⁠⁠⁠⁠⁠”இங்கெல்லாமா இருக்கும்..!” - 138 எரிமலைகளைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்Sponsored“நாங்கள் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறோம். அது எரிமலைத் தொடர்களால் ஆன நரகம். 138 எரிமலைகள் பனி மலைகளின் உள்ளே உறைந்து போய், அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன” சற்றே நடுங்கிய குரலில் அந்தச் சர்வதேச ஊடகத்துக்குப் பதிலளித்தார் அந்தப் புவி விஞ்ஞானி.

எரிமலைக் கூட்டத்தின் அமைப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்தப் புவி விஞ்ஞானிகள் குழு ஒரு அதிர்ச்சிகர செய்தியை இந்த உலகுக்குத் தெரிவித்துள்ளது. அது அண்டார்டிகா பனி விரிப்பின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலைகள் பற்றியது. சமீபத்திய ஆராய்ச்சியில் மேற்கு அண்டார்டிக்காவின் ஆழமான பகுதிகளில் 91 எரிமலைகள் புதைந்த வண்ணம் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இதனுடன் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 47 எரிமலைகளை சேர்த்துக்கொண்டால், இதுதான் உலகிலேயே நெருக்கமாகவும், எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கும் எரிமலைத் தொடர். இது மிகச் சரியாக ‘மேற்கு அண்டார்டிக் பிளவு’ அமைப்பின் மைய அச்சைச் சுற்றியே அமைந்துள்ளது.

Sponsored


புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

அண்டார்டிகா என்றாலே நம்மைப் பொறுத்தவரை குளிர் பிரதேசம். மனிதர்கள் உயிர் வாழ முடியாது. ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அவ்வப்போது சென்றுவருவார்கள் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். 14,000,000 சதுர கிலோமீட்டர்கள் விரியும் இது, உலகிலேயே ஐந்தாவது பெரிய கண்டமாக இருந்தாலும், இதன் அதிகபட்ச மக்கள்தொகை 4000 பேர். அதிலும், குளிர்காலங்களில், ஆயிரத்தை விடவும் குறைந்துவிடுகிறது இந்த எண்ணிக்கை. இருந்தாலும், அதை உலகுக்குத் தொடர்பில்லாத பகுதி என ஒதுக்கிவிட முடியாது. காரணம், அங்கிருக்கும் பனிப்பாறைகள்! உலகின் எதோ ஓர் மூலையில் வெப்பநிலை உயர்ந்தால், அண்டார்டிகாவில் இருக்கும் பனி உருகும். அங்கே பனி உருகினால் உலகின் வேறொரு மூலையில் கடல் மட்டம் உயரும்.

Sponsored


பென்குவின்கள் ஜாலியாக உலாவும் இந்தக் கண்டத்தில் எண்ணற்ற அதிர்ச்சியான விஷயங்களும் நிறையவே உள்ளன. அழிந்துபோன ஆற்றின் அமைப்புகள், பண்டைய குகைகள், மர்மமான நுண்ணுயிர்கள் என அண்டார்டிகா எப்போதுமே நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. சென்ற வருடம் இதே அண்டார்டிகாவில்தான் உலகின் மிகப்பெரிய பனிப் பள்ளத்தாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு செயற்கைக்கோள் அளவீடுகள் மற்றும் சக்தி வாய்ந்த ரேடார் நுட்பங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த எரிமலைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆச்சர்யம் என்னவென்றால் இம்மலையில் அனைத்தும் எவ்வகை பனி அரிப்பிலும் சிக்காமல் கூம்பு வடிவ மலையாகவே இருக்கின்றன. எனவே, இது மிகவும் இளமையான ஒன்று, அதுவும் மிகச் சமீபத்தில் உருவான ஒன்றுதான் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நமக்கு ஆபத்து வருமா?

எரிமலைகளைக் கண்டுபிடித்த அதிர்ச்சியில் இருந்தாலும், இன்னொரு விஷயத்துக்காகத்தான் அதிகம் கவலை கொள்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அது, இந்த எரிமலைகளில் எத்தனை உயிருடன் இருக்கின்றன என்ற விஷயம்தான்.  இதை எப்படிக் கண்டுபிடிப்பது எனத் தெரியாமல் முழிக்கிறது ஆராய்ச்சிக் குழு. ஏனென்றால், இந்த எரிமலைத் தொடர் நம்பமுடியாத வேறுபாடுகளைக் கொண்ட ஒன்றாய் இருக்கிறது. சிறியது முதல் 3850 மீட்டர்கள் உயரம் வரை வேறுபட்டு நிற்கின்றன. இதில் அந்தப் பெரிய எரிமலை, கிட்டத்தட்ட டோக்கியோவில் இருக்கும் ஃபுஜி எரிமலையின் அளவுக்கு இருக்கிறதாம். கிழக்கு ஆப்பிரிக்க பிளவு அளவுக்கு அண்டார்டிகாவிலும் இந்தப் பெரிய எரிமலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சந்தேகமில்லாமல் ஒரு மைல்கல் கண்டுபிடிப்புதான் என்றாலும், அச்சுறுத்தும் தன்மையுடையதுதான் என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

மனிதனின் தவறுகளால் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெப்பநிலை, பூமியை மிகவும் சோதித்துக்கொண்டிருக்கும் தருணம் இது. பாரம்பர்ய பவளப்பாறைகளே நீரின் அதிக வெப்பத்தால் அழிந்து வரும் நிலையில், அண்டார்டிக்காவிலும் ஆங்காங்கே பனிக்கட்டிகள் மற்றும் அதனால் உருவான நில அமைப்புகள் உருகி வருகின்றன. இதனால், இந்தத் தொடர் எரிமலைகள் மேலிருக்கும் பனிப் போர்வைகள் உருகும் பட்சத்தில் பெரும்பாலான எரிமலைகள் வெடிக்கக் கூடும். இதனால் பெருமளவில் கடல் சீற்றம் ஏற்படலாம் என்று கணித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். பனிப் போர்வை விலகும்போது, உறங்கும் எரிமலையின் உள்ளே இருக்கும் நெருப்புக் குழம்பு பல்வேறு வாயுக்களால் ஆன நெருப்பு குமிழிகளை உருவாக்கும். இது எரிமலையை மூடியிருக்கும் பாறைகளை சிதைத்து விடக் கூடிய திறன் படைத்ததாய் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.Trending Articles

Sponsored