டெங்கு பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு, இரண்டாவது முறை டெங்கு தாக்குமா?! #Dengue



Sponsored



சிறு தலைவலி வந்தால் கூட, 'இது டெங்குவுக்கான அறிகுறியாக இருக்குமோ...' என்று நினைக்கும் அளவுக்கு அது குறித்த அச்சம் பரவியுள்ளது. டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில்,  ஒரு முறை டெங்குக் காய்ச்சல் வந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் டெங்குக் காய்ச்சல் வரலாம் என்ற செய்தி பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. பொதுவாக, குறிப்பிட்ட ஒரு வைரஸால் ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு குணமடைந்தால், மீண்டும் அந்த வைரஸ் அவரைத் தாக்காது. அந்த வைரஸை அழிக்கும் அளவுக்கு உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். ஆனால், டெங்கு விஷயத்தில் நிலை வேறு. டெங்கு பாதித்து குணமான ஒருவருக்கு மீண்டும் அதைவிட வீரியமான டெங்கு வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.  

இதுகுறித்து, பொதுமருத்துவர் சிவராமகண்ணனிடம் பேசினோம்

Sponsored


"ஒரு தடவை டெங்கு வந்து குணமாகிவிட்ட பின்னர் மீண்டும் டெங்குக் காய்ச்சல் வருமா?"

Sponsored


"கண்டிப்பாக வரும். டெங்குவில் டி-1, டி-2, டி-3, டி-4 என நான்கு வகை வைரஸ்கள் உள்ளன. இவற்றில் எந்த வைரஸ் தாக்கினாலும் டெங்கு வரும். ஆனால், ஒருமுறை தாக்கிய வைரஸ் அடுத்தமுறை தாக்காது. வேறுவகை வைரஸ் தாக்க வாய்ப்பிருக்கிறது. இதில் இரண்டாம் வகை வைரஸ் உயிரைப்பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது. மற்ற மூன்று வகையான வைரஸால் ஏற்படும் பாதிப்பைச் சிகிச்சைகளின் மூலம் சரிசெய்யமுடியும். 

டெங்குக் காய்ச்சல் வந்து குணமாகிவிட்டவரை 'ஏடிஸ் எஜிப்டி' என்னும் டெங்கு தொற்று உள்ள கொசு கடித்தால் மீண்டும் டெங்குக் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 'ஏடிஸ் எஜிப்டி' கொசுக்களின் முட்டைகள் ஓராண்டுவரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நல்ல நீரில் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்பும்.

முதல்முறை டெங்கு பாதித்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மேலும், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கும். அந்தச் சூழலில் 'ஏடிஸ் எஜிப்டி' கொசு கடிப்பதன் மூலம் முன்பை விட வீரியமான டெங்குக்காய்ச்சல் வருவதற்கு வாய்ப்புள்ளது." 

"இரண்டாவது முறை வரும் டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்னென்ன?"

"கடுமையான காய்ச்சல்

வயிற்றுவலி

தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி

உடல் வலி

மூட்டுவலி

கண்ணுக்குப் பின்புறம் வலி

தொடர்ச்சியான வாந்தி

களைப்பு

அனைத்து அறிகுறிகளும் முன்பு காய்ச்சல் வந்தபோது இருந்ததைவிட தீவிரமாக இருக்கும்." 

"இரண்டாவதுமுறை வரும் டெங்குக் காய்ச்சலுக்கான சிகிச்சை என்ன?"

'என்.எஸ்.ஐ.-1 ஆன்டிஜென்' பரிசோதனை மூலம் ரத்தத்தில் டெங்குக் கிருமிகளுக்கான ஆன்டிஜென் உள்ளதா எனக் கண்டறியலாம். இரண்டாம் முறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே முக்கிய சிகிச்சை. இரண்டாம் முறை டெங்கு பாதிப்பால் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவேகமாகக் குறைந்துகொண்டேவரும். இதனால், ரத்தத்தில் உள்ள நீர்ச்சத்தும் குறையும்; ரத்த இழப்பு ஏற்படும். இதைச் சரிசெய்ய ரத்தத்தை முழுமையாகவோ, தட்டணுக்களைப் பிரித்தோ டெங்கு பாதித்தவருக்குச் செலுத்த வேண்டும். உடலிலுள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்குக் கொசு கடிக்காமல் இருக்க கொசுவலைப் பாதுகாப்புக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம்."

"டெங்குக் காய்ச்சல் வந்து குணமானவர்கள் மீண்டும் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க என்ன செய்யலாம்?"

"டெங்குக் காய்ச்சல் வந்து குணமடைந்தவர்கள் 3 முதல் 5 நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு, பால் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியம். மீண்டும் டெங்குத் தொற்று உள்ள கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் ஜன்னல் கதவுகளின் வழியாகக் கொசு உள்ளே புகாதவண்ணம் கொசுவலை அடித்துவைக்கலாம்." 



Trending Articles

Sponsored