"ஸ்ட்ரெஸ் குறைக்க ரெண்டு மருந்து இருக்கு..!" - `லொள்ளு சபா’ மனோகர் #LetsRelieveStress



Sponsored



ஆர்.எஸ்.மனோகர், சிலோன் மனோகர், அடடே மனோகர், சிசர் மனோகர், லொள்ளு சபா மனோகர்... எனத் தமிழ் சினிமாவில் நிறைய மனோகர்கள். இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். அதிலும் 'லொள்ளு சபா மனோகர்' தனிரகம். நிஜ வாழ்க்கையிலும் வெள்ளந்தி மனிதர்... பச்சைமண்ணாக இருக்கிறார். 

எளிமை, எளிமை... அப்படியோர் எளிமை. வடசென்னையின் அசல் தயாரிப்பு. அன்பு செலுத்துவதிலும், பார்த்தவுடனேயே நீண்ட நாள் பழகியவர்போல் பேசுவதிலும் அத்தனை அருமையான மனிதர். அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த நண்பரின் டெய்லர் கடையில் நம்மை உட்காரவைத்துப் பேசினார்...

Sponsored


''இந்த ராயபுரம்தான் சார், நம்ம ஏரியா. பொறந்து வளர்ந்தது எல்லாமே இங்கேதான்’’ என்கிறவர் இன்றும் பழைமை மாறாத மிகச் சிறிய வீட்டில்தான் வசிக்கிறார். ''ரொம்ப டென்ஷனாகவும். கவலையாகவும், மனஅழுத்தத்தோடும் நீங்க இருந்திருக்கீங்களா? அந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல உங்களை எப்படிச் சரிசெய்துக்கிறீங்க?'' என்று கேட்டோம்.

Sponsored


``இன்னாத்துக்கு சார் டென்ஷனாவணும்? குழந்தைங்களுக்கு எப்பவாச்சும் டென்ஷன், பிரஷர்னு எதுனா வருதா? வராது. ஏன்னா, அவங்க எதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. அதுக்காக நான் எந்த விஷயத்துக்கும் டென்ஷனே ஆக மாட்டேனு சொல்ல முடியாது. எனக்கும் எப்பவாவது டென்ஷன் வரத்தான் செய்யும். அந்த நேரத்துல யார் என்ன சொன்னாலும், அதைப் பத்திக் கவலைப்பட மாட்டேன். எனக்கு என்ன தோணுதோ, அதைச் செஞ்சுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன். யாராவது ரொம்ப விவாதம் பண்ணினாங்கனா அமைதியா சிரிச்சிக்கிட்டே போயிடுவேன். அவங்க ரிலாக்ஸானதுக்கு அப்புறம் வந்து பேசுவேன். 

நம்மை டென்ஷனாக்குற இன்னொரு விஷயம், பணப் பற்றாக்குறை. சின்ன வயசுலயே ரொம்பக் கஷ்டப்பட்டுட்டதால பணத்தை நிர்வாகம் பண்றது எனக்கு நல்லாவே தெரியும். பேங்க்ல இருக்கும்போது சம்பளத்துல அந்தந்த மாசத்துக்குத் தேவையான மளிகைப்பொருள்கள், மத்ததையெல்லாம் வாங்கிப் போட்டுட்டு மிச்சத்தை அம்மா கையில கொடுத்துடுவேன். செலவுக்குத் தேவைப்படுறப்போ அவங்கக்கிட்ட வாங்கிக்குவேன். இப்போ அந்தப் பிரச்னை இல்லை.

டென்ஷன்னு வந்துட்டா அதுக்காக கெட்டப்பழக்கத்துக்குப் பின்னால ஓடுறது எப்பவுமே தீர்வாகாது. அது எனக்கு நல்லாத் தெரியும். மனதை அழுத்தும் பிரச்னை வர்ற சமயங்கள்ல அமைதியாக இருப்பேன். இல்லைன்னா சிரிச்சிட்டுப் போயிடுவேன். ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க நான் எடுத்துக்குற மருந்துன்னா, அது அமைதியும் புன்னகையும்தான்.

நான் ஸ்கூல்ல சுமாராதான் படிச்சேன். எஸ்.எஸ்.எல்.சி-யில ஃபெயிலாயிட்டேன். இன்னா பண்றதுனு தெர்லை. நல்லவேளையா கார்ப்பரேஷன் பேங்க்ல மெசஞ்சர் வேலை கிடைச்சுது. சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. மொதல்ல டி.வி-யில நடிக்கலாம்னு முடிவு பண்ணி 'லொள்ளு சபா' பாலாஜி சாரைப் போய் அடிக்கடி பார்ப்பேன். அப்போ அவர் ஆபீஸ் செகண்ட் லைன் பீச் ரோட்டுல இருந்தது. பேங்க் டூட்டி முடிச்சிட்டுப் போயி அவரைப் பார்ப்பேன்.

ஒருநாள், `ஷூட்டிங் ஸ்பாட் எதுனு சொல்றேன். நாளைக்கு வந்துடு’னு சொன்னார். நானும் அடுத்த நாள் காலையிலே போனேன். அவர் அங்கே இல்லை. சீக்கிரமே கிளம்பிப் போயிட்டார். பொதுவா, நான் எதுக்குமே கவலைப்பட மாட்டேன். அன்னிக்கு எனக்குத் தலைசுத்துற மாதிரி ஆயிடுச்சு. பயங்கர டென்ஷனாயிட்டேன். அப்போ செல்போன்ல்லாம் கிடையாது. பாலாஜி சார் எங்கே இருக்கார், எப்பிடிப் போய் அவரைப் பார்க்கறதுனு தெரியலை. வீட்டுக்கு வந்துட்டேன். அன்னைக்கு நைட் விடிய விடிய எனக்குத் தூக்கமே இல்லை. அடுத்த நாள் காலையிலயே கிளம்பி 4 மணிக்கெல்லம் அவரோட ஆபிஸுக்குப் போயிட்டேன். அன்னிக்கி 6 மணி போலத்தான் யூனிட் வேன் வந்துச்சு. அதுல ஏறி, ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். பாலாஜி சாரைப் பார்த்துக்கப்புறம்தான் எனக்கு மனசே ரிலாக்ஸாச்சு. 

அப்போ பாலாஜி, சந்தானம் சார், சுவாமிநாதன் சார்னு நாங்கல்லாம் ஒரு குரூப்பா `அமைதிப்படை’, `சின்ன கவுண்டர்’ படங்களைக் கலாய்ச்சுப் பண்ணின `லொள்ளு சபா’ செம ஹிட்டு. பாலாஜி, சந்தானம் சார் ரெண்டு பேருக்குமே பல்லாவரம் பக்கத்துல இருக்கிற அனகாப்புத்தூர்லதான் வீடுங்கிறதால அங்கேதான் பெரும்பாலும் ஷூட்டிங் நடக்கும். ஆனா, திடுதிப்புனு பாலாஜி இறந்துட்டார். 

அன்னிக்கு மாதிரி என்னிக்குமே என் மனசு கஷ்டப்பட்டதில்லை. ஒரு பட்டம் பறக்க சிக்கு நூல் (மாஞ்சா நூல்) எப்படி முக்கியமோ, அப்படித்தான் அவர் எனக்கு. அதுக்கப்புறம் சந்தானம்தான் எங்களையெல்லாம் அரவணைச்சுக் கொண்டு போனார். அவங்க ரெண்டு பேரும் இல்லைனா, என் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும்னே சொல்ல முடியாது. 

இப்பவும் என்னைப் படங்களுக்கு புக் பண்ண வர்றவங்க, `லொள்ளு சபா பார்க்கிறப்பவே உங்களைப் புடிக்கும்’னு சொல்லுவாங்க. மனசுக்கு சந்தோஷமா இருக்கும். சிக்கு நூல்ல இருக்கிற நுனியைப் பிடிக்கிற மாதிரிதான் வாழ்க்கையும். பிடிச்சிட்டோம்னா அதுக்கப்புறம் கிறுகிறுனு மேல வந்துடலாம்'' என்றவரிடம், ''பேங்க்ல இருந்துக்கிட்டு சினிமா சான்ஸ் எப்படித் தேடுவீங்க... உங்க பேங்க்ல எப்படி இதுக்குல்லாம் அனுமதிச்சாங்க... சும்மா சும்மா லீவு போடுவீங்களா... எப்படிச் சமாளிச்சீங்க... உங்களைவெச்சு அவங்க எப்படிச் சமாளிச்சாங்க?’’ என்று கேட்டோம். 

''இன்னா சார் இப்படிக் கேட்டுட்டீங்க. 2014-ம் வருஷம் வரைக்கும் பேங்லதான் வேலை பார்த்தேன். அங்கேருந்து வர்றப்போகூட 217 நாள் லீவு வெச்சிட்டுதான் சார் வந்தேன். வேலை வேற... சினிமா வேறனு பிரிச்சுடுவேன். அங்கே போனா அவங்க என்ன சொல்றாங்களோ அதைச் செய்வேன். இங்கே வந்தா இவங்க என்ன சொல்றாங்களோ இதைச் செய்வேன். அதனால, எனக்கு எந்த ஸ்ட்ரெஸ்ஸும் வந்ததில்லை. இந்த ஹீரோ ஹோண்டாவில கிளம்பிப் போய்தான் 10 வருஷமா டி.வி., சினிமா வாய்ப்புகளைத் தேடினேன். இப்போதான் கார் வாங்கியிருக்கேன்.’’ என்கிறார் மனோகர். 

*** 



Trending Articles

Sponsored