விதிமீறல் கட்டடங்கள் கட்டியவர்களுக்கு அபராதம் மட்டும் விதிப்பது சரியா?மிழகம் முழுவதும் விதிமீறல் கட்டடங்கள் அதிக அளவில் இருக்கின்றன.  பார்க்கிங் இல்லாத கட்டடங்கள்,  இரண்டு தளங்களுக்கு அனுமதி வாங்கி விட்டு, 5 தளங்களுக்கு மேல் கட்டுவது என்று பல்வேறு விதிமுறை மீறல்கள் இருக்கின்றன. விதிமுறை மீறல் கட்டடங்களை முறைப்படுத்தும் வகையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.  2007-ம் ஆண்டு ஜூலை 1 அன்றோ அல்லது அதற்கு முன்போ கட்டப்பட்ட கட்டங்களை அபராதம் செலுத்தி வரன்முறை செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

Sponsored


இந்தத் திட்டத்தின் படி http://tnbuildingreg.in/ என்ற இணையதளத்தில் வரும் டிசம்பர் 21-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று சி.எம்.டி.ஏ அறிவித்துள்ளது. விண்ணப்பம் செய்பவர்கள், விண்ணப்பத்துடன் ஏழு வகையான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இது போன்று முறைப்படுத்தும் அறிவிப்புகள் நல்லது அல்ல என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இது போன்ற அறிவிப்புகள், மேலும் விதிமுறை மீறல்கள் அதிகரிக்கவே வழி செய்யும் என்றும் சொல்கிறார்கள்.

Sponsored


இரண்டு சட்டங்கள்

Sponsored


இது குறித்து இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கக் கூட்டமைப்பின் சென்னைப் பிரிவு முன்னாள் தலைவர் நவீன் குமாரிடம் பேசினோம்.  "தமிழகத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்த கடந்த 1999-ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தனர். அதற்கு சில ஆண்டுகள் கழித்து இன்னும் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி விதிமீறல் கட்டடங்கள் ஒரு சதுர மீட்டருக்கு 1500 ரூபாய் முதல் 2000 ஆயிரம் ரூபாய் வரை கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இந்த இரண்டாவது சட்டத்தை 2007-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்து விட்டது. குறிப்பாக அந்த சமயத்தில் தியாகராய நகரில் நிறைய விதிமீறல் கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இப்படி ஒரு சட்டத்தின் மூலம் முறைப்படுத்துவது தவறு என்று உயர் நீதிமன்றம் கூறியது. இதன்பின்னர்தான், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், கட்டடங்களை முறைப்படுத்த சில விதிமுறைகளை வகுத்தனர். கட்டடத்தை கட்டி முடித்துவிட்டோம் என்று சி.எம்.டி.ஏ-வில் ஒரு completion சான்றிதழ் வாங்கிய பின்னர்தான் மின்சாரம், குடிநீர், கழிவு நீர் இணைப்புகள் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.  

மீண்டும் சட்டம் கூடாது

2007-ம் ஆண்டு உயர் நீதிமன்ற தடை காரணமாக 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் கட்டப்பட்ட விதிமுறை மீறல் கட்டடங்களை வரைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. இப்போது இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றமே, விதிமுறை மீறல் கட்டடங்களை முறைப்படுத்த அரசு முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. அதன்படிதான் இப்போது 2007-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ கட்டடப்பட்ட விதிமுறை மீறல் கட்டடங்களுக்கு அபராதத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

வழிகாட்டும் மதிப்பீட்டின் படி நிலத்துக்கான தொகையை அபராதமாகச் செலுத்தவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். கார்பார்க்கிங் போன்ற வசதிகளுக்கும் அபராதம் செலுத்த வேண்டும். அபராதத் தொகையை முதலில் செலுத்தி விட்டு, பின்னர் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். பணத்தை முழுமையாகக் கட்டிவிட்டு பின்னர் அனுமதி கொடுக்காவிட்டால், என்ன செய்வது என்று மக்கள் நினைக்கலாம். எனவே, இந்த விதிமுறையை மட்டும் மாற்றி அமைக்க வேண்டும். விதிமுறை மீறிய கட்டடங்களை இடிப்பதைத் தவிர்த்து இது போன்று அபராதம் விதிப்பது நல்லதுதான். அபராதத்தின் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த நகரின் மேம்பாட்டுக்குத் தர வேண்டும்.

ஆனால், இது போன்ற வரைமுறைப்படுத்துதல் சட்டம் என்பது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். இதுபோன்று திரும்பவும் ஒரு வாய்ப்புத் தரக்கூடாது. அடிக்கடி இதுபோன்று சட்டம் கொண்டு வந்தால், விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். விதிகளை மீறி கட்டிவிடலாம். மீண்டும் இது போன்று அபராதம் செலுத்தி விட்டு முறைப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்படும். அது நல்லதல்ல" என்றார்.

தண்டனையிலிருந்து விலக்கா?

விதி மீறல் கட்டடங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தியாகராயநகர் குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்த கண்ணனிடம் பேசினோம். "தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டடங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில் வெளியிடப்பட்டிருக்கும் வரன்முறை செய்வதற்கான அறிவிப்பில் பல தவறுகள் இருக்கின்றன. நாங்கள் தொடர்ந்த வழக்கிலேயே, அரசு இது குறித்துச் சொல்லியிருந்தது. ஆனால், இப்போது வெளி வந்துள்ள உத்தரவைப் பார்க்கும்போது, அவற்றில் உள்ள அம்சங்கள் விதிமீறல் கட்டடங்களுக்கு முழுக்க, முழுக்க ஆதரவாக இருக்கின்றன.

அபராதம் வாங்கிவிட்டு, கட்டடங்களை அனுமதிப்பது தவறான ஒன்று. இது எப்படி இருக்கிறது என்றால், கொலை குற்றம் செய்தவரிடம் அபராதம் வாங்கி விட்டு, அவருக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது போலத்தான். இது எப்படிச் சரியாகும். விதிமீறல் கட்டடங்களை சீல் வைக்கலாம். ஆனால், அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பல வணிகக் கட்டடங்கள் விதிகளை மீறி இருக்கின்றன. குறிப்பாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பல வணிகக் கட்டடங்களில் பார்க்கிங் வசதிகளே இல்லை. 5 அடுக்குகள் கொண்ட வணிகக் கட்டடத்தில் ஒரு தளத்தை மட்டும் பார்க்கிங் வசதிக்காக மாற்றும்படி சொல்லலாம். இதுபோன்ற யோசனைகளை எங்கள் வழக்கில் நாங்கள் சொல்லி இருக்கிறோம். விதி முறையை மீறிய கட்டடங்களில் இது போன்ற மாற்று யோசனைகளைச் செயல்படுத்தலாம்.  

2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்துக்கு ஆக்கிரமிப்பு, விதிமீறல் கட்டடங்கள்தான் காரணம். அந்தக் கட்டடங்களுக்கு அபராதம் விதித்து சரி செய்ய முடியுமா? என்பதுதான் எங்கள் கேள்வி. அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. திருத்தங்கள் செய்யாவிட்டால், அந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் வழக்குத் தொடருவோம்" என்றார் உறுதியாக.  Trending Articles

Sponsored