“அணிகளை இணைக்கவே விசாரணை கமிஷன் நாடகம்” - நாஞ்சில் சம்பத்! #AIADMKMergerSponsoredமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்து, ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில் அ.தி.மு.க-வில் பங்காளிச் சண்டை   இப்போதுவரை ஓய்ந்தபாடில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்து இரண்டாக இயங்கிய அ.தி.மு.க. அண்மைக்காலமாக மூன்று பிரிவுகளானது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சசிகலா தரப்பினர் முயல்கிறார்கள் என்றுகூறி தனியாகப் பிரிந்து சென்றார் ஓ.பன்னீர்செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் அமர வைத்துவிட்டு, பெங்களுரு சிறைக்குச் சென்றார் சசிகலா. இந்நிலையில், சிறையில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற, தினகரனை வைத்து சசிகலா முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவித்தது எடப்பாடி தரப்பு.

அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைப்புக்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கியிருந்தாலும், அதில் இருதரப்பும் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவி வழங்கியது, மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா பொதுக்கூட்ட பரபரப்பு என தினகரன் வேகமாக இயங்கத் தொடங்கினார். இதையடுத்து விழித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர்செல்வமும் அணிகள் இணைப்பை மீண்டும் விரைவுபடுத்தத் தொடங்கினர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவும், ஜெ. வீட்டை நினைவு இல்லம் ஆக்கவும், எடப்பாடி உத்தரவிட்டார். இந்த கோரிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார். அரசியல் தலைவர்கள் பலரும் ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கக்கோரிய போதிலும் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இதுவரை அமைதிகாத்து வந்தார். 

Sponsored


Sponsored


இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, தற்போது விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டதற்கான காரணம் என்ன? இந்த அறிவிப்பு, அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான கண்துடைப்பா? இரு அணிகளும் இணைவது சாத்தியமா? போன்ற கேள்விகளோடு அ.தி.மு.க-வின் இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசினோம். 

டி.டி.வி. தினகரன் தரப்பைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்திடம் பேசியபோது, " 'வேதா இல்லத்தை நினைவிடம் ஆக்குவேன்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது, ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியே. 'டி.டி.வி. தினகரனை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம்' என ஏற்கெனவே தன்னிச்சையாக அறிவித்து அவர்கள் தவறு செய்துள்ளனர். இந்த நிலையில், பச்சைத்துரோகம் செய்த 'பன்னீர்செல்வம் விதித்த இரண்டு நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். பாருங்கள்' என்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி. இதன்மூலம் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவிற்கும், டி.டி.வி. தினகரனுக்கும் செக் வைத்திருப்பதாக அவர் நினைக்கிறார். ஆனால், எடப்பாடி நினைப்பது எதுவும் நடக்காது. தினகரன்தான் வெற்றி பெறுவார்" என்றார். 

மேலும் "இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?" என்று கேட்டபோது, "அணிகள் இணைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்துள்ளார். அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இருக்கிற சூழலை வைத்துப் பார்க்கும்போது, அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதுகிறேன்" என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

"எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளை டி.டி.வி தினகரன் தரப்பினர் எப்படிப் பார்க்கிறார்கள்?" என்று கேட்டதற்கு, "எடப்பாடி பழனிசாமி நன்றி மறந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து எடப்பாடியிடம் அவரின் மனசாட்சியே கேள்வி எழுப்பும். 'சிறைக்குச் செல்கிறோம்' என்ற எந்தக் கவலையும் இன்றி, கடைசி நிமிடத்தில் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வுசெய்து, 'பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சசிகலா கூறியதுடன், சட்டமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தி அதற்கான ஒப்புதலையும் பெற்றுத்தந்தவர் சின்னம்மா. அப்படிபட்டவருக்கு துரோகம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு மனம் வருகிறது என்றால், நன்றி மறந்தவர்களுக்கு என்ன தண்டனையை காலம் வழங்குமோ, அதுவே இவர்களுக்கும் கிடைக்கும் என்பது உண்மை" என்றார் நாஞ்சல் சம்பத்.  

தினகரன் அ.தி.மு.க. நிர்வாகி அல்ல!

'விசாரணை கமிஷன் என்பது கண்துடைப்பு நாடகம்' என்று டி.டி.வி. தினகரன் தரப்பு கூறுகையில், இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் என்ன சொல்கிறார்கள் என அறிந்து கொள்வதற்காக, அ.தி.மு.க. மூத்தத் தலைவர் மதுசூதனனை தொடர்பு கொண்டு பேசியபோது, “அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டவர் தினகரன். எனவே,அவருடைய தரப்பில் இருந்து, யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும், அதற்கு மதிப்பில்லை. தினகரனை கடைசிவரை அம்மா (ஜெயலலிதா), போயஸ்கார்டனுக்குள் சேர்க்கவில்லை. அப்படி இருக்கும்போது, அவர் எப்படி அ.தி.மு.க-வின் நிர்வாகியாக இருக்க முடியும்? சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியே தற்போது பிரச்னையில் உள்ளது. அப்படி இருக்கையில், அவர்களைப் பற்றிச்சொல்ல எதுவும் இல்லை" என்றார்.Trending Articles

Sponsored