ஊழியர்கள் மீது திருட்டுப் பட்டம்!- அங்காடித் தெருவின் கதை-19Sponsoredதியாகராய நகரில், குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ள  கடைகள் எல்லாவற்றிலும், ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடி தெரு'  திரைப்படம் தெள்ளத் தெளிவாகக் கூறியது. இந்தத் திரைப்படம் வெளி வந்து 7 ஆண்டுகள் கடந்த பின்னும், ஜவுளிக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. 

உரிமை குறித்து விழிப்புஉணர்வு

Sponsored


இந்தக் கட்டுரைக்காக தி.நகரில் பல்வேறு நபர்களைச் சந்தித்துப் பேசினேன். ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் இருந்த ஊழியரைச் சந்தித்தேன். அந்தக் கடை, மிகப்பிரபலமான ஒரு நிறுவனத்தினுடையது. அந்தத் தொழிலாளர் அப்படிப் பேசியது ஆச்சர்யமாக இருந்தது. 

Sponsored


"ஜவுளிக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட சிந்தனைகள் எழுந்திருக்கின்றன" என்று அவர் கூறினார். நான் பத்திரிகையாளர் என்று காட்டிக்கொள்ளாமல், "அப்படியா?" என்று கேட்டேன். "ஆமாம், சார். பல ஆயிரம் பேர் இருக்கிறோம். எங்களுக்குள்ள ஒரு சங்கம் மாதிரி வைக்கலாம்னு பேசிக்கிட்டு இருக்கோம்" என்றார். 

அவர் சொன்னது அவரது கடை முதலாளிக்குத் தெரிந்தால், அவரது வேலை பறி போகலாம். எனினும் அந்தச் சிந்தனை வரவேற்கக்கூடிய ஒன்றுதான். தியாகராய நகரில், அங்காடித் தெருக்களின் ஓசைகளுக்கு இடையே குடியிருக்கும் இன்னொரு நபரைச் சந்தித்தேன். அவர் சொன்ன உண்மைச் சம்பவம், தி.நகரின் இன்னொரு முகத்தை, கோர முகத்தை வெளிப்படுத்தியது. 

சம்பளத்தில் பிடித்தம் 

"என்னுடைய வீடு இருக்கும் தெரு வழியே சீருடை அணிந்த ஊழியர்கள் செல்வார்கள். அவ்வப்போது அவர்களிடம் பேசுவது உண்டு. ஒரு நாள் இரவு 9 மணிபோல என் வீட்டுக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். நகைக்கடை ஒன்றில் வேலை பார்க்கும், ஒரு பெண் அழுதுகொண்டே நடந்து சென்றார். எனவே, அந்தப் பெண்ணிடம், 'என்னம்மா... என்ன ஆச்சு ஏன் அழுகை' என்று கேட்டேன். 

நான் கேட்பதற்காகக் காத்திருந்தவர் போல கதறி அழுதுவிட்டார். அழுகையின் இடையே அவர் சொன்ன செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் வேலை பார்க்கும் கடையில் அன்றைக்கு ஒரு தங்க மோதிரம் காணாமல் போய்விட்டது. அந்த மோதிரத்துக்கான விலையை அவரிடமும், அவருடன் வேலை பார்த்த சிலரிடமும் அந்தக் கடையின் உரிமையாளர் வசூலிக்கச் சொல்லிவிட்டாராம். இதனால், இந்த மாதம் சம்பளப் பணத்தில் பெரும் அளவு பிடிக்கப்பட்டுவிடும் என்று கதறினார். அவர் வேலை பார்க்கும் நகைக்கடையில் மட்டும் அல்ல. தி.நகரில் உள்ள பல கடைகளில் ஊழியர்களிடம் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் என்று அந்த நண்பர் சொன்னார். அவர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தி.நகரில் வசித்து வருபவர். 

சென்னையில் தி.நகரில் அதிக அளவு வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த நிறுவனங்களில் இருந்து பொருள்கள் காணாமல் போனதாக போலீஸில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில் இதுபோன்ற திருட்டுப் புகார்களை ஊழியர்களின் தலையில் சுமத்தி, அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துவிடுகின்றனர் என்று அந்த நண்பர் சொன்னார். 

ஊழியர்களின் நேர்மையைக் கேள்விக்குறியாக்குவது மட்டுமின்றி, அவர்களை அடிமைகள் போல நடத்துவதும் அன்றாடம் நடக்கும் செயலாக இருக்கிறது. தவறுசெய்த ஊழியர்கள் மீது உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பது தவறு இல்லை. ஆனால், ஏதும் அறியாத அப்பாவி ஊழியர்களிடம், காணாமல் போன பொருளுக்கான தொகையை வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. 

நரம்பு பாதிக்கப்படும் 

தி.நகரில் உள்ள ஊழியர்கள் நிலைமை குறித்து சி.ஐ.டி.யூ தென் சென்னை மாவட்டச் செயலாளர் குமாரிடம் பேசினோம். "ஷாப் அண்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் சட்டத்தில் ஊழியர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு எல்லாம் வழங்கப்பட்டுள்ளது.  ஆனால், அதை தி.நகர் கடைக்காரர்கள் அமல்படுத்துவதில்லை. நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, ஆற்காடு, ஆரணி பகுதிகளில் இருந்து வருபவர்கள்தான் தி.நகர் கடைகளில் வேலை பார்க்கின்றனர். இப்போது, சென்னையைச் சேர்ந்தவர்களையும் ஜவுளிக் கடைக்காரர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். ஊழியர்கள் தங்கள் குடும்பச் சூழல் கருதி, தங்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றி தெரிந்துகொள்வதில்லை. தொழிலாளிகளின் சட்டங்களை அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், 'தொழிலாளர்களே கேட்காமல் சும்மா இருக்கும்போது, நீங்கள் எதற்கு இதைக் கேட்கிறீர்கள்' என்று சொல்கிறார்கள். 

ஊழியர்களுக்குக் கடைகளில் போதுமான கழிவறைகள் இல்லை. ஊழியர்கள் தினமும் ஓய்வு இன்றி 12 மணி நேரம் வரை நின்றுகொண்டே வேலை பார்க்கின்றனர். நீண்ட நாள்கள் நின்று கொண்டே பணியாற்றும்போது தொடைக்கும், முழங்காலுக்கும் இடையேயான நரம்பு பாதிக்கப்படும். அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு நாற்காலி இருக்கும். ஆனால், அதில் அவர்கள் உட்கார முடியாது. உயரத்தில் இருக்கும் பொருள்களை எடுப்பதற்குத்தான் அந்த நாற்காலியைப் பயன்படுத்துகிறார்கள். 

கழிவறைகள் போதாது

கடைகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்னைகள் உடனடியாக அவர்களுக்குத் தெரியவருவதில்லை. ஓய்வு எடுக்கும்போதும், அறைக்குச் செல்லும்போதும்தான் உடல் வலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். அவர்கள் தங்கும் இடத்திலும் போதுமான கழிவறை, குளியல் அறைகள் இல்லை. இதனால், ஊழியர்கள் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து தயாராக வேண்டி இருக்கிறது. 

நிறுவனத்தை நடத்துபவர்கள் ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும். போதுமான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். அரசு சார்பில், கடைகளின் உரிமையாளர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த விவரத்தில், அரசு தலையிட்டு, 8 மணி நேர வேலை, அதிகப் பணி நேரத்துக்கு கூடுதல் சம்பளம், பண்டிகை காலங்களில் இரட்டை ஊதியம் ஆகியவற்றை வழங்க வழி செய்ய வேண்டும். ஊழியர்களுக்கான சட்டங்களை, சலுகைகளை தி.நகர் கடைகள் அமல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.  

தி.நகரை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்Trending Articles

Sponsored