உலகில் 25 கோடியே 30 லட்சம் பேருக்கு பார்வைக் குறைபாடு! பார்வைத்திறன் பத்திரம் #WorldSightDaySponsoredகுழந்தையின் சிரிப்பை, உலகின் உன்னதமான கலைகளை, இயற்கையின் பரிபூரணத்தை... என எண்ணற்ற அழகையெல்லாம் நமக்குக் காட்சிப்படுத்துபவை நம் கண்கள். அதே நேரத்தில் நம் பார்வைத்திறனை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளாவிட்டால், கண்கள் இருந்தும் பயனில்லை. அப்படிப்பட்ட பார்வைத்திறனின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுவதே `உலக பார்வை தினம்’ (World Sight Day).   

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை `உலக பார்வை தினம்’ என அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி பார்வை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லயன்ஸ் கிளப்பின் சர்வதேச அமைப்புதான் இந்த தினத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. இப்போது உலக சுகாதார நிறுவனம், சர்வதேச பார்வயின்மை தடுப்பு நிறுவனம் (The International Agency for the Prevention of Blindness) ஆகியவற்றோடு இணைந்து இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக `Make Vision Count’ என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, `ஒவ்வொரு பார்வையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்பதாகும். ஆக, பார்வைத்திறனின் அவசியம், பார்வைக்குறைபாட்டுக்கான காரணங்கள், தீர்வுகள், பாதுகாக்கும் வழிகள் அனைத்தையும் இந்த தினத்தில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
`ஐந்தில் நான்கு பேருக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு தவிர்க்கக் கூடியது’ என்கிறது சர்வதேச பார்வையின்மை தடுப்பு நிறுவனத்தின் கணக்கெடுப்பு ஒன்று. அதாவது, 80 சதவிகிதம் பேருக்கு ஏற்படும் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்துவிடலாம் அல்லது பார்வைக் கோளாறு வராமல் தடுத்துவிடலாம். உலக மக்கள்தொகை 7.3 பில்லியனில் (730 கோடி), ஏறத்தாழ 253 மில்லியன் (25 கோடியே 30 லட்சம்) பேர் பார்வைக் குறைபாடு உடையவர்கள்.

Sponsored


Sponsored


பார்வைக் குறைபாட்டுக்கு காரணங்கள் என்னென்ன?
* ஏறத்தாழ 43 சதவிகிதம் மக்கள் `Uncorrected refractive errors' அதாவது திருத்தப்படாத பார்வைத்திறனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கிட்டப்பார்வைக் குறைபாடு, தூரப்பார்வைக் குறைபாடு ஆகியவை இவற்றில் அடங்கும்.
* கண்புரை நோய் எனப்படும் `Cataract' வயதானவர்களுக்கு ஏற்படும். இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை.
* விளையாடும்போது அல்லது ஏதேனும் விபத்தில் பார்வைக் குறைபாடு ஏற்படுதல்.
* மரபு வழி ஏற்படும் பார்வைக் குறைபாடு.
* கண்களில் ஏற்படும் தொற்றுகள்.
* சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வைக் கோளாறுகள்.
* `Glaucoma’ எனப்படும் கண்ணில் ஏற்படும் ரத்த அழுத்தம்.
* சில வகைப் புற்று நோய்களாலும் பார்வைக் குறைபாடு ஏற்படலாம்.

பார்வைக் குறைபாட்டைச் சரி செய்வது எப்படி?
* சர்க்கரைநோயால் ஏற்படும் பிரச்னைகளை, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் சரிசெய்யலாம்.
* `Glaucoma’ எனப்படும் ரத்த அழுத்த பிரச்னையை, சில மருத்துவரின் பரிந்துரைப்படி, சில மருந்துகளை உட்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
* திருத்தப்படாத பார்வைத்திறன் குறைபாட்டை கண்ணாடிகள், லென்ஸ் போன்றவற்றை அணிந்து சீர் செய்யலாம்.
* கண்புரை எனப்படும் காட்ராக்ட்டை அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

கண்ணைப் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்:
* சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் என அனைத்து வகையான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
* புகைபிடித்தலை நிறுத்த வேண்டும்.
* கடும் கோடை காலத்தில், தரமான கறுப்புக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு வெளியே செல்ல வேண்டும்.
* நீண்ட நேரம் கணினி அல்லது மொபைல் உபயோகிப்பதால் பல பிரச்னைகள் வருகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி தொலைவில் உள்ள பொருளை, 20 விநாடிகள் பார்க்கலாம். பிறகு மீண்டும் வேலையைத் தொடரலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பார்க்கும் வேலையில் இருந்து 15 நிமிடங்கள் பிரேக் எடுக்கலாம்.
* கண் மருத்துவரை அவ்வப்போது சென்று சந்தித்து, கண்ணாடி, பார்வைத்திறன் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.Trending Articles

Sponsored