`ஸ்பைடர்’ வில்லனின் சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்... யாருக்கு வரும்? #SadisticPersonalityDisorder #SPD #SpyderSponsoredசிறுவயதில் நமக்கு நடக்கும் சம்பவங்கள், நாம் சந்திக்கும் மனிதர்களோடான உறவுகள், வளரும் சூழ்நிலை, நம் விருப்பம் இவையெல்லாம்தாம் நாம் எந்த ஆளுமையாக மாறவிருக்கிறோமோ அதற்கு உதவும் காரணிகள். நடிப்பு, விளையாட்டு, வணிகம், இலக்கியம்... என ஏதோ ஒரு துறையை நோக்கி நம்மை நகர்த்தும் உந்து சக்தியும் இவைதான். ஆக, சிறுவயது அனுபவங்களே நம்முடைய ஆளுமைக்குப் படிக்கற்களாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் `ஸ்பைடர்.’ இதில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு `சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்' என்னும் மனநோய் பாதிப்பு இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தன் இளம் பருவத்தை சுடுகாட்டிலேயே ஒரு சிறுவன் கழிப்பதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அழுகையை உணர்ச்சியின் வெளிப்பாடாகப் பார்க்காமல், தன்னுடைய தந்தையின் வருமானமாகக் கருதுகிறான். தந்தையின் வருமானம்தான் தன் குடும்ப உறவுகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்கிறான். தந்தையின் வேலைக்கும் மற்றவர்களின் உணர்ச்சிக்கும் உள்ள தொடர்பு என்ன... அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை அறியாமலேயே வளர்கிறது அந்தப் பிஞ்சுக் குழந்தை.

Sponsored


ஊருக்குள் இறப்புகள் குறைந்துபோனதால், அந்தக் குடும்பத்துக்குப் பொருளாதாரச் சிக்கல் ஏற்படுகிறது. தந்தையின் வேலைக்குத் தடையாக இருக்கும் அந்தச் சூழலைச் சரிசெய்ய பிஞ்சுக் குழந்தை முடிவு செய்கிறது. அதற்காகக் கொலை செய்யவும் துணிகிறது. அதன் மூலமாகத் தன் தந்தைக்கு வருமானம் கிடைக்கும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க, தன் குழந்தையால் நிகழ்ந்த சம்பவத்தை அறிந்தும், அது தவறு எனச் சுட்டிக்காட்டாமல் விட்டுவிடுகிறார் தந்தை. இவையே அந்தக் குழந்தையின் அடுத்தடுத்த கொடூர நிகழ்வுகளுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. இதனால், சமூகத்தைப் பற்றிக் கவலைகொள்ளாத ஒரு மனநிலை. ஒருநாள் உண்மை சமூகத்துக்குத் தெரியவரும்போது சமூகம் தன்னை எதிர்ப்பதால் தன் குடும்பத்துக்கு நிகழும் துயரம்; புரிதலின்மையாலும் துயரத்தாலும் ஏற்படும் மனஉளைச்சல், மனப் பாதிப்பு; நாளடைவில் அந்த மனநிலை மற்றவர்களைத் துன்புறுத்தி அவர்களின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியடையும் மனநோயாக மாறுகிறது. இதுபோன்ற மனம் சார்ந்த உணர்ச்சிகளை மையமாகக்கொண்டே `ஸ்பைடர்' படத்தின் கதை நகர்கிறது.

Sponsored


மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு மகிழ்வது ஒரு மனநோயா... இது எப்படிப்பட்ட மனநோய்... எதனால் ஏற்படுகிறது... இது உருவாவதற்கான காரணங்கள் என்னென்ன... எப்படிச் சரிசெய்வது என்பதையெல்லாம் பற்றி மனநல மருத்துவர் அசோகனிடம் கேட்டோம்.

``மகிழ்ச்சி, ஏக்கம், சந்தேகம், கோபம், கவலை... இதுபோன்ற அனைத்து உணர்ச்சிகளும் எல்லோரிடமும் குறிப்பிட்ட அளவு இருக்கும்.ஒரு செயல், நமக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தின்போது, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி மட்டும் அதிகரிக்கும்போது, அது மற்றொரு பெர்சனாலிட்டியாக மாறும். அந்தக் குறிப்பிட்ட உணர்ச்சியின் தன்மை நீடிக்கும்போது பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்களாக உருவெடுக்கும்.

சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் (Sadistic Personality Disorder)

`சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி’ என்பது கிரேக்கப் புதினங்களில் உள்ள கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு. அடுத்தவர்களைத் துன்புறுத்தி, அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தும், துன்பப்படுவதைப் பார்த்தும், இறக்கும் நிலையில் உள்ளவர்களைப் பார்த்தும் மிகுந்த மகிழ்ச்சியடையும் ஒருவகை குணம். மற்றவர்களைத் துன்புறுத்தி அதனால் அவர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகளைக் கண்டு இன்பப்படுவதே `சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்' எனும் மனநோய். இது ஓர் ஆளுமையின் மாறுபட்ட கோணம். மற்றவர்களை அசௌகர்யமான ஒரு நிலைக்குத் தள்ளி அல்லது துன்பப்படும் நிலைக்கு ஆளாக்கி அதைக் கண்டு மகிழ்ச்சியடைவது. அத்துடன் மற்றவர்களின் பொருள்களை ஆக்கிரமிப்பது, பிறரிடம்இரக்கமின்றி கொடூரமாக நடந்துகொள்வது போன்றவையே சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டருக்கான முக்கியமான நடத்தைகள்.

சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை!

மிகவும் பதற்றம் நிறைந்த கோபத்துடன் மற்றவர்மீது எரிந்துவிழுதல், வக்கிரமான சிந்தனை, செய்யும் செயல்களில் இரக்கமற்றத் தன்மை, சூழ்ச்சி செய்யும் சுபாவம் இதெல்லாம் இருக்கும். எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம், எந்தச் செயலிலும் ஒழுக்கமின்மை ஆகியவையும் இருக்கும். தான் செய்யும் செயல்களால் மற்றவர்கள் துன்பப்பட வேண்டும் என நினைப்பார்கள். அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள். அதோடு அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும் முரட்டுத்தனமாகவே இருக்கும்.

மனநோய்க்குக் காரணம்!

இதுபோன்ற மனநோய் ஏற்பட மிக முக்கியக் காரணம் சமூகம், சமூக எதிர்பார்ப்புகள், ஒவ்வாமை, சமுதாய மாற்றம், மனிதநேயமற்ற செயல்களைத் தொடர்ந்து பார்ப்பது மற்றும் மற்றவர்களைத் துன்புறுத்த வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுவது... போன்றவை.

இந்தப் பிரச்னைக்கு ஆளானவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?

`ஸ்பைடர்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் 'இந்த டிஸ்ஆர்டர் அனைவருக்கும் இருக்கும்' என்று பதிவாகியிருக்கும். அது உண்மையே. சாதாரண மனிதர் ஒருவர் மற்றவரைத் துன்பப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று எந்தச் செயல்களையும் செய்வதில்லை. ஆனால், அனைவருக்கும் சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி என்பது ஆழ்மனதுக்குள் பதிந்து இருக்கும். இந்த மனநிலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. இந்த டிஸ்ஆர்டர் நம்முடைய வாழ்க்கை முழுக்க நிறைந்திருக்கும். நமக்குப் பிடிக்காதவர்கள், நமக்குச் சாதகமாக இல்லாதவர்கள்மீது நாம் சாடிஸ்டிக் பெர்சனாலிட்டியை வெளிப்படுத்துவோம். இதனால், வக்கிர புத்தியுடன் கூடிய ஒரு திருப்தி நம் மனதுக்குக் கிடைக்கும். ஆனால், நாம் அதை வெளிப்படுத்தும் தன்மையின் அளவு குறைவாக இருக்கும். இதன் அளவு அதிகரிக்கும்போதுதான் அது நோயாக மாறுகிறது.

உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால்,

* பேருந்தில் சென்றுகொண்டிருப்போம். சாலையில் ஒரு விபத்தைப் பார்த்திருப்போம். அந்த விபத்தில் யாருக்கும் அடிபடாமல் இருந்தால் 'நல்லவேளை யாருக்கும் அடிபடல' என்று வாய் வார்த்தையாக நாம் கூறுவோமே தவிர, `இவ்வளவு பெரிய விபத்திலும் யாருக்குமே பாதிப்பு ஏற்படவில்லையே' என்ற ஒரு சிறு ஏமாற்றம் மனதில் தோன்றும்.

* நமக்குப் பிடித்தவர், பிடிக்காதவர் என யாராகவும் இருக்கட்டும். அவர் தடுக்கியோ, தடுமாறியோ திடீரெனக் கீழே விழுகிறார். உடனே நம் இதழோரம் சிறு புன்முறுவல் எட்டிப் பார்க்கும். சூழ்நிலை காரணமாகவும், சுற்றி மற்றவர்கள் இருக்கிறார்களே என்பதாலும், அந்தப் புன்முறுவல் நம்மைவிட்டு அகன்றுவிடும்.

* நமக்குப் பிடித்தவர்களை அல்லது நம்முடன் இருப்பவர்களை சிறுசிறு துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல். உதாரணமாக அடித்தல், ஒரு பொருளுக்காக அல்லது ஒரு செயலுக்காக கெஞ்சவைத்தல், விளையாட்டுக்காக அழவைத்தல் போன்றவை.

* சிலர் ஆக்ரோஷமாகவும், எதிர்ப் பாலினத்தை துன்புறுத்தியும், கஷ்டப்படுத்தியும், காயங்களை ஏற்படுத்தும் வகையிலும் உடலுறவு கொள்வது.

குழந்தை வளர்ப்பிலிருந்தே சரிசெய்யலாம்!

* பெற்றோர் தங்களுக்கான மகிழ்ச்சி, கவலை போன்றவை எதனால் நடக்கின்றன என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லாமல் இருப்பது நல்லது.

* தன் குடும்பத்துக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது இந்த நிகழ்வுதான் என்பதை வளரும் குழந்தைகளுக்குப் பெற்றோர் புரியவைப்பது மிகவும் அவசியம்.

* சமூகத்தில் நிகழும் சம்பவங்களுக்கு, `இதுதான் காரணம்’ என்று ஒரு சார்பினருக்கு மட்டும் சாதகமாகச் சொல்லாமல், அனைவருக்கும் பொதுவான ஒரு கருத்தை தெளிவாகக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும்.

* வளரும் குழந்தைகளின் செயல்களில் தவறுகள் இருந்தால், அவற்றைச் சுட்டிக்காட்டுவதுடன் அதைச் சரிசெய்யவும் முற்படவேண்டும். இது அவர்களின் எதிர்கால வாழ்வை இனிமையாக மாற்றும்.Trending Articles

Sponsored