டெங்குவைத் தொடர்ந்து தமிழகத்தை உலுக்கும் பன்றிக் காய்ச்சல்! - கலங்கடிக்கும் புள்ளிவிவரம் #SwineFluAlertSponsored`வேகமாகப் பரவும் டெங்குக் காய்ச்சல்’, `மர்மக் காய்ச்சலால் மரணம்’... என ஏற்கெனவே அச்சத்தில் உறைந்திருக்கும் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு பீதியைக் கிளப்பிவிட்டிருக்கிறது, சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு புள்ளிவிவரம். `இந்தியாவில் கடந்த ஒன்பது மாதங்களில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு’ என்கிறது அந்தப் புள்ளிவிவரம். டெங்கு, ஜிகா, மலேரியா, வைரஸ் காய்ச்சல் எனத் தொடர்ந்து ஜுர பீதியிலேயே இருக்கும் தமிழகத்துக்கு இது அடுத்த எச்சரிக்கை!

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. பன்றிக் காய்ச்சலால் கடந்த ஒன்பது மாதங்களில் இந்தியா முழுக்க 35,523 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 1,873 பேர் இறந்து போயிருக்கிறார்கள். கடந்த ஆண்டோடு (முதல் 9 மாதங்கள் கணக்கில்) ஒப்பிட்டால், பன்றிக் காய்ச்சலால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகம்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 மடங்கு அதிகமாகியிருக்கிறது. இந்த ஆண்டு (2017) பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது குஜராத். இங்கே 7,300 பேரும், இரண்டாவதாக, மகாராஷ்டிராவில் 5,388 பேரும், மூன்றாவதாக, உத்தரப் பிரதேசத்தில் 3,782 பேரும், நான்காவதாக, தமிழ்நாட்டில் 3,173 பேரும், ஐந்தாவதாக கர்நாடகாவில் 3,141 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் 595 பேரும், குஜராத்தில் 428 பேரும், ராஜஸ்தானில் 202 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 122 பேரும், தமிழ்நாட்டில் 16 பேரும், தெலங்கானாவில் 18 பேரும், ஆந்திராவில் 14 பேரும், கர்நாடகாவில் 15 பேரும் பன்றிக் காய்ச்சலால் பலியாகியிருக்கிறார்கள்.

Sponsored


`ஹெச்.1.என்.1 (H1N1) என்னும் வைரஸ் தாக்குவதால் ஏற்படுவது பன்றிக் காய்ச்சல். சாதாரண காய்ச்சல், இருமல், சளி, தொண்டை கரகரப்பு, உடல்வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண அறிகுறிகளே இதிலும் தெரியும். ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றத்தால் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும். இதைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும் சிகிச்சை செய்யும் அளவுக்குப் போகாமல், வருமுன் காப்பதே சிறந்த தீர்வு’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

Sponsored


பன்றிக் காய்ச்சலுக்குப் பரவுவதற்கு என்ன காரணம்?

இப்போதெல்லாம் சாதாரண வைரஸ் காய்ச்சல் தொடங்கி, டெங்கு வரை வேகமாகப் பரவுவதும், அதன் தாக்கமும் அதிகமாக இருக்கின்றன. அது குறித்தும் பன்றிக் காய்ச்சல் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் சித்த மருத்துவர் உலகநாதன். 

``தரமற்ற உணவுகள், சுகாதாரமற்ற சுற்றுபுறச்சூழல் மற்றும் மாசடைந்த தண்ணீர் இவையே நோய்கள் பரவுவதற்கு மிக முக்கியக் காரணங்கள். ருசித்துச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இனிப்பூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள்... என ரசாயனங்கள் நிறைந்த உணவையே இன்று அதிகமாகச் சாப்பிடுகிறோம். இப்படி ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடுகிறது. இது பல நோய்களுக்கு வழிவகுக்கும். நம் தெருவில், நாம் வசிக்கும் இடத்தில், நாம் தினமும் கடந்துசெல்லும் சாலையில் உள்ள குப்பைகளின் மூலம் பரவும் நோய்க் கிருமிகளே அதிகம். சுத்தம் செய்யப்படாத இடத்தையே நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். அடுத்ததாக நீர். இன்றைக்கு நமக்கு ஏற்படும் நோய்களின் மிக முக்கியக் காரணி, நோய்க் கிருமிகள் எளிதில் பரவ உதவும் ஓர் ஊடகம் என்றால் அது நீர்தான். நீரால் பரவும் நோய்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. நோய்க் கிருமிகள் அதிகமாகப் பரவும் நீரை நாம் பயன்படுத்தும்விதம் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. உடலுக்கு வெளியே பயன்படுத்தும் நீரும், உள்ளுக்குள் உட்கொள்ளும் தண்ணீரும் சுத்தமானதாக இருக்க வேண்டும். இந்த மூன்று முக்கியக் காரணங்களால்தாம் இப்போது நோய்த் தாக்குதலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. மக்களிடம் நோய்களிடமிருந்து வருமுன் காப்பது குறித்த விழிப்புஉணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும்’’ ஆதங்கத்தோடு பேசுகிறார் உலகநாதன்.

பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு, பரவும் முறை மற்றும் சிகிச்சை குறித்து பொது மருத்துவர் சிவராமகண்ணனிடம் பேசினோம்.

``பொதுவாகவே, வடஇந்தியாவில் இந்த நோய்க் கிருமிகள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மக்கள்தொகை, சுற்றுபுறச்சூழல், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் போன்றவையே நோய்கள் பரவுவதற்கான முக்கியக் காரணங்கள். கடந்த 2009-ம் ஆண்டு இருந்ததைவிட கடந்த ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது மாறிவரும் தட்பவெப்பநிலை மாற்றத்தால் மீண்டும் நோய்க் கிருமிகளின் தாக்குதல் தலைதூக்கியிருக்கிறது’’ என்கிறார் சிவராமகண்ணன். மேலும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள், பரவும் முறை, யாருக்குப் பாதிப்பு ஏற்படலாம், சிகிச்சை, தடுக்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார்..

அறிகுறிகள்...

* சாதாரணக் காய்ச்சல்

* இருமல்

* உடல்வலி

* வாந்தி

* உடல் சோர்வு

* சளி

* தொண்டையில் பிரச்னை

* தலைவலி

* வயிற்று உபாதைகள்... போன்ற சாதாரண அறிகுறிகளே தென்படும்.

பன்றிக் காய்ச்சல் யாருக்கு வரலாம்?

* நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள்

* ஆஸ்துமா நோயாளிகள்

* மது மற்றும் புகைப் பழக்கம் உள்ளவர்கள்

* 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்

* வயதானவர்கள்

* கர்ப்பிணிகள்

* நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள்

* இதயம், நுரையீரல், சிறுநீரகம், ரத்தம், நரம்பு மண்டலம் போன்றவற்றில் பாதிப்பு உள்ள பதின்பருவத்தினர்

* வளர்சிதை மாற்றப் பிரச்னை உள்ளவர்கள்

ஆகியோருக்கு பன்றிக் காய்ச்சலின் பாதிப்புகள் எளிதில் ஏற்படும்.

சிகிச்சை

சாதாரண அறிகுறிகளுடன் இந்த நோய்த்தொற்று அதிகரிக்கும். சாதாரணக் காய்ச்சல் என்று அலட்சியமாக இருப்பது மிகவும் தவறு. காய்ச்சலைக் குணப்படுத்திக்கொள்வதற்காக சுயமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், நோய் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து பூரணமாகக் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவேண்டியது அவசியம். பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முதல் இரண்டு நாள்களில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொண்டால் நோய்ப் பாதிப்பிலிருந்து எளிதில் குணமடையலாம். சிகிச்சை தாமதமாகும்பட்சத்தில் விளைவுகளும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளே காய்ச்சல் முற்றுவதற்குக் காரணமாகவும் அமைந்துவிடும்.

பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க...

* மற்றவருடன் கைகுலுக்கிய பின்னர், உணவு உண்பதற்கு முன்னரும் பின்னரும், மலம் கழித்த பின்னர் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

* கைகளைக் கழுவாமல் கண்களைக் கசக்குதல், மூக்கு, வாய் ஆகியவற்றைத் தொடக் கூடாது.

* பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து சற்றுத் தள்ளியிருக்கலாம். பாதிக்கப்பட்டவரின் அருகில் செல்லும்போது தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

* தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆறிய பின் பருக வேண்டும்.

* நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய துணிகள், பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* பன்றிக் காய்ச்சல் பரவும் காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.Trending Articles

Sponsored