‘ட்ரிபுள் எஸ்..!’ இல்லறம் இனிக்க உதவும் உளவியல் மந்திரம்Sponsored‘சாரி...’ (Sorry) நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை. ஆனால், நாம் இந்த வார்த்தையைப் பெரும்பாலும் வீட்டுக்கு வெளியில்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். யாரோ ஒருவரின் காலை மிதித்துவிட்டால், தெரியாமல் ஒருவரை இடித்துவிட்டால், ஏன்... தும்மும்போதுகூட `சாரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். இது நல்ல விஷயம்தான். சரி... இதை வீட்டிலிருக்கும் யாரிடமாவது சொல்கிறோமா? இந்தக் கேள்விக்கு நிச்சயமாக நிறைய பேரிடமிருந்து `இல்லை’ என்றுதான் பதில் வரும். பல தம்பதிகள் `சாரி’ சொல்லாததாலேயே பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. வாழ்க்கைத்துணையிடம் மன்னிப்பு கேட்டால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நிறையபேருக்குத் தெரிவதில்லை. இல்லற வாழ்க்கை சீராகச் செல்ல அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய தாரக மந்திரம் ஒன்று இருக்கிறது... அது எஸ்.எஸ்.எஸ். ஆங்கிலத்தில் ‘ட்ரிபுள் எஸ்’ என்று சொல்வார்கள் (SSS - Triple S). இதற்கு அர்த்தம், `ஸே சாரி & சரண்டர்’ (Say Sorry & Surrender). `மன்னிப்புக் கேட்டு சரணடைந்துவிடுங்கள்.’ அவ்வளவு விசேஷமானதா இந்த மந்திரம்? நிச்சயமாக. 

‘சாரி’ என்ற வார்த்தையை முகம் தெரியாதவர், அதிகம் பழக்கமில்லாதவர், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், அண்டை வீட்டார்களிடமெல்லாம் கூறும்போது, நம் வாழ்க்கைத்துணையிடம் ஏன் கூறக் கூடாது? ‘சாரி’ சொல்வதால் நாம் தவறு செய்துவிட்டோம் என்று அர்த்தமில்லை. சில நேரங்களில் விட்டுக்கொடுப்பதற்காகக்கூட சாரி சொல்லலாம். தமிழில் `விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. இன்றைய தலைமுறையினர் இதைப் புரிந்துகொள்வதில்லை. `நான் ஏன் சாரி சொல்ல வேண்டும்?’, `நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?’, ‘அவரை வந்து முதலில் என்னிடம் பேசச் சொல்லுங்கள்’  என்றுதான் பல தம்பதியர் விதண்டாவாதம் செய்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை இருண்ட பாதைக்கு அழைத்துச்செல்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குச் சில நேரங்களில் பெற்றோரேகூட தவறான வழிகாட்டியாக இருக்கிறார்கள். `நீ ஏன் அவனைச் சார்ந்திருக்கிறாய்... நீ படித்தவள்தானே... உன்னால் சொந்தக் காலில் நிற்க முடியாதா?’ என்று பெண்ணைப் பெற்றவர்கள் சிலர் அறிவுறுத்துகிறார்கள்; `இவளைவிட அழகான பெண், குணமான பெண்ணை உனக்குத் திருமணம் செய்துவைக்கிறேன்’ என்று ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள் பிள்ளையின் வாழ்க்கையைப் பாழாக்குகிறார்கள்.

Sponsored


இது ஓர் உண்மைச் சம்பவம். வெற்றி - வனிதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவருக்கும் திருமணம் நல்ல முறையில் நடந்தேறியது. இருவரும் நன்கு படித்தவர்கள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருமணம் முடிந்து சில காலம் இருவரும் அன்பாகவும் பாசமாகவும்தான் இருந்தார்கள். முதன்முறையாக இருவருக்கும் இடையை ஒரு சிறு பிரச்னை ஏற்பட்டது. அந்த விஷயத்தில் இருவருமே மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லை. எல்லோருடைய வாழ்க்கைப் பயணத்திலும் ஏற்படும், சிறு சிறு மோதலும் கருத்து வேறுபாடும் இவர்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்டன. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குறைகூறிக் கொண்டார்களே தவிர, விட்டுக்கொடுக்கவோ, மன்னிப்பு கேட்கவோ தயாராகயில்லை. வனிதா வீட்டில் நடக்கும் சின்னப் பிரச்னையைக்கூட உடனடியாக அவளுடைய பெற்றோர்களிடம் கூறிவிடுவார். வெற்றியும் தன்னுடைய மனைவியைப் பற்றி பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் குறைகூறத் தொடங்கிவிட்டார். இதனால் பிரச்னை பெரிதாகிவிட்டது.

Sponsored


இருவரின் பெற்றோர்களும் எங்கு பிரச்னை என்று அலசிப் பார்க்கவில்லை. அவர்களும் குறைகூறுவதிலேயே முனைப்போடு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் உறவினர்கள், பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் இரு வீட்டாரும் சேர்ந்து ஒரு தெளிவற்ற, மோசமான முடிவை எடுத்தார்கள். அது, விவாகரத்து. வனிதாவின் அப்பா, `நம்மிடம் இல்லாத சொத்தா, நீ ஏன் கஷ்டப்படுகிறாய், அப்பா உன்னை தேவதையைப்போல் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். வெற்றியின் பெற்றோர் `இவளைவிட உனக்கு நல்ல பெண்ணைத் திருமணம் செய்துவைக்கிறேன்’ என்று சொன்னார்கள். வெற்றியும் வனிதாவும் விவாகரத்துக்குச் சம்மதித்தார்கள். இந்த பிரச்னைக்கிடையில், இவர்களின் திருமணத்தை முடித்துவைத்த உறவினர் ஒருவர் இருவரையும் தனியே அழைத்து, அவர்களிடம் எங்கு போகிறோம் என்று கூறாமல் ஃபேமிலி கவுன்சலிங்குக்காக ஒரு மனநல ஆலோசகரிடம் கூட்டி வந்தார். அங்கே வந்ததும், இருவரும் அந்த உறவினர் மீது கடும் கோபம் கொண்டார்கள். `எங்களை ஏன் இங்கே அழைத்து வந்தீர்கள்?’ என்று சத்தம் போட்டார்கள். அவர், இருவரிடமும் கெஞ்சிக் கூத்தாடினார். `எனக்காக நீங்கள் ஒரு மணி நேரம் மட்டும் ஒதுக்குங்கள். அதற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையைத் தீர்மானியுங்கள்’ என்று கூறினார்.

வேண்டா வெறுப்பாக அந்தத் தம்பதி மனநல ஆலோசகரிடம் பேச ஆரம்பித்தார்கள். முதல் நாள் கவுன்சலிங் முடிந்தவுடன், இருவரும் தாங்கள் செய்த தவறை உணர ஆரம்பித்தார்கள்.  ஆனால், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனநல ஆலோசகர் அந்த முதல் நாள்  கவுன்சலிங்கின் முடிவில், `உங்களால் இன்னும் இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் கவுன்சலிங்குக்கு வர முடியுமா?’ என்று கேட்டார். முதலில் தயக்கம் காட்டிய அவர்கள், பிறகு பெற்றோருக்குத் தெரியாமல் கவுன்சலிங்குக்கு வந்து போனார்கள். கடைசி கவுன்சலிங்கின்போது, தங்கள் மீதுள்ள குறையையும் தங்களுக்குள் இருக்கும் பிரச்னையையும் உணர்ந்துகொண்டார்கள். வெற்றி சொன்னார்... `அப்பவே நீயோ நானோ ஒரு வார்த்தை `சாரி’னு சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்கத் தேவையில்லை. அதை வனிதாவும் ஒப்புக்  கொண்டார். இருவரும் தங்கள் பெற்றோர்களை கவுன்சலிங்குக்குக் கூட்டி வந்தார்கள். அவர்களுக்கும் கவுன்சலிங் வழங்கப்பட்டது. இப்போது இருவரும் மகிழ்ச்சியாகச் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒரு குட்டி புதுவரவாக ஆண் குழந்தை ஒன்று அவர்கள் குடும்பத்தில் இணைந்திருக்கிறது.

இன்று பெரும்பாலான தம்பதிகளுக்கிடையே பிரச்னை மிக சாதாரணமான விஷயத்தில்தான் தொடங்குகிறது. அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாததால், அது பூதாகரமாக வெடித்து பெரிய பிரச்னையாகிறது. முதலில் `சாரி’ சொல்வதாலேயே பல பிரச்னைகள் உடனடியாக முடிவுக்கு வந்துவிடுகின்றன. அப்படி `சாரி’ கேட்காமல் மனதுகுள்ளேயே பிரச்னையை வைத்திருந்து, அதை வளர்க்கும்போது அது பெரிதாகி, பிரிவுக்கே காரணமாகிவிடுகிறது. பிரச்னை என்றால், கணவன்-மனைவி தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதை உடனடியாகப் பெற்றோர்களிடமோ, மற்றவர்களிடமோ எடுத்துச்செல்லக் கூடாது. முடிந்த வரை தங்களுக்குள் பேசி முடித்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், அவர்களின் வாழ்க்கைத்துணையைப் பற்றிக் குறை கூனால்,  பிரச்னையை உற்று நோக்கி யாரிடம் தவறு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தவறு தன் பிள்ளை பக்கம் இருந்தால், உடனடியாக மன்னிப்புக் கேட்கச் சொல்லி சரிசெய்ய வேண்டும். இதைச் செய்தாலே போதும் திருமண வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

`ட்ரிபுள் எஸ்’ தாரக மந்திரம் மண வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. வாழ்க்கையில் நலத்தோடும் வளத்தோடும் பயணம் செல்ல `ட்ரிபுள் எஸ்’ மந்திரத்தைப் பயன்படுத்த தம்பதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.Trending Articles

Sponsored