற்பது நாள்களாக அதிகரித்துள்ளது. அதனால் இனப்பெருக்கம் அதிகரித்து, வருடம் முழுவதும் கொசுக்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தவகை கொசுக்களைக் கட்டுப்படுத்த நிரந்தரப் பணியாளர்களை சுகாதாரத்துறை பணியமர்த்த வேண்டும். இதுபோன்ற அபாயகரமான நோய்கள் வரும்போது அதற்கான ஆராய்ச்சி எதுவும் இல்லாமல் மிகவும் கண்மூடித்தனமாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளில் இதுபோன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேக்சின் (செனோசின்) உள்ளது. அதனை பிரேசில் போன்ற நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அவற்றைப் பயன்படுத்தாமல் நிலவேம்புக் குடிநீர் மட்டுமே வழங்கி வருகின்றனர். குறிப்பிட்ட சீசனில் மட்டுமே இருந்த இந்தக் காய்ச்சல் தற்போது அன்றாட நோய்களில் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. எனவே, டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு முற்றிலுமாக செயலிழந்து போனதே, இந்நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம்" என்றார்.

"தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்"

டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, "டெங்குவைக் கட்டுப்பட்டுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெங்கு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 22 ஆயிரத்து 171 ஒப்பந்தப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார, துரித செயல்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் "எலிசா" முறையில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொசுக்களை ஒழிக்கும் மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துமனைகளில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெங்கு தொடர்பான  சிகிச்சைகளை மேற்கொள்ளவும் அதுதொடர்பான நடவடிக்கைளை ஒருங்கிணைக்கவும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. 044-24334811 மற்றும் 9444340496 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொண்டு தங்களின் புகார் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். அதோடு ஏ.டி.எஸ் வகை கொசுக்களின்  இனப்பெருக்கமும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் குறித்த விழிப்பு உணர்வை விளம்பரங்கள், குறும்படங்கள் மூலம் மக்களிடைய பிரசாரமாக மேற்கொண்டு வருகிறோம். டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் சுகாதாரத்துறை மிகவும் முக்கிய பங்காற்றக்கூடியதாகும். அதுபோன்ற முக்கியமான துறையை நிர்வகிக்கின்ற அமைச்சர் வருமானவரித்துறையின் விசாரணையில் சிக்கித் தவிக்கிறார். அவர் தனது அமைச்சர் பதவியைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் சற்றே தீவிரம் காட்ட வேண்டும் என்பதுதான் நமது கருத்து.



Trending Articles

Sponsored