தீ பற்றிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்..? முதலுதவி முதல் சிகிச்சை வரை A டு Z



கந்துவட்டிக் கொடுமையால், இசக்கிமுத்து தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியெடுத்துவிட்டது.  மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், பல கேள்விகளை எழுப்புகிறது. 

Sponsored


எதிர்பாராதவிதமாக ஒரு சம்பவம் நடக்கும்போது பெரும் பதற்றம் உருவாவது இயல்புதான். அந்தச் சூழலில் சிலர், எரிந்தவர்கள் மீது மணலை அள்ளி வீசினார்கள். சிலர் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றினார்கள். சிலர், தங்கள் சட்டையைக் கழட்டி அவர்கள் மேல் அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தார்கள்.

Sponsored


ஒரு  தீ விபத்து ஏற்படும்போது  தீயை எப்படி அணைப்பது, பாதிப்படைந்தவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது போன்ற பயிற்சிகள் பொதுவாக இங்கே யாருக்கும் வழங்கப்படுவதில்லை. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளிலேயே அப்படியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விபத்துகள் நடக்கும்போது அதுபற்றி விரி்வாகப் பேசுவதும், பிறகு அதை மறந்துவிட்டு வேறொரு பிரச்னையில் கவனம் செலுத்துவதும் நம் இயல்பாகிவிட்டது.  

Sponsored


இந்தியாவில் நிகழும்  இயற்கைக்கு மாறான மரணங்களில் முதல் மூன்று இடங்களில் தீ விபத்தால் ஏற்படும் மரணங்கள் இடம்

பெறுகின்றன. தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வது ஒருபுறம் இருக்க, கவனக்குறைவு மற்றும் அலட்சியப்போக்குகளால் ஏற்படும் தீவிபத்துகளும் அதிக அளவில் உ.யிர்களைக் குடிக்கின்றன. 

தீ விபத்துகள் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் காப்பாற்ற வேண்டும். வீடுகளில் தனியாக இருக்கும்போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படித் தற்காத்துக்கொள்வது, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான மருத்துவ வசதிகள் நம் நாட்டில் உள்ளனவா? 

 விளக்குகிறார்... கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தா.  

தீக்காயத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல் தோல் மட்டும் சிவந்துவிடுதல், தோலின் மேல் கொப்புளங்கள் உண்டாதல், தோல்களுக்கு அடியில் உள்ள திசுக்கள் தீயால் கருகி விடுதல்.  

தீக்காயத்தால் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் ஆழமான காயத்தைவிட  பல  இடங்களில் ஏற்படும் முதல் நிலை தீக்காயம் ஆபத்தானது. இது எளிதில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.  

'ரூல் ஆஃப் நைன்ஸ்' (Rule of Nines) என்ற அளவுகோலின் மூலம் தீ விபத்துகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கிடமுடியும். இதை அடிப்படையாக வைத்து உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் 9 என்ற எண் அளவை மதிப்பாகக் கொடுத்து பிரிக்கின்றனர். தீக்காயம் உள்ள உடல் பாகத்தின் எண் மதிப்பைப் பொறுத்தே அதன் ஆபத்துகள் கணக்கிடப்படும்.  

இந்த அளவுகோலின் அடிப்படையில் 40 சதவிகிதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தான நிலையாகக் கருதப்படுகிறது. இப்படியான பாதிப்பு இருக்கும் நிலையில், காயத்தின் மீது குளிர்ந்த தண்ணீரை விடக்கூடாது. மாறாக, ஈரத்துணியால் ஒத்தடம் மட்டும் கொடுக்கலாம். 40 சதவிகிதத்துக்கும் குறைவாகப் பாதிப்பு அடைந்தவர்களைக் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. 

காயத்தின் தன்மை 40 சதவிகிதத்துக்கு மேலாக இருந்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு பாதியாகிறது. அதுவும், 70 சதவிகிதம் என்றால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், பாதிப்பு எத்தனை சதவிகிதமாக இருந்தாலும், குணமாவது பாதிக்கப்பட்டவரின் உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடும்.  

தடுப்பு மற்றும் முதலுதவி  

* உங்களைச் சுற்றி தீவிபத்து ஏற்பட்டால் / தீப்பற்றிக் கொண்டால் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

* எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலைப் பயன்படுத்தி நெருப்பை அணைக்க முயலலாம். தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைக்க முயற்சி செய்யக் கூடாது. ஏனெனில், தண்ணீர் தீக்காயத்தின் மீது பட்டு எரிச்சலையும் பாதிப்பையும் அதிகப்படுத்தும். மற்ற தீவிபத்துகளுக்குத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.   

* விபத்தின்போது தீப்பற்றி எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால், உடனடியாக அவரைக் கீழே தள்ளி கம்பளம், போர்வை அல்லது கோணி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அவரின்மீது இறுக்கிச் சுற்றினால் தீ பரவுவதைத் தடுக்க முடியும்.

* உடுத்தியிருக்கும் ஆடையில் தீப்பற்றிக்கொண்டால் கீழே படுத்து உருளவேண்டும். பயந்து ஓடக் கூடாது. ஓடும்போது காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாகப் பற்றி எரியும்.  

* சூடான பாத்திரங்களைத் தொடுவதாலோ, கொதிக்கும் எண்ணெய் அல்லது சூடான பொருள்கள் தெறித்து விழுவதாலோ உண்டாகும் சிறு புண்கள்  மற்றும் கொப்பளங்களைக் கையால் தேய்ப்பது அல்லது நகத்தால் கிள்ளுவது தவறு. அப்படிச் செய்வதால் புண்  மற்றும் கொப்பளத்தின் உள்ளே கிருமிகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அந்தக் கொப்புளங்களின்மீது 'ஆன்டிசெப்டிக்' மருந்துகளை வைத்து லேசாகக் கட்டுப்போட வேண்டும். அழுத்தமாகக் கட்டு போடக் கூடாது.  

* தீக்காயங்களுக்குத் தேன் மிகவும் நல்ல மருந்து. சிறு சிறு தீக்காயங்களுக்குத் தேனை காயத்தின்மீது தடவலாம்.  

* கடுமையான தீக்காயங்கள்மீது காற்று படாமல் மூட வேண்டும். அது வலியையும் கிருமித் தொற்றையும் குறைக்கும்.  

*  உடலின்மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.

* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  

* தீ விபத்தினால் ஏற்படும் பாதிப்பில் உடைக்கு முக்கியப்பங்கு உண்டு. சமையல்வேலைகளில் ஈடுபடுவோர் பருத்தியால் ஆன துணிகளை அணிவது பாதுகாப்பானது. ஏனெனில், அது தீயினால் ஏற்படும் பாதிப்பின் அளவைக் குறைக்கும். பட்டு அல்லது நைலான் உடைகள் அணிந்திருந்தால் அது எளிதில் தீப்பற்றிக் கொள்வதோடு, அதிக பாதிப்பையும் ஏற்படுத்தும். செயற்கை இழை உடைகளிலும் எளிதில் தீப்பிடிக்கும். வெப்பத்தில் உருகி உடம்போடு ஒட்டிக் கொள்ளும். தொடர்ந்து தீப்பற்ற தூண்டுதலாக அமையும். இவற்றால், எளிதில் தீயை அணைக்க முடியாத அபாயமும் உண்டாகிறது. மேலும், சிகிச்சையின்போது இது சிக்கலை ஏற்படுத்தும்.

* பல நேரங்களில் காப்பாற்றச் செல்பவர்களே தீவிபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். முன்புறத்தில் பாதுகாப்பாக சாக்கு அல்லது கம்பளி போன்றவற்றை நன்றாக விரித்துப் பிடித்தபடி பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டும். இவை எதுவுமே இல்லாதபட்சத்தில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கலாம்.   

* சாதாரணமாக வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் நீர் அல்லது எண்ணெய் கைதவறி உடம்பில் தெளித்துவிட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான நேரங்களில், பாதிக்கப்பட்ட இடங்களில் பேனா மையைக் கொட்டுவது, காபி பொடியை வைத்து அழுத்துவது, களிம்பு மருந்துகளைப் பூசுவது தவறு. ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்ற பொருள்களுக்குப் புண்களை ஆற்றக்கூடிய மருத்துவக் குணங்கள் எதுவும் இல்லை. ஆகையால், இவற்றைத் தீப்புண்களின்மீது ஊற்றுவது நோய்த் தொற்றை அதிகரிக்கும். தவிர புண்களைச் சுத்தம் செய்வதிலும் கடினத்தன்மையை ஏற்படுத்தும்.  

* தீயால் ஏற்பட்ட காயங்களைக் கூர்மையானப் பொருள்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது தவறான அணுகுமுறை. இப்படிச் செய்வது நோய்த்தொற்று அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.  

* சிறிய அளவில் தீக்காயம் இருந்தால், காயமான பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம், குளிர்ந்த நீரால் காயத்தை நனைக்கலாம். தீக்காயத்துக்கு சோப் பயன்படுத்தக் கூடாது. இது வலியையும் எரிச்சலையும் அதிகரிக்கும். சிறிதுநேரம் கழித்து 'சில்வரெக்ஸ் ஆயின்மென்ட்' (Silverex Ointment) தடவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.  

* காயம் சிறியதாக இருந்தால், `டிடி' எனப்படும் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

* ஒருவர் தீக்காயம் அடையும்போது, அவரின் உடலிலிருந்து தண்ணீர், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருள்கள் வெளியேறிவிடும். ஆகையால், காயம் அடைந்தவருக்கு அடிக்கடி உப்பு, சமையல் சோடா கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுக்கலாம். வாந்தி எடுத்தால் குடிக்கக் கொடுக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் சிகிச்சை வசதிகள் எப்படி ?

தீக்காயத்துக்கான சிகிச்சையும் இங்கு சவாலான ஒன்றே. ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற விகிதத்தில் இருந்தால் பல்வேறு நோய்த்தொற்றுகளைத் தவிர்க்கலாம். பெரிய அளவிலான தீவிபத்துகளிலிருந்து மீண்டு வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலவேளைகளில் சிறுவிபத்தில் உயிரிழப்பவர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் சூழலைப் பொறுத்தே மாறுபடும். 

இந்தியாவில் உள்ள மக்கள்தொகை மற்றும் நெருக்கத்துக்கு ஏற்ப ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தாலும், குறைந்தபட்சம் மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிக்க வேண்டும்".  



Trending Articles

Sponsored