ஐந்து வேளை உணவு ஆரோக்கியம்..! எதை, எப்போது சாப்பிடுவது?! #TheRightFoodsAtTheRightTimeSponsored``காலையில சாப்பிட எங்கே நேரம் இருக்கு’’, ``மதியம் கொஞ்சம்தான் சாப்பிட்டேன்’’, ``நைட் லேட்டா சாப்பிட்டுப் பழகிடுச்சு’’ போன்ற வசனங்களை ஒரு நாளில் ஒருதடவையாவது கேட்டிருப்போம்; நாமேகூட சொல்லியிருப்போம். நம் உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்க உதவுவது உணவு. அதிலும், சரியான நேரத்துக்குச் சரியான உணவு உண்பதே உடலுக்கு நன்மை தரும். 
உணவைச் சாப்பிடாமல் தவிர்ப்பது எந்த அளவுக்கு உடல்நலத்தைப் பாதிக்குமோ, அதே அளவுக்கு நேரம் தாழ்த்தி உண்ணும் உணவும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும். எந்த உணவை, எந்த நேரத்தில், எப்போது சாப்பிடவேண்டும்... பார்க்கலாமா? 

`மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்பதை சிறுவயதிலிருந்து கேட்டிருக்கிறோம். ஆனால், `ஒரு நாளைக்கு ஐந்து வேளையாக உணவைப் பிரித்துச் சாப்பிடுவதே சிறந்தது’ என்கிறார்கள் உணவியலாளர்கள். 

காலை உணவு:
காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9:45-க்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், காலை உணவானது முதல் நாள் இரவு முழுக்க வயிற்றை வெறும் வயிற்றில் வைத்திருந்து, நீண்ட நேர இடைவெளிக்குப் பின்னர் சாப்பிடுவது. இதுதான் ஒரு நாளைத் தொடங்குவதற்கான புத்துணர்ச்சியை நம் உடலுக்குத் தருகிறது. மூளை முதல் ரத்தம் வரை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு வழிவகுக்கிறது. 

Sponsored


`இட்லி - சாம்பார் சிறந்த காலை உணவு’ என யுனெஸ்கோ சான்றளித்திருக்கிறது. அதேபோல், பழைய சோற்றை காலை உணவாகச் சாப்பிடலாம். இது, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க உதவும். தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும். தோசை - சட்டினி - சாம்பார், பூரி - உருளைக்கிழங்கு குருமா, பொங்கல், சப்பாத்தி - சப்ஜி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, புட்டு - கொண்டைக் கடலை, சத்துமாவுக் கஞ்சி மற்றும் பழங்கள் போன்றவை காலை உணவுக்கு ஏற்றவை. 

Sponsored


மிட் மார்னிங்:
காலை மற்றும் மதிய உணவு வேளைக்கு நடுவில் உள்ள மிட்மார்னிங் நேரமான 10:45 முதல் 11:30 மணிக்குள் பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகப் பருகலாம். 

மதிய உணவு: 
மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், மதிய உணவுதான் ஒரு நாளில் நாம் சாப்பிடும் அதிக அளவு உணவு. உடல் தொடர்ந்து இயங்கத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது. 
மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது நல்லது. நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்தை இது கொடுக்கும். மதிய உணவாக வெரைட்டி ரைஸ் எனப்படும் புளியோதரை, தக்காளி சாதம், லெமன் சாதம்... எதுவாக இருந்தாலும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. 
அனைத்து வகை கீரைகளையும், பருப்புகளையும், பயறுகளையும், காய்கறிகளையும் மதிய உணவாகச் சாப்பிடலாம்.
கைக்குத்தல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடலாம். பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பிரியாணி, மீன், இறைச்சி போன்ற உணவு வகைகளுக்கு மதிய நேரமே சிறந்தது. அப்போதுதான் அவை செரிமானமாவதற்கான நேரம் உடலுக்குத் தாராளமாகக் கிடைக்கும்.
மதிய உணவாக எதைச் சாப்பிட்டாலும் இறுதியில் ரசத்தை உடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். ரசம், செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தைப்போலவே சூப்பும் மதியம் சாப்பிடச் சிறந்தது.

மாலை ஸ்நாக்ஸ்:
மாலையில் 4 முதல் 5 மணிக்குள் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

இரவு உணவு:
இரவு உணவை மாலை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம். 
இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா, கோதுமை உணவுகள், பருப்பு வகைகள், ராகி, கம்பு, தேன், பால் போன்றவற்றை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும்.
கஃபைன் உள்ள பானங்கள், கார்பனேட்டட் டிரிங்க்ஸ், அசைவ உணவுகள், கீரை, மசாலா அதிகம் நிறைந்த துரித உணவுகள், மைதா பொருள்கள், நொறுக்குத்தீனி, அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. 

சாப்பிட்டவுடன் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை!
பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரம் வந்துவிட்டது என்பதற்காக வலுக்கட்டாயமாக எதையும் சாப்பிடக் கூடாது. உணவை நொறுங்கக் கடித்து, மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவும் சாப்பிட்டு முடித்து அரை மணி நேரத்துக்குப் பின்னரும் தண்ணீர் குடிக்கலாம். சாப்பிடும்போது குடிக்கக் கூடாது. 
* புகைப்பிடிக்கக் கூடாது. இது செரிமானத்தன்மையைக் குறைத்து, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். 
* பழச்சாற்றை குடிக்கக் கூடாது. இது செரிமானத்துக்கு உதவும் டைஜெஸ்டிவ் ஜூஸை (Digestive juices) உருவாகவிடாமல் தடுக்கும். செரிமானக் கோளாறை உண்டாக்கும்.
* உணவு சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. செரிமானத்துக்குத் தேவையான நேரத்தை தூங்குவது குறைத்துவிடும். இது, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
* உடற்பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தால் வயிற்றுப்பிடிப்பு, வயிற்றுவலி ஏற்படும் வாய்ப்பு உண்டு.
* சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. இது கை கால்களில் சீரற்ற ரத்த ஓட்டத்தை உண்டாக்கும். செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளில் இடையூறை உண்டாக்கும். 
* டீ, காபி குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ஆக்ஸலேட் மற்றும் ஃபைலேட் உடலில் இரும்புச்சத்தை உறியும் செயலை (Iron absorption) சரியாக நடக்கவிடாமல் தடுக்கும்.
 Trending Articles

Sponsored