ஆகஸ்ட் '30' ஐ எதிர்பார்த்து மே '17'... திருமுருகன் விவகாரத்தில் திருப்பம் இருக்குமா?!Sponsoredபோராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் வீரச்செறிவுமிக்க நீதிமன்றப் பேச்சுதான் நம் நினைவுக்கு வருகிறது. "கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒருநாள் கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்" என்று நீதிபதி முன்னிலையில் அவர் பேசுவார். ஃபிடல் காஸ்ட்ரோ உரையைப் போன்ற சூழல்தான் தற்போது தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது.

"தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்குப் பின்னர் நடைபெற்ற விசாரணை என்ன ஆனது?", "தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணை என்னவானது?", "எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் நடந்த சோதனையின் விசாரணை என்ன ஆனது?" "இரட்டை இலை சின்னத்தைப் தங்கள் அணிக்குப் பெறுவதற்காக பேரம்பேசி தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் தற்போதைய நிலை என்ன?" 

Sponsored


இப்படி பல வழக்குகளின் விசாரணை எந்த நிலையில் உள்ளது? தமிழக அரசுக்கும், நீதித்துறைக்கும் இதுபோன்ற ஏராளமான கேள்விகள் இருக்கும் நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது, உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் கூடியதற்காக 'மே 17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை கடந்த மே மாதம் 21-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில், அவர்கள் மீதான வழக்குகளே, அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கக் காரணம் என தமிழக போலீஸ் தெரிவித்துள்ளது.

Sponsored


திருமுருகன் காந்தி மீது போட்டுள்ள ஆறு வழக்குகளில் ஒரு வழக்கில்கூட, காவல்துறை தரப்பிலிருந்து இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. "முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது சட்டவிதி. ஆனால், திருமுருகன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்துமே 100 நாட்களைக் கடந்தவை. அப்படி இருக்கையில் அவருக்கு எதிராக எப்படி குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க முடியும்?"என்று மே 17 இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு காவல்துறையிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் அறிவுரை குழுமத்திலும் இதுதொடர்பான விரிவான விவாதங்கள் நடந்தன. திருமுருகன் காந்தி தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், இந்த வாதங்களை எல்லாம் விசாரணை அதிகாரிகள் கேட்டுக் கொண்டார்களே தவிர, அவர் மீதான குண்டர் சட்டத்தை இன்னும்  விலக்கிக் கொள்ளவில்லை.

இப்படியான சூழலில், திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் இரண்டில் பெயில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லேனா குமார். மேலும் அவர் கூறுகையில், "திருமுருகன் மீதான ஆறு வழக்குகளில் இரண்டு வழக்குளில் பெயில் கிடைத்துள்ளது. மெரினாவில் நினைவஞ்சலி நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வந்தது. அந்த வழக்கிலும் பெயில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. அறிவுரை குழுமத்தில் நடந்த விவாதத்தின்போது, குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்காக பொய்யான தகவல்களை போலீஸ் எவ்வாறுஉருவாக்கியது என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை முன்வைத்தோம். எங்களுடைய வாதங்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்ட போதிலும் குண்டர் சட்டத்தை விலக்கவில்லை.

குண்டர் சட்டத்தில் அவரைக் கைது செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும் 30-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.இதுவே, இறுதி விசாரணை என்பதால் குண்டர் சட்டத்தை விலக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, திருமுருகன் காந்தி, பிணையில் வருவதற்கு 90 சதவிகித வாய்ப்புகள் உள்ளன. குண்டர் சட்டத்தின்கீழ்  அவரைக் கைதுசெய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாதநிலையில், அரசாங்கத்திற்கு எதிராகப் போராடியவர் என்பதால் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக போலீஸார் அவரைக் கைது செய்தனர். ஒருவேளை குண்டர்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், கடைசிநேரத்தில் அரசுத் தரப்பில் என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

மீண்டும் அந்தப் போராளியின் வீரமிகு பேச்சையே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. " நீ என்ன என்னை விடுதலை செய்வது? உண்மை ஒருநாள் என்னை விடுதலை செய்யும். வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் உரையே இன்றைய போராளிகளுக்கு வலிமை சேர்க்கும் என்பது நிதர்சனமான உண்மை!  Trending Articles

Sponsored