“எவ்வளவோ போராடியும் பார்கவைக் காப்பாத்த முடியலயே!” - டெங்குவுக்கு பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோரின் கதறல்Sponsoredஅந்த வீட்டை கனத்த சோகமும், ஆழ்ந்த மௌனமும் சூழ்ந்திருக்கிறது. ஈரம் காயாத மலர்களைக் கொண்ட மாலையால் நிறைந்திருக்கும் பார்கவின் படத்திற்கு முன்னால், அவனுக்குப் பிடித்த இனிப்புகளைப் படைத்திருக்கிறார்கள். வெங்கடேஷூக்கும், லட்சுமிக்கும் அழுது அழுது கண்கள் வற்றி விட்டன. பார்கவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள்.

வெங்கடேஷ், ஏ.சி மெக்கானிக். அம்மா லட்சுமி இல்லத்தரசி. பார்கவ், சென்னையின் பிரதான பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த வாரம்வரை இனிக்க இனிக்க மழலை பேசி, ஓடியாடி, சிறகடித்துத் திரிந்த பார்கவ் இன்று, இல்லை. கொள்ளை நோயாக தமிழகமெங்கும் பரவி வதைக்கும் டெங்கு, அவன் உயிரைக் குடித்து விட்டது. 

Sponsored


பார்கவின் இழப்பை உணரக்கூட முடியாமல் குலைந்து போய் கிடக்கிறது குடும்பம்.  

Sponsored


“பார்கவ் தெய்வக்குழந்தைங்க... எப்பவும் துருதுருன்னு இருப்பான். இந்த வயசுலயே அவ்வளவு அறிவு. அவன் இல்லேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கமுடியலே.." - கண்ணீரில் ததும்புகிறது வெங்கடேஷின் வார்த்தைகள். ஆறுதல் சொல்ல யாரிடமும் வார்த்தைகளே இல்லை.

“7-ம் தேதி சாயங்காலம் எப்போதும்போல வீட்டுக்கு வந்தான் பார்கவ். லேசா காய்ச்சல் இருந்துச்சு.. எல்லாப் பக்கமும் காய்ச்சல் பரவிக்கிட்டிருக்கிறதால உடனடியா, பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். 'சாதாரண காய்ச்சல்தான், ரெண்டு நாள்ல சரியாகிடும்... அதுக்கு மேல இருந்தா வாங்க'ன்னு சொல்லி மாத்திரை கொடுத்து அனுப்பினாங்க. ஆனா, மூணு நாள் வரைக்கும் காய்ச்சல் விடலே. குறிப்பிட்ட இடைவெளியில விட்டுவிட்டு காய்ச்சல் அடிச்சுச்சு. நாலாவது நாள் நுங்கம்பாக்கத்துல உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் காட்டினப்போ, டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு 'உங்க பையனுக்கு டெங்கு' ன்னு சொல்லி அட்மிட் பண்ணிகிட்டாங்க. அதுதான் நாங்க அவனைக் கடைசியா பக்கத்துல இருந்து பாத்தது. ரொம்ப மென்மையாப் பேசுனான். 'பயமா இருக்குப்பா'னான். "அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா..."ன்னு  தைரியம் கொடுத்தேன். அதுக்கப்புறம் அவன் பக்கத்துல கூட எங்களை விடலே. எப்பவாது தூரத்துல இருந்து பார்ப்போம்... புள்ள பட்ட அவஸ்தையை கண்ணால பார்க்க முடியலே..." - வெங்கடேஷ் கதறி அழுகிறார். அவரது அழுகை எல்லோரையும் விசும்ப வைக்கிறது. 

"அப்பவே அரசு மருத்துவமனைக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடலாம்ன்னு யோசிச்சோம். ஆனா, அந்த தனியார் மருத்துவமனையில ரொம்பவே நம்பிக்கை கொடுத்தாங்க. ‘உங்க பிள்ளைக்கு தீவிரமான டெங்கு காய்ச்சல்... ஆனா, பயப்படத் தேவையில்லை... 80 சதவீதம் காப்பாத்திடலாம்ன்னு உறுதியா சொன்னாங்க. பார்கவ் மாதிரியே நிறைய பிள்ளைகள் டெங்கு பாதிப்போட அங்கே இருந்தாங்க.  3 மாதக் குழந்தையெல்லாம் கூட வச்சிருந்தாங்க. "சரி... இவ்ளோ பிள்ளைங்க இருக்காங்களே'-ன்னு நம்பிக்கையா இருந்தோம்.  

ஒருகட்டத்துக்கு மேல, எங்களுக்கு நம்பிக்கை போயிடுச்சு. இனிமே இங்கே வச்சிருக்க வேண்டாம்ன்னு எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு தனியார்  மருத்துவமனையில சேர்த்தோம்.  தீவிர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டு போனாங்க. அதுக்கப்புறம்தான்  இது ரொம்ப தீவிரமான பாதிப்புன்னு எங்களுக்கு தெரிஞ்சுச்சு. 'குழந்தைக்கு ரொம்ப சீரியஸா இருக்கு... ஐ.என்.ஆர் லெவல் ரொம்பக் கம்மியாயிடுச்சு... செக் பண்ணிட்டுச் சொல்றோம்'ன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும், எல்லாத்தையும் கடந்து பார்கவ் பிழைச்சுடுவான்னு ரொம்ப நம்பினோம். கடைசியில இப்படி ஆகிடுச்சு..."

வெங்கடேஷ் சென்னை ஆயிரம்விளக்கு, குலாம் அப்பாஸ் அலிகான் தெருவில் வசிக்கிறார். சென்னையின் இதயப் பகுதி ஆயிரம் விளக்கு தான். ஆனால், அந்தத் தெருவே குப்பைமேடு மாதிரி இருக்கிறது. பார்கவின் இறப்புக்குப் பிறகு, அவசர அவசரமாக குப்பைகளை அள்ளி பிளீச்சிங் பவுடர் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் ஊழியர்கள். 'இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தபிறகும், 'தமிழகத்தில் டெங்குவே இல்லை, மர்மக் காய்ச்சல் தான்  இருக்கிறது' என்று சாதித்துக்கொண்டிருந்த தமிழக அரசு இப்போது தான் டெங்கு இருப்பதையே ஏற்றுக்கொண்டிருக்கிறது. 

அரசின் மெத்தனம் ஒரு பக்கம் என்றால், தனியார் மருத்துவமனைகள் இதுபோன்ற தொற்றுநோய்களை, சிறிதும் மனிதநேயம் இன்றி பணம் காய்க்கும் மரங்களாக கருதுவது இன்னும் பெரிய சோகம்.

துவண்டு கிடக்கும் பார்கவின் அம்மா லட்சுமி, மென்மையான குரலில் அந்தத் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.  

"பணம்தான் எல்லாருக்கும் பிரதானமா இருக்கு. எந்த ஆஸ்பத்திரியிலயும் பேருக்குக் கூட மனிதநேயம் இல்லை. ஒரு கட்டத்துல எங்களால போதிய அளவுக்குப் பணம் கட்ட முடியலே... அதனால அந்த மருத்துவமனை நிர்வாகம், டிரஸ்ட் மூலம் இலவசமா டிரீட்மெண்ட் கொடுக்கிறோம்ன்னு சொன்னாங்க. அதனால ரொம்பவே நம்பினோம். திடீர்ன்னு ஒருநாள் 'உங்க பிள்ளையோட உறுப்புகள் எல்லாம் செயல் இழந்துக்கிட்டிருக்கு... டயாலிசிஸ் செய்யனும்'ன்னு சொன்னாங்க... கொஞ்ச நேரத்துல, 'சி்றுநீரகம் செயல் இழந்திடுச்சு... மாற்று சிறுநீரகம் வேணும்'ன்னு சொன்னாங்க. 'என்னோட சிறுநீரகத்தை தர்றேன்'னு சொன்னேன். டெஸ்ட் எடுத்து பாத்துட்டு என்னோட சிறுநீரகம் ஒத்துப்போகலைன்னு சொல்லிட்டாங்க.  நாள் ஆக, ஆக பிள்ளையைக் கண்கொண்டு பார்க்க முடியலே... அப்படி மெலிஞ்சுட்டான்... கண், காதுல இருந்தெல்லாம் ரத்தம் கசிய ஆரம்பி்ச்சிடுச்சு.  தூரத்துல இருந்து பாத்து பதறுவோம்... 'ரத்தம் ஏத்தும் போது அழுத்தம் அதிகமாகி இப்படி வருது... பயப்படாதீங்க'ன்னு சொன்னாங்க. ஆனா, கடைசியா பிள்ளையை பிணமாத் தான் கொடுத்தாங்க.

அதிகாலை 3.15-க்கு பார்கவ் இறந்துட்டான். 52 ஆயிரம் உடனே கட்டுங்க... அப்போ தான் பாடி தருவோம்... பணம் கட்டுற வரைக்கும் மார்ச்சுவரியில வச்சிருப்போம். மார்ச்சுவரிக்கும் சேர்த்து பணம் கட்ட வேண்டியிருக்கும்ன்னு சொன்னாங்க. அங்கேயிங்கே கடனை வாங்கி பிள்ளை உடலை எடுத்துட்டு வந்தோம்..."- லட்சுமியால் பேசமுடியவில்லை.

பார்கவின் மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை 18 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறுகிறார் வெங்கடேஷ். சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனையில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் டெங்குக் காய்ச்சலுக்குப் பொருந்தாது என்று சொல்லி விட்டார்களாம். 

ஆயிரம் விளக்கு பக்கமாகப் போகும்போது, முதலமைச்சரோ, அமைச்சர்களோ பார்கவ் வீட்டுக்குப் போகலாம்... இழப்பீடாக சில லட்சங்களைத் தரலாம். ஆனால், அந்த லட்சங்களை வைத்து பார்கவை மீட்க முடியுமா? தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான பார்கவ்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு தவித்து வகுகிறார்கள். 'வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்' என்று பிரசாரம் செய்கிற அரசு, தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ளிச்செல்ல போதுமான ஊழியர்களை வைத்திருக்கிறதா? மருத்துவமனைகளில் போதிய மருந்துகளை வைத்திருக்கிறதா? அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி போதிய வசதிகளைச் செய்யாமல் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவித்து வளர்த்தெடுப்பது தான்  நல்லரசுக்கு அழகா? உட்காரக் கூட இடமின்றி அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் தான், வெங்கடேஷ் போன்ற நடுத்தரக் குடும்பத்துத் தந்தைகள் தங்கள் பிள்ளைகளை காசு போனால் போகட்டும் என்று பதறிப் பரிதவித்து தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அதையே சாக்காக வைத்து தனியார் மருத்துவமனைகள் உறிஞ்சுகின்றன.

தமிழகம் டெங்கு, மலேரியா என மிகப்பெரும் சுகாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. ஆட்சிக்கட்டில் நிலைக்குமா நிலைக்காதா என்ற கவலையை ஓரம்கட்டி விட்டு, முதலில் முதல்வரும் அமைச்சர்களும் வீதிக்கு வரவேண்டும்! வார்த்தை ஜாலங்களை  தூரப்போட்டுவிட்டு எதார்த்த நிலையை உணர்ந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும். 

எப்பாவமும் அறியாத 8 வயது பிஞ்சு  பார்கவின் மரணம் அரசின் மனட்சாட்சியை உலுக்கட்டும்! Trending Articles

Sponsored