நிலவேம்புக் குடிநீர் பற்றி என்னமாதிரியான ஆய்வுகள் நடத்தப்பட்டன?- கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் விளக்கம் #VikatanExclusive



Sponsored



டெங்குக் காய்ச்சலுக்கு மருந்தாகவும் தடுப்பு மருந்தாகவும் கொடுக்கப்படும் நிலவேம்புக் குடிநீர், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதா? இல்லையா? இதுதான் தற்போது அனைவராலும் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. 

அரசு தரப்பில், சுகாதாரத்துறை அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை 

Sponsored


" கிங் இன்ஸ்டிடியூட்டில்  இது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலவேம்புக் குடிநீர் மிகவும் பாதுகாப்பானது" என்று பதில் தருகிறார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் பலர், 'இன்னும் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, சான்றுகள் ஏதும் இல்லை' என்று கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் கூட, 'முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வரும்வரை தன் நற்பணி மன்றத்தில் யாரும் நிலவேம்புக் குடிநீரை வினியோகிக்க வேண்டாம்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Sponsored


உண்மை நிலவரம் என்ன? நிலவேம்புக் குடிநீர் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டதா? 

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் முன்பாக, நிலவேம்புக் குடிநீரை ஆய்வு செய்ததாகச் சொல்லப்படும் கிங் இன்ஸ்டிடியூட் பற்றித் தெரிந்து கொள்வோம். 

சென்னை கிண்டியில், 1899 ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி,  உருவாக்கப்பட்டது 'கிங் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்'. அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியின் சுகாதார ஆணையாளரான கிங் என்பவரின் பெயர்தான் இந்த நிறுவனத்துக்குச் சூட்டப்பட்டது. இவர்தான் இந்த ஆராய்ச்சி மையத்தின் முதல் இயக்குநரும் ஆவார். இவர் 1884-ம் ஆண்டு முதல் 1906-ம் ஆண்டு வரை மெட்ராஸ் பிரசிடென்சியின் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றியவர்.

ஆரம்ப காலங்களில், இது தடுப்பு மருந்து டிப்போவாகச் செயல்பட்டது. இங்கிருந்துதான் மெட்ராஸ் பிரசிடென்ஸி முழுவதும் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் சின்னம்மையின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது இங்கே சின்னம்மைக்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது உலக சுகாதார நிறுவனத்தின், ஜி.எம்.பி ( Good manufacturing practise) மற்றும் ஜி.எல்.பி (Good laboratry practise) விதிமுறைகள் படி (Norms) இல்லாததால் தற்போது எந்த மருந்துகளும் இங்கே தயாரிக்கப்படவில்லை. ஆனால், பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வசதிகளையும் சிறப்புகளையும் கொண்டது கிங் ஆராய்ச்சி நிறுவனம். 

இது, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நோய் கண்டறியும் ஆராய்ச்சி மையம். ஆசியாவில் அனைவராலும் அறியப்பட்ட ஓர் ஆய்வகமும் கூட. இங்கே உள்ள வைராலஜி துறையில், போலியோ, ரூபெல்லா போன்ற 29 வகையான வைரஸ் நோய்களைக் கண்டறியும் வசதிகள் உள்ளன. அதேபோல் உயிரியல்துறை ஆய்வகங்களில் அனைத்து வகையான தடுப்பு மருந்துகள் பற்றியும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது தமிழக அரசின், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்குகிறது. 

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து இங்கே கொடுக்கப்படுகிறது. மெடிக்கல் லேபரட்டரி சம்மந்தமான 24 வகையான டிப்ளோமா படிப்புகள் இங்கே உள்ளன. எலி, முயல் போன்ற விலங்குகளும் இங்கே வளர்க்கப்படுகின்றன. ஆய்வு  மேற்கொள்பவர்கள் இங்கே வந்து வாங்கிச் செல்லமுடியும்.

இங்கே, நிலவேம்புக் குடிநீர் பற்றி என்ன மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி  கிங் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குணசேகரனிடம் கேட்டோம்.  

"நிலவேம்புக் குடிநீர் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது உண்மைதான். நிலவேம்புக் குடிநீர், 'ஆன்டி- வைரல் எபெஃக்ட்'  இருப்பது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பயோ மற்றும் கீமோ இன்ஃபோமேடிக் ஆய்வுகளிலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. தேசிய சித்த மருத்துவ நிறுவனமும், கிங் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து உலக மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பத்திரிகையில் ( International Journal of Pharmaceutical Sciences and Research ) இது தொடர்பாக ஆய்வறிக்கைகளைச் சமர்பித்துள்ளோம். ஆனால், மலட்டுத்தன்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பது பற்றி ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.  தற்போதுதான் அதுபற்றி பேசுகிறார்கள். இனி பக்கவிளைவுகள் பற்றி விரிவான அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் " என்றார்.



Trending Articles

Sponsored