”அறிவியல் ஆதாரமற்ற விஷயங்களை அரசு பரப்பக்கூடாது..!” - #IndiaMarchForScience பேரணியில் கோரிக்கைSponsored“ப்ரோ! இங்க நாம அறிவியலுக்காகப் போராடிட்டு இருக்கும்போதே அங்க எங்க கல்லூரியில பகவத் கீதையில நிறைய அறிவியல் விஷயங்கள் இருக்குனு செமினார் ஒண்ணு நடந்துட்டு இருக்கு. இதான் இன்னைக்கு நம்ம நாட்டோட நிலைமை”, வருத்தத்துடன் சொன்ன அர்ஜுன், ஐஐடி மெட்ராஸ் மாணவர். அங்கு வந்திருந்த பல பேராசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர் என அனைவருக்கும் இதேபோல் ஆதங்கங்கள். தங்கள் எதிர்ப்புகளை, கோரிக்கைகளை கைகளில் அட்டைகளாக ஏந்திய வண்ணம்  பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் வலம் வந்தனர். அந்தப் புகழ்பெற்ற சாலையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பக்கத்தில் இடம்பெறப் போகும் புதிய அத்தியாயம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தனர்.  

‘இந்தியா மார்ச் ஃபார் சயின்ஸ்‘ என்ற அறிவியல் பேரணி இந்தியா முழுவதும் சுமார் நாற்பது நகரங்களில் ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்றது. அதே நாளில், இதன் ஒரு அங்கமாக சென்னையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் மாலை 5 மணி முதல் பேரணி ஒன்று தொடங்கியது. நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்துகொண்டு ஊர்வலமாக சிறப்பாக அணிவகுத்துச் சென்றனர். குறிப்பாக ஐஐடி, கணித அறிவியல் ஆராய்ச்சிக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், புதுக்கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவற்றிலிருந்தும் பங்கேற்றனர்.

Sponsored


அந்த மழை மாலை நேரத்தையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கில் மக்களும் கூடி இருந்தனர். இந்தியா மார்ச் ஃபார் சயின்ஸ் இன் அமைப்புக் கமிட்டி கன்வீனரான டாக்டர். உமா ராமச்சந்திரன் கலந்துகொண்டோரை வணக்கத்துடன் வரவேற்றார். பேரணியைத் தொடங்கிவைத்துப் பேசிய அறிவியல் பரப்புரையாளர் திரு அரவிந் குப்தா அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை வெறுமனே எதிர்ப்பதைவிட அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் கொண்டுசெல்வது நேர்மறை அணுகுமுறையாகும் என்றார். கடற்கரை சாலையின் வடக்கு முனையிலிருந்து தொடங்கிய பேரணியில் வண்ணமிகு வாசகங்களைக் கொண்ட அட்டைகளை ஏந்திக் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

Sponsored


பேரணியில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) யில் 3% அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும் 10% கல்விக்கும் ஒதுக்க வேண்டும்.

2. அறிவியலுக்குப் புறம்பான, சகிப்புத் தன்மைக்கு எதிரான கருத்துப்பரவலை நிறுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51-A(H) யில் கூறியுள்ளபடி அறிவியல் உணர்வை, மனித மதிப்புகளை, கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

3. அறிவியல் ஆதாரங்களால் சரிபார்க்கப்பட்ட கருத்துகளை மட்டுமே கல்விச்சாலைகளில் கற்பிக்கவேண்டும்.

4. ஆதாரங்களின் அடிப்படையிலான அறிவியலைக் கொண்டு அனைத்துக் கொள்கைகளையும் தீட்ட வேண்டும்.

இந்தப் பேரணியை ஏற்பாடு செய்த பேரா. திலகர் பேசுகையில், “இன்றைய தினம் இந்தியாவே அறிவியலுக்காக அணிவகுப்போம் என்ற தலைப்பில், நாடு முழுவதும் தலைநகரங்களில் பேரணிகள் நடந்த வண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல நாடுகள் 10% கல்விக்காகவும், 3% அறிவியல் மற்றும் அதன் வளர்ச்சிக்காகவும் தங்கள் GDP யில் ஒதுக்குகின்றன. ஆனால் நம் மத்திய அரசுக் கல்விக்காக வெறும் 2.9% மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக வெறும் 0.85% மட்டுமே ஒதுக்கி வருகிறது. நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் வளராமல் “Make In India” போன்ற திட்டங்கள் எவ்வாறு சாத்தியமாகும்?

மற்றொரு புறம், அறிவியல் ஆதாரமற்ற பல விஷயங்களைப் பரப்பி வருகிறார்கள். உதாரணமாக 7000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய இந்தியாவில் ராக்கெட்கள் பறந்ததாகவும், அதற்கு மாட்டுச்சாணம் எரிபொருளாகப் பயன்பட்டதாகவும் கூறிவருகிறார்கள். இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. குருட்டுத்தனமான நம்பிக்கைகளின் அடிப்படையில் இருக்கும் விஷயங்களை அறிவியல் என்று பரப்பி மக்களைக் குழப்பி வருகிறார்கள். ஒருபுறம் கல்விக்கு, அறிவியலுக்கு நிதி மறுக்கப்படுகிறது. IIT யில் கட்டிடங்கள் கட்ட நிதி இல்லை. ” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பேரணியை முடித்துவைத்துப் பேசிய பேரா. சுந்தர், ஊனமுற்றோருக்காகச் செய்துதரப்பட வேண்டிய பல முக்கிய வசதிகளைக் கூட இங்கே கிடைப்பதில்லை. பெரிய ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கி பள்ளிகள், பொது இடங்கள் உட்பட அனைத்திலும் அவர்களுக்கான வசதிகள் இங்கே இல்லை. அதற்கென இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அறிவியல் அணுகுமுறையுடன் உடனே அதைச் செயல்படுத்த வேண்டும் என்றார். சென்னை கணித கழகத்தைச் (CMI) சேர்ந்த பேரா. டி.ஆர் கோவிந்தராஜன், கணித அறிவியல் கழகத்தைச் (IMSc) சேர்ந்த பேரா. ராமானுஜம், ஐஐடியின் பேரா.ஹேமா மூர்த்தி, பேரா சுரேஷ் கோவிந்தராஜன், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரா. அருள் அறம், கணித அறிவியல் கழக மூத்த ஆராய்ச்சி மாணவர் பிரம்மேஷ், ஐஐடி மாணவர் அர்ஜூன் ஆகியோரும் அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினர். இறுதியாக இந்தியா மார்ச் ஃபார் சயின்ஸ் - சென்னையின் அமைப்புக் கமிட்டி உறுப்பினர் ஜார்ஜ ஜோசப் நன்றியுரையாற்றினார். அறிவியலுக்காக நடைபெற்ற இந்தப் பேரணிக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.Trending Articles

Sponsored