"கொலைவழக்கை கொலையாளிகளே விசாரிப்பதா?!" கொதிக்கும் இலங்கை எம்.பி-க்கள்Sponsored"இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே நடந்த இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை" என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன் கூறியிருக்கிறார். அவருடைய இந்தப்பேச்சு தமிழ் ஈழ ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஈழம் கோரி, விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த போரில் லட்சக்கணக்காண  தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2007-ம் ஆண்டு வரையிலான போரில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009-ம் ஆண்டில் நடந்த இறுதிக்கட்டப் போரில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது. போர் தொடர்பான விதிகளை மீறி, அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்த வீடியோ ஆதராங்களை சேனல் -4  தொலைக்காட்சி வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

Sponsored


இரண்டு ஆண்டுகாலம் அவகாசம் ஏன் ?

Sponsored


இலங்கை ராணுவம் நிகழ்த்திய இந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகங்கள் கண்டித்ததுடன், அதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், 'சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு இலங்கையில் நீதிவிசாரணை நடத்த வேண்டும்'. அதுமட்டுமன்றி, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. அந்தத் தீர்மானம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் தலையிட்ட இலங்கை அரசாங்கம், இரண்டு வருடம் அவகாசம் கேட்டது. இலங்கையின் இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய  நாடுகள் ஆதரவு தெரிவித்து விட்டன. .இரண்டு ஆண்டு கால அவகாசத்தைப் பெற்றுவிட்ட நிலையில், இலங்கை அரசு தற்போது மீண்டும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள திலக் மாரப்பன்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்,

"இலங்கையின் சட்ட விதிகளின்படி, போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச   நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. இதனை சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறியுள்ளோம். சர்வதேச சமூகமும் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளது" என்பதே அவர் தெரிவித்துள்ள கருத்தாகும். அவருடைய இந்தக் கருத்து, தமிழ் ஈழ உணர்வாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியள்ளது. 

 

கோர முகத்தைக் காட்டத் தெடங்கிவிட்டது 

இதுதொடர்பாக, இலங்கையில் உள்ள தமிழ் ஈழ அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்று சிலரைத் தொடர்பு கொண்டு பேசினோம். இலங்கை  நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறுகையில், "2015-ல் இந்த விவகாரம் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன் வந்தபோது,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அந்த தீர்மானத்தில், '54 நாடுகளைக் கொண்ட பொதுநல நாடுகளின் நீதிபதிகள், இதில் இடம் பெறுவார்கள்' என்று சொல்லப்பட்டது. அந்தத் தீர்மானமே எங்களுக்கு உடன்பாடு இல்லாத நிலையில், அதனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இருக்காது என்று கூறினோம். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, 'சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது' என்று அப்போதும் கூறி வந்தார். அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்னர் அமைதி காத்தார். இந்த நிலையில், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட திர்மானத்திற்கான காலஅவகாசம் முடிந்த நிலையில், மீண்டும் இரண்டு ஆண்டுகள் அவகாசத்தைப் போராடிப் பெற்றுவிட்டனர். இந்தநிலையில், மீண்டும் இலங்கை தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாகத்தான் 'சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது' என்ற கருத்தை இலங்கை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அவருடைய கருத்து கடும் கண்டனத்திற்குரியது. படுகொலையைச் செய்தவர்களே விசாரணை நடத்துவதை ஒருபோதும் ஏற்கமாட்டோம். கொலையைச் செய்த ஒருவரே, நீதிபதியாக நிற்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என்பதை சர்வதேச சமூகத்தின் முன்பு எடுத்துச் செல்வோம். நடந்த இனப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், சர்வதேச விசாரணை வேண்டும். செப்டம்பர் 11-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை ஜெனீவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மற்ற பிரதிநிதிகளையும் இதில் ஒருங்கிணைத்து ஒருகுழுவாக செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தைப் பயன்படுத்தி, இதுதொடர்பான பிரச்னையை  எழுப்புவோம். மேலும் மற்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி, இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்றார்.

 உலக நாடுகளிடம் பதில் சொல்லட்டும்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் பேசியபோது, "ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் கால அவகாசம் முடிந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் காலநீட்டிப்பை இலங்கை அரசு கோரியது. ஆனால், 'சர்வதேச  வீசாரணை தேவை' என கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அதன் பிறகே இலங்கைக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில், இதுபோன்றதொரு கருத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்தின் முன்பு ஏற்றுக்கொண்டுவிட்டு, தற்போது சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று சொல்வதற்கான காரணத்தை ஐ.நா.சபையின் முன்பும், உலக நாடுகளிடமும் தெரிவிக்க வேண்டிவரும் என்பதை இலங்கை அரசு மறந்துவிடக் கூடாது.

அதனால், சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து இலங்கை அரசு தப்ப முடியாது. ஒருவேளை அவ்வாறு தப்பமுயன்றால், அரசின் நடவடிக்கையை எதிர்த்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேசுவேன்" என்றார்.Trending Articles

Sponsored