பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் இதயநோய்.. பல்மோனரி ஸ்டினோசிஸ்... கவனம்!Sponsoredஇதய நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா? முதல் இடம். இது கவலைக்குரிய செய்தி. அதைவிட நம்மை வருத்தப்படவைக்கும் செய்தி, இந்தியாவில், இதயநோயால் பாதிக்கப்படுபவர்களின் வயது வரம்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருவது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வயதானவர்கள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளானார்கள்; ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்குமேற்பட்டவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள்; கடந்த ஆண்டு இளம் வயதினரை அதிகம் பாதித்தது இந்த இதயநோய். இப்போது குழந்தைகளோடு சேர்த்து, பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி. குழந்தைகளின் இதயத்தைத் தாக்கும் இந்த நோய்க்கு அடிப்படை பல்மோனரி ஸ்டினோசிஸ் (Pulmonary Stenosis) என்கிற நிலை.

பல்மோனரி ஸ்டினோசிஸ்

Sponsored


பல்மோனரி ஸ்டீனோசிஸ் என்பது நுரையீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு. இந்த அடைப்பு, பத்து சதவிகிதம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த அடைப்பு பெரிதாக இருக்காது; மெல்லிய அளவிலேயே இருக்கும். இந்த அடைப்பின் அளவைப் பொறுத்துதான் இதயத்தில் பாதிப்பின் தீவிரம் இருக்கும். 

Sponsored


அறிகுறிகள்...

சீரற்ற இதயத் துடிப்பு
சீரற்ற ரத்த ஓட்டம்
மூச்சுத்திணறல்
பாதம், முகம், கண் இரப்பைகள், வயிறு போன்ற பகுதிகளில் வீக்கம்.

சிகிச்சைகள்!

* இதயம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை, அளவைப் பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். இதயத்துக்குச் செல்லும் வழியிலுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்ய ஸ்டென்ட் (Stent) சிகிச்சை முறை பின்பற்றப்படும்.

* வால்வுகளில் அடைப்பு, ரத்தக் குழாயில் அடைப்பின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் இதய அறுவைசிகிச்சை (Open Heart Surgery) மேற்கொள்ளப்படும்.

* ரத்தக்குழாய் அடைப்பின் பாதிப்பைப் பொறுத்து சிகிச்சைக்கான நேரமும், செலவுத் தொகையும் மாறுபடும். தமிழக அரசு அம்மா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் சிகிச்சை என்னும் கருத்தின் அடிப்படையில் இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்ளலாம். மேலும், 80,000 ரூபாய் வரை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும்.

பல்மோனரி ஸ்டினோசிஸ் ஏற்படுவதற்குக் காரணங்கள்...

பல்மோனரி ஸ்டினோசிஸ் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுவதற்குக் காரணம், பெற்றோர்களின் வாழ்வியல் முறையே.

* பெற்றோர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், வாழ்வியல் மாற்றம் போன்றவையே பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

* சில சமயங்களில் உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதால் பெற்றோர்களிடமிருந்து குழந்தைக்கு ஏற்படும் ஜீன் மாற்றம் காரணமாக இருக்கலாம்.

* கருவில் குழந்தைக்கு ஏற்படும் வளர்ச்சி குறைபாடு.

பிறந்து நான்கு நாள்களே ஆன சிவன்யா என்ற பெண் குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தைக்கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்கு இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அந்தக் குழந்தைக்குப் பிறப்பதற்கு முன்னரே இந்தப் பிரச்னை இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பிறந்தவுடன் அது உறுதிசெய்யப்பட்டது. சிவன்யாவுக்கு சிகிச்சையளித்த குழந்தை நல இதய நோய் நிபுணர் ஆர்.பி.பிரேம்சங்கரைச் சந்தித்தோம்.

“சிவன்யாவுக்குப் பல்மோனரி ஸ்டீனோசிஸ் பிரச்னை இருந்தது. பல்மோனரி ஸ்டீனோசிஸ் என்பது  நுரையீரலுக்கு ரத்தத்தைக்கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு. இந்த அடைப்பு, பத்து சதவிகிதம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இது லேசாக இருக்கும். ஆனால், சிவன்யாவுக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கடுமையான அடைப்பு இருந்ததைக் கண்டறிந்தோம். உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்தோம். ஆனால், குழந்தையின் எடைப் பிரச்னை, பிறந்து சில நாள்களே ஆன நிலை, பிறந்த குழந்தைக்கு நல்ல ரத்தம், கெட்ட ரத்தம் இரண்டும் ஒன்றாகக் கலந்தநிலையில் இருக்கும். எனவே சிகிச்சை அளிப்பதில் பல சவால்கள் இருந்தன. இருந்தாலும், இந்தச் சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தோம். சிவன்யாவுக்குத் தொடைப்பகுதி வழியாக பைப்பை உள்ளே செலுத்தி ஸ்டென்ட் முறையில் ரத்தக் குழாயிலுள்ள அடைப்பை சரிசெய்தோம்" என்கிறார் டாக்டர் ஆர்.பிரேம்சங்கர். 

சிவன்யாவைப்போலவே ஈரானைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுமி பாத்திமாவுக்கும் பல்மோனரி ஸ்டினோசிஸ் பிரச்னை. ஆனால் இவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சற்று பெரியது. பாத்திமாவுக்குச் சிகிச்சையளித்த குழந்தை நல இதய நோய் நிபுணர் பிரசாந்தைச் சந்தித்தோம். 

“பாத்திமாவுக்கு கிரிட்டிக்கல் பல்மோனரி ஸ்டினோசிஸ் இருந்தது. இது பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்னை. 95 சதவிகிதம் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படாது. பிறந்து நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குப் பின்னரோ, சில ஆண்டுகளுக்குப் பின்னரோ குழந்தையின் உடல்நலனைப் பொறுத்து சிகிச்சை அளிக்கவேண்டியிருக்கும். ஆனால், சில குழந்தைகளுக்கு மிகவும் மோசமான நிலை உண்டாகும். அந்த நிலைதான் பாத்திமாவுக்கும். இந்தக் குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே இதயத்தில் பிரச்னை இருந்தது. இதயத்தில் பல்வேறு கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் சருமம் நீல நிறத்தில் இருக்கும். இதற்குக் காரணம், பிறந்த குழந்தையின் கெட்ட ரத்தமும் நல்ல ரத்தமும் ஒன்றாகக் கலந்திருப்பதுதான். இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பைச் சரிசெய்ய பாத்திமாவுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மணி நேர இதய அறுவை சிகிச்சை. இதில் குழந்தையின் ரத்தக் குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது’’ என்கிறார் டாக்டர் பிரசாந்த்.

பல்மோனரி ஸ்டினோசிஸ்... நாம் யாருமே எதிர்பாராதது. இது நம் எல்லோருக்கும் அறிவுறுத்துவது ஒன்றுதான்... முறையான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அது. வருமுன் காக்கப் பழகுவோம்!

Sponsored