கட்சி நிதி - ரூ.384.04 கோடிக்கு பான் கார்டு இல்லை... ரூ.355.08 கோடிக்கு முகவரியே இல்லை!Sponsoredஇந்திய அளவிலான 5 கட்சிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களிடமிருந்து அதிகபட்சமாக 705.81 கோடி ரூபாய் அளவுக்கு பாஜக கட்சிநிதியாகப் பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் 198.16 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. 

கடந்த நான்கு ஆண்டுகளாக கார்ப்பரேட்டுகள், வர்த்தக நிறுவனங்களிடமிருந்து அகில இந்திய கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்பட்டதைப் பற்றி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு - ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


கடந்த 2012-13 ஆண்டிலிருந்து 2015-16 ஆண்டுவரை தேர்தல் ஆணையத்தில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தலா ரூ.20 ஆயிரத்துக்கு மேல் அளிக்கப்படும் நன்கொடைகள் இந்த வகையில் வருகின்றன. இந்த காலகட்டத்தில் இப்படியான நன்கொடைகளைப் பெறவே இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளதால், அது கணக்கில் சேர்க்கப்படவில்லை. நான்கு ஆண்டுகளில் இக்கட்சிகளின் அறியப்பட்ட வருமானத்தில் 89% தொகை அதாவது 956.77 கோடி ரூபாயை வர்த்தக நிறுவனங்கள் நன்கொடையாக அளித்துள்ளன. 

Sponsored


அதிகபட்சமாக, அறக்கட்டளைகள் மற்றும் குழுமக் கம்பெனிகளின் பெயரில் 45.22% நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தித் தொழில்துறை தரப்பிலிருந்து 12.93 சதவீதமும் அதற்கு சற்றேக்குறைய 12.67 சதவீதமும் சுரங்கம்-கட்டுமானம் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி துறையிலிருந்து 9.11 சதவீதமும் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. 

ஐந்து கட்சிகளில் பாஜகவானது கார்ப்பரேட் தரப்பின் 2,987 பேரிடமிருந்து ரூ.705.81 கோடி பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் 167 கார்ரப்பரேட்டுகளிடமிருந்து 198.16 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி. 

தேசியவாத காங்கிரஸ் கட்சியானது 40 பேரிடமிருந்து 50.73 கோடி ரூபாயையும், சிபிஎம் கட்சியானது 45 பேரிடமிருந்து 1.89 கோடி ரூபாயையும் சிபிஐ கட்சியானது 17 பேரிடமிருந்து 18 இலட்சம் ரூபாயையும் கார்ப்பரேட் நன்கொடையாகப் பெற்றுள்ளது. 

கட்சிநிதி அளித்த கார்ப்பரேட்டுகளில் சத்யா தேர்தல் டிரஸ்ட் எனும் அமைப்பே அதிகமான நிதியை அளித்துள்ளது. மூன்று ஆண்டுகளீல் 35 முறை ரூ.260.87 கோடி ரூபாயை இந்த அமைப்பு வழங்கியுள்ளது. பாஜக 193.62 கோடி ரூபாயும் காங்கிரஸ் கட்சி 57.25 கோடி ரூபாயும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 கோடி ரூபாயும் சத்யா டிரஸ்ட்டிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளன. 

இரண்டாவதாக அதிக நிதி வழங்கிய கார்ப்பரேட் கொடையாளராக ஜெனரல் தேர்தல் டிரஸ்ட் இருக்கிறது. இந்த டிரஸ்ட்டானது பாஜகவுக்கு 70.7 கோடி ரூபாயையும் 54.1 கோடி ரூபாயையும் கொடுத்துள்ளது. 

சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு நிதி அளித்ததில் பணியாளர் சங்கங்களும் அமைப்புகளுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழு அமைப்புகளிடமிருந்து மொத்தமாக 1.09 கோடி ரூபாயை சிபிஎம் கட்சியும், 15 வேறுபட்ட அமைப்புகள், சங்கங்களிடமிருந்து 14.64 இலட்சம் ரூபாயை சிபிஐ கட்சியும் பெற்றுள்ளன. 

தேர்தல் விதிமுறைப்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒரே தொகையாகவோ கூட்டாகச் சேர்த்தோ 20 ஆயிரம் ரூபாய் நிதி அளித்தால், நிதியளித்தவரின் பான் அட்டை விவரங்களும் இணைக்கபடவேண்டும். அத்துடன் நன்கொடை வழங்கப்பட்ட நாள் விவரமும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் 24 ஏ படிவத்தில் கட்டாயம் சேர்க்கவேண்டும். ஆனால் 1,062 கார்ப்பரேட் நன்கொடையாளர்களின் பான் அட்டை விவரமும் முகவரியும் தரப்படவே இல்லை. பான் அட்டை விவரம் மட்டும் தராமல் 384.04 கோடி ரூபாயும் முகவரியே இல்லாமல் 355.08 கோடி ரூபாயும் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டுமே இல்லாமல் 159.67 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 சதவீதம் தொகை பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இணையத்தில் எந்த விவரமும் இல்லாது இருக்கும் 262 கார்ப்பரேட்டுகளிடமிருந்து 10.48 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது; அப்படி அவை குறித்த விவரம் இருந்தாலும் என்ன தொழில் செய்கிறது எனும் தெளிவான விவரம் ஒன்றும் இல்லை. இந்த வகையாக வந்த நிதியை அந்தந்த கட்சிகளுக்குத் திருப்பி அளித்து, அவை வந்த வழி குறித்து முடிவைத் தெரிவிக்கவும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு - ஏ.டி.ஆர். கருத்துத் தெரிவித்துள்ளது. 

படம் நன்றி : ADRTrending Articles

Sponsored