தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வருமா? - ஓர் அலசல்! #Dengue



'டகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. வெள்ளம் வந்து பின்னால் அவதிப்படுவதைவிட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும் என்று கோரி அண்மையில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதோடு கூடவே, 'டெங்கு காய்ச்சலால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு இல்லை. எனவே, சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவர்கள் மறுக்கிறார்கள்' என்று கூறியிருந்தார். 

Sponsored


இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது. 'முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏன் டெங்கு காய்ச்சல் சேர்க்கப்படவில்லை' என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் சராமரியாகக் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. 

Sponsored


இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், "தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், சென்னையில் உள்ள கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆகியவற்றைச் சுத்தப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும். குப்பைகளை அப்புறப்படுத்தவும் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றியும் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு வரும் 12- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Sponsored


"டெங்கு காய்ச்சல் மிகப்பெரும் கொள்ளைநோயாக மக்களை வதைத்தெடுத்து வரும் நிலையில், அதை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காதது ஏன்?"

தமிழ்நாடு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் கேட்டோம். 

"டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராது என்று சொல்வது தவறான கருத்து. காய்ச்சல் முற்றிய நிலையை நாம் 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' (dengue shock syndrome) என்று சொல்கிறோம். காப்பீட்டுத் திட்டத்தில் கீழ் சிகிச்சையளிக்கப்படும் நோய் பட்டியலில் அது இருக்கிறது. எந்தத் தனியார் மருத்துவமனையாவது 'சிகிச்சை அளிக்க முடியாது' என்று சொன்னால், 104 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ..." என்றார் அவர். 

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்துக்கென்று தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் தனியார் மருத்துவமனையின் பட்டியல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தனியார் மருத்துவமனைக்கும் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மொபைல் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

நாம் சில மொபைல் எண்களில் தொடர்புகொண்டு பேசினோம். ஜி.என்.செட்டி சாலையில், பிரபல இயக்குநர் ஒருவரின் பெயரில் உள்ள  மருத்துவமனையின் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரதிநிதியைத் தொடர்புகொண்டோம்.

அந்த உரையாடல்... 

நாம்: மேடம், என்னோட குழந்தைக்கு டெங்குக் காய்ச்சல். என்னிடம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு கார்டு இருக்கிறது. உங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாமா?

பிரதிநிதி: இல்லை சார். இங்கே பார்க்க முடியாது. டெங்குக் காய்ச்சலுக்கு இந்த மருத்துவமனையில் காப்பீடு இல்லை.

நாம்: மேடம், சுகாதாரத்துறை அமைச்சரே சொல்லி இருக்கிறாரே, முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறாரே.

பிரதிநிதி: சார், எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். வேண்டுமானால், அந்த மருத்துவமனையின் இன்ஸு ரன்ஸ் பிரிவைத் தொடர்பு கொண்டு கேளுங்கள்.

இன்ஸுரன்ஸ் பிரிவைத் தொடர்புகொண்டோம்.  

“நாங்கள் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம். ஆபரேஷன் போன்ற சர்ஜரிகளுக்கு மட்டும்தான் காப்பீடு” என்றனர். "அமைச்சர் சொல்லி இருக்கிறாரே" என்று கேட்டோம், “சாரி சார், நாங்கள் டெங்குவுக்கு, இந்தக் காப்பீடு திட்டத்தில் லிங்க் செய்யவில்லை” என்று முடித்துக்கொண்டார்கள்..

மேலும் சில மருத்துவமனைகளில் தொடர்புகொண்டபோதும் இதே பதில்தான் நமக்குக் கிடைத்தது. மேற்கு மாம்பலத்தில், ஒரு டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனையில் மட்டும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் டெங்குவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்ஸுரன்ஸ் நிறுவனத்தின்கீழ் வருகிறது. காப்பீட்டுத் திட்டத்துக்கான பொது மேலாளர் சிவக்குமாரிடம் பேசினோம். முதலில், "டெங்கு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வராது" என்றவர். 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' பற்றிக் கேட்டதும், "அது உண்டு. அதற்குச் சிகிச்சை அளிக்கப்படும்" என்றார்.

ஏழை எளியவர்களுக்குத் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்கு அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தை தனியார் மருத்துவமனைகள் ஏற்கவில்லை எனும்போது பாதிக்கப்படும் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “டெங்குவில் சில வகைகள் இருக்கின்றன. தீவிரத் தன்மை கொண்ட டெங்குவால்தான் பாதிப்பு அதிகம். நீங்கள் சொல்லும் மருத்துவமனைகளில் அரசு சார்பில் பேசி நடவடிக்கை எடுக்கிறோம். சில மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டால், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டை ஏற்றுக் கொள்கிறார்கள். அனைத்துத் தனியார் மருத்துவமனைகளிலும் இந்தத் திட்டத்தை ஏற்கும்படி அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



Trending Articles

Sponsored