"நிலவேம்புக் குடிநீர் மட்டுமல்ல... டெங்குவுக்குத் தேவை ஒருங்கிணைந்த சிகிச்சை!" - சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் #DengueSponsored`டெங்கு காய்ச்சலுக்கு அலோபதி மருத்துவம் செய்வது சரியா... சித்த மருத்துவம் செய்வது சரியா?’ - இப்போது இதுதான் சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம். ஒரு சாரார் `அலோபதிதான் முழுமையான தீர்வைத் தரும்’ என்கிறார்கள். `பிறகு ஏன் அரசு மருத்துவமனைகளிலேயே நிலவேம்புக் குடிநீர் கொடுக்கிறார்கள்?’ என்று கேட்கிறார்கள் மறு தரப்பினர். இப்படி விவாதம் சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஒரு சுற்றறிக்கை விவாதத்தை மேலும் சூடாக்கியிருக்கிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையகரத்தில் இருந்து 12.7.2017 அன்று, தமிழ்நாட்டில் உள்ள அரசு, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும், சித்த மருத்துவ அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் 'காய்ச்சலுக்காக வரும் நோயாளிகள் யாரையும் உள்நோயாளிகளாக அனுமதிக்காமல், நவீன முறை மருத்துவமனைகளுக்கு (Allopathy side), உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யுமாறு அறிவுறுத்துகிறோம்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

Sponsored


இந்தச் சுற்றறிக்கையைப் பற்றி இந்திய மருத்துவம் - ஹோமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரேவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

Sponsored


``டெங்கு போன்ற காய்ச்சல்களுக்கு சித்தா போன்ற மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சை எடுக்கலாம். ஆனால், உள்நோயாளிகளாக யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று சர்குலர் அனுப்பியிருக்கிறோம். டெங்குக் காய்ச்சலுக்கு ரத்தப் பரிசோதனை உள்பட சில அடிப்படை பரிசோதனைகள் செய்யவேண்டியிருக்கும். அதற்கான வசதிகள் சித்தா, ஆயுர்வேத மருத்துவமனைகளில் இல்லை. எனவே, ஒவ்வொரு முறை பரிசோதனை செய்ய அரசு பொது மருத்துவமனைகளைத் தேடியே ஓட வேண்டும். இதைத் தவிர்ப்பதற்காகவே, நவீன வசதி கொண்ட அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். தேவைப்பட்டால், அங்கே உள்ள சித்த மருத்துவர்களிடமே சப்ளிமென்ட் மெடிசின்ஸ் வாங்கிப் பயன்படுத்தலாம்’’ என்றார் மோகன் பியாரே.

இது தொடர்பாக சென்னை, அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணவாளனிடம் பேசினோம். ``டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர், சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதில் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, நோயாளிக்கு திடீரென்று ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டால், நவீன மருத்துவமனைகளுக்குத்தான் செல்ல வேண்டும். அங்குதான் ரத்தம் ஏற்ற முடியும். அவசர தருணங்களில்

நவீன மருத்துவமனைகளைத் தேடி ஓட முடியாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்காகவே இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது’’ என்றார் மணவாளன்.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் விக்டோரியா, ``டெங்குக் காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை அழிக்கக்கூடிய மருந்து நிலவேம்புக் குடிநீர் மட்டுமே. அது சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பப்பாளி இலைச்சாறு நீர் வறட்சியைச் சரி செய்யக்கூடிய மருந்து. ஆனாலும்கூட திடீரென்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர்வறட்சி ஏற்பட்டால் ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும். மேலும் ஏதாவது டெஸ்ட் செய்ய வேண்டும் என்றால், அந்த

வசதிகளும் அரசு பொது மருத்துவமனைகளில்தான் இருக்கின்றன. பாராசிட்டமால் போன்ற மாத்திரைகள் கொடுத்து காய்ச்சலின் வீரியத்தை அங்கே குறைக்க முடியும். நவீன வசதிகள் இருப்பதால், அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது’’ என்கிறார்.

அரசு சித்த மருத்துவர் ஶ்ரீராம், ``அரசு மருத்துவமனைகளிலேயே தற்போது நிலவேம்புக் குடிநீர் கொடுக்கப்படுகிறது. இந்தச் சுற்றறிக்கை சித்த மருத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல... ஆனால், காய்ச்சல் கடுமையாகி உயிரிழப்பை நோக்கிப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான். நீர்ச்சத்து குறைவதால்தான் இந்த மாதிரியான காய்ச்சல் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்த சித்தர்கள் நிலவேம்பை கஷாயமாகக் கொண்டுவராமல், குடிநீராகக் கொண்டுவந்தார்கள். ஆனால் காய்ச்சல் உச்சமாக இருக்கும் ஒருவரால் நிலவேம்புக் குடிநீரைக்கூட குடிக்க முடியாது. அப்போது அவர்களுக்கு ட்ரிப்ஸ் ஏற்றித்தான் நீர்ச்சத்தை அதிகரிக்க முடியும். தற்போது எந்தச் சிகிச்சை சரியானது என்ற விவாதம் தேவையில்லை. ஓர் ஒருங்கிணைந்த சிகிச்சைதான் அவசியம். அதை, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்.

உண்மைதான். தற்போது எந்த மருத்துவம் உயர்ந்தது என்ற விவாதம் தேவையற்றது. மருத்துவர்கள் சொல்வதுபோல் ஒரு கூட்டான, ஒருங்கிணைந்த சிகிச்சையே இப்போதைய தேவை. இனி ஓர் உயிரிழப்புக்கூட டெங்குவால் ஏற்படக் கூடாது. அதற்கான முயற்சியையே அனைவரும் எடுக்க வேண்டும். டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டால், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்வதோ, நிலவேம்புக் குடிநீர் குடித்துவிட்டால் போதும் என்றோ யாரும் இருந்துவிட வேண்டாம். காய்ச்சலின் அறிகுறி தெரிந்த அடுத்தகணமே அரசு மருத்துவமனைகளை நோக்கிச் சென்றுவிடுவது நல்லது.Trending Articles

Sponsored