டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரை எப்படி, எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?- விளக்குகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்Sponsoredதமிழகத்தில் டெங்குவின் தாக்கமும், அதுபற்றிய பீதியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காய்ச்சல் வந்தாலே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அரசு ஒருபுறம் பிரசாரம் செய்ய, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவங்களில் டெங்குவுக்கு மருந்துகள் உள்ளன என்று இன்னொரு பக்கம் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. மேலும், டெங்கு வராமல் தடுக்க நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த தீர்வு என்று அரசும், இந்திய மருத்துவமுறை மருத்துவர்களும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், நிலவேம்புக் குடிநீரால் எந்தப் பயனும் இல்லை என்ற செய்தியும் சமூக ஊடகங்களில் பரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

டெங்கு காய்ச்சலைவிட, அதுகுறித்த பீதியும், வதந்திகளும், சர்ச்சைகளும் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவர் அலுவலர் சங்கம் சார்பில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. 

Sponsored


சித்த மருத்துவர் கு.சிவராமன்,  மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் பிச்சையாகுமார், இம்ப்காப்ஸ் தலைவர் டாக்டர் கண்ணன், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துக் கல்லூரி குழந்தைகள் நல உதவி பேராசிரியரும் டாக்டருமான ஶ்ரீராம், தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் செயலர் டாக்டர் தமிழ்க்கனி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். 

Sponsored


டெங்கு காய்ச்சல் பற்றியும், நிலவேம்புக் குடிநீர் பற்றியும் பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார், சித்த மருத்துவர் கு.சிவராமன்.

"நவீன மருத்துவம் தோன்றாத காலத்தில் பாரம்பர்ய மருத்துவத்தால்தான்  பல உயிர்க்கொல்லி  நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. சூரணம், லேகியம், கஷாயம் போன்ற வடிவில் பல அபூர்வ மருந்துகள் நம்மிடம் இருக்கின்றன. இன்று நவீன மருத்துவம், சிக்குன்குன்யா, டெங்கு என்றெல்லாம் காய்ச்சல்களுக்குப் பெயர் சூட்டி வைத்துள்ளது. அந்தக் காலத்திலும் காய்ச்சல்கள் இருந்தன. ஆனால், அப்படியான பெயர்கள் இல்லை. அத்தகைய விஷக் காய்ச்சல்களைக் குணப்படுத்த அக்காலத்தில் பயன்படுத்திய மருந்துதான் 'நிலவேம்புக் குடிநீர்'. 

சித்த மருத்துவத்தில் 64 வகை ஜுரங்களைப் பற்றியும் அதன் தன்மைகள் குறித்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள சில காய்ச்சல்களின் தன்மையுடன் தற்போதைய டெங்கு போன்ற வைரஸ் கிருமிகளால் பரவக் கூடிய காய்ச்சல்கள் ஒத்துப்போகின்றன.  அந்த அடிப்படையில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் சிறந்த மருந்தாக உள்ளது. 

குறிப்பாக 2006-ம் ஆண்டில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கு, தமிழக அரசு நிலவேம்பு குடிநீரைத் தான் மருந்தாக வழங்கியது. அதன்மூலம் அந்தக் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அறிவோம்.  அதன்பின் மாநில அரசின் கீழ் இயங்கும், கிங் ஆய்வகம் மேற்கொண்ட ஆய்வில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை நிலவேம்புக் குடிநீருக்கு உண்டு என்று உறுதி செய்யப்பட்டது. 

எனவே, டெங்கு மட்டுமல்லாது எந்தக் காய்ச்சலுக்கும் நிலவேம்புக் குடிநீர் குடிப்பது நல்ல தீர்வைத் தரும். அதே நேரத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் நிலவேம்பு குடிநீர் அருமருந்தாக உள்ளது. எனவே,  காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருமே நிலவேம்பு குடிநீரை குடிக்கலாம். மற்ற நோய்கள் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என அனைவரும் நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கலாம். 

நிலவேம்புக் குடிநீரை, சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல் கிரகித்துக் கொள்ளும். 

'நிலவேம்புக் குடிநீர்' என்பது வெறும் நிலவேம்பு இலையை மட்டும் பயன்படுத்தித் தயாரிப்பதில்லை. அது உண்மையில்லை.  நிலவேம்போடு, வெட்டிவேர், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு),  விலாமிச்சை வேர், சந்தனத்தூள், பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ),  பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர்.

எப்படிக் குடிக்க வேண்டும்?

நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். 

நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை குடிக்கலாம். இதில் குழந்தைகள் (3 - 12 வயதுக்குட்பட்டோர்) 15-30 மி.லி, பெரியவர்கள் 15 -50 மி.லி வரைக் குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம். அதேநேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப் படி மட்டுமே நிலவேம்புக் குடிநீரைக் குடிக்க வேண்டும். 

எப்போது ஆங்கில மருத்துவம் அவசியம்?

டெங்குவால் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை  குறையும் என்பதால் ஆடாதொடைச் சாறு 15 முதல் 30 மி.லி.யும், பப்பாளி இலைச்சாறு 10 -30 மி.லி. வரையும் குடிக்கலாம்.  இது ஆரம்ப நிலையில் அதாவது, ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறையாமல் இருக்கும்போது நல்ல பலன் அளிக்கும். அதுவே, மிகக் கடுமையாக குறைந்துவிட்டால், உடனடியாக நவீன மருத்துவத்தின் துணையைத் தான் நாடவேண்டும். ரத்தம் மூலம் ரத்த தட்டணுக்களை ஏற்றியாக வேண்டும். 

உடலின் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை  ஒன்றரை லட்சம் முதல் நான்கரை லட்சம் வரை இருக்க வேண்டும். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைவிட குறையும்போது, கண்டிப்பாக  நவீன மருத்துவத்தின் வழிகாட்டுதல் தேவை. 

டெங்கு பாதித்தவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!

* காய்ச்சல் கண்ட காலங்களில் இனிப்பு சுவையுள்ள உணவுகளை குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். காரம் அதிகமாக சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய்க்குப்பதிலாக மிளகை சேர்த்துக்கொள்ளலாம்.

* அரிசிக் கஞ்சி, தானியக் கஞ்சி இரண்டு வேளை கொடுக்கவேண்டும்.

* தினசரி இரண்டரை முதல்  மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மேலும், பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் போன்றவற்றையும் அவ்வப்போது குடிக்கலாம்.

* அன்னாசிப்பூவை தேநீர் அல்லது உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். துளசி, இலவங்கப்பட்டை சேர்த்த டீ, திரிகடுகம் காபி ஆகியவற்றையும் குடிக்கலாம். கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.

* மீனைத்தவிர பிற அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்..." என்றார், சிவராமன். 

"நிலவேம்புக் குடிநீர்,  கஷாயமாகவும் பொடியாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.  இம்ப்காப்ஸ் நிறுவனமும் , சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களுக்கான கூட்டமைப்பும் இணைந்து நிலவேம்புக் கஷாயத்தை தமிழகமெங்கும் 50 சதவிகித தள்ளுபடி விலையில் விநியோகித்து வருகின்றன.  மேலும், 9710105678, 9710205678 ஆகிய எண்களுக்கு கால் செய்தால், இம்ப்காப்ஸ் மூலம் உங்கள் பகுதிக்கே வந்து நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யக்கூடிய வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகளில் வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..." என்றார் இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன்.Trending Articles

Sponsored