ஹார்வர்டு தமிழ் இருக்கை... சித்த மருத்துவத்துக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தருமா? #HarvardTamilChair #VikatanExclusiveSponsoredஉலகின் பல நாடுகளின் தலையெழுத்தை நிர்ணயித்த அரசியல் தலைவர்கள், உலகம் வியந்த விஞ்ஞானிகள், தலைசிறந்த மருத்துவர்கள், பொருளாதார நிபுணர்கள், பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்கள், இப்படிப் பேர் சொல்லும்படியான பலரை உருவாக்கியது ஹார்வர்டு பல்கலைக்கழகம். இது ஆரம்பிக்கப்பட்டு 381 வருடங்கள் ஆகின்றன. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.

இப்படிப் பல்வேறு வகையான சிறப்புகளைப் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மொழிகளுக்கு இருக்கை இருக்கிறது. அதன் காரணமாக அந்தந்த மொழிகளுக்கென தனித்தனித் துறைகள் இருக்கின்றன. அதனால், அந்த மொழிகளின் வளம், அறிவியல்பூர்வமான, மருத்துவம் தொடர்பான விஷயங்கள் ஆய்வுசெய்யப்பட்டு, அவை உலகளவில் அங்கீகாரமும் பெற்றுவிடுகின்றன.

Sponsored


உலகின் உயர்தனிச் செம்மொழிகள் மொத்தம் ஏழு. அவை, தமிழ், சீனம், கிரேக்கம், லத்தின், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் பெர்சிய மொழி. இதில் தமிழ் மொழியைத் தவிர மற்ற ஆறு மொழிகளுக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை(Chair) இருக்கிறது.

Sponsored


இந்தக் குறையைப் போக்குவதற்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்கிற அமெரிக்க வாழ் தமிழர்களின் சிந்தனைதான், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முதல் விதை. அந்தச் சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் மருத்துவர் விஜய் ஜானகிராமன், திருஞான சம்பந்தம் மற்றும் வைதேகி. அவர்களைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் ஆர்வலர்களும், பேராசியர்களும், தன்னார்வலர்களாகப் பல இளைஞர்களும் இப்போது இதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

அதில் ஒருவர்தான் பேராசிரியர் ஆறுமுகம். இவர் கணிப்பொறி அறிவியல், மேலாண்மை ஆகிய இரண்டிலும் ஆய்வுப் பட்டம் பெற்றவர். அமெரிக்கா மற்றும் லண்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். தமிழ்நாட்டிலும் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.

அவரைச் சந்தித்தோம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்தால், என்னவெல்லாம் பயன் கிடைக்கும் என்பது பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார்...

"தமிழ் இலக்கியங்களில் ஏராளமான அறிவியல் உண்மைகள் மறைந்துகிடக்கின்றன. இதைப் பற்றித் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் பேசினால் நாம் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், உலகம் ஏற்றுக்கொள்ளாது. உலகம் ஏற்றுக்கொண்டால்தான் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். உதாரணமாக, இந்தியாவில் நாம் டெங்குவுக்குத் தடுப்பு மருந்து தயாரித்தால், அது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்க வேண்டுமென்றால், அதற்கு உலகளவில் ஆய்வுகள் நடந்திருக்க வேண்டும். உலகளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால்தான் அதற்கான ஆய்வுகள் நடக்கும்.

அதற்கு தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் நமக்கான இருக்கைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே நாம் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க முடியும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அமைந்தால், தமிழுக்கென்று தனித்துறை உருவாகும். அனுபவம் மிக்க பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

வீடியோவை காண க்ளிக் செய்க...

வீடியோவை காண க்ளிக் செய்க...

மாணவர்கள் அதிகமாகச் சேர்ந்து படிக்க முடியும்; ஆய்வுகள் செய்ய முடியும். தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட அனைத்து மருத்துவக் குறிப்புகளையும் குறித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கலாம். அங்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் அல்ல... உலகின் எந்த மூலையில் இருந்தும் தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை அங்கே சமர்ப்பிக்கலாம்.

டெங்குக் காய்ச்சலுக்கு மருந்தாக நிலவேம்புக் குடிநீர் இருக்கிறது. பப்பாளி இலைக்குத் தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இருக்கிறது. இது போன்ற ஏராளமான மருத்துவக் குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில், சித்தர் பாடல்களில் கொட்டிக்கிடக்கின்றன. இந்தக் குறிப்புகளை ஓர் ஆய்வறிக்கையாக (Thesis) ஹார்வர்டில் சமர்ப்பித்தால். அங்கே உள்ள ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூலில் அதைப் பற்றிய ஆய்வுகளைச் செய்வார்கள்.

நோயைக் குணப்படுத்தும் தன்மை இருப்பது உறுதியானால், உலகளவில் நம் தமிழ் மொழிக்கும், நம் சித்த மருத்துவத்துக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

இதற்கு சமீபத்திய உதாரணம் யோகா. 300 ஆண்டுகளாகப் பயிற்றுவிக்கப்படும், மேற்கொள்ளப்படும் கலை 'யோகா.’ ஆனால், 38 ஆண்டுகளுக்கு முன்னதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் உடலுக்கும் மனதுக்கும் சிறந்த பயிற்சியாக இருந்து, அமைதியைத் தருவது யோகாதான் என்று அறிவித்தது. அதற்குப் பின்னர்தான் உலகளவில் யோகா பரவியது. சமஸ்கிருத மொழியின் மூலம்தான் யோகா, ஹார்வர்டில் ஆய்வுக்கு வந்தது. சமஸ்கிருதத்துக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை இருக்கிறது.

தமிழ்மொழியில் சொல்லப்பட்ட மருத்துவ முறைகளும் உலகளவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அதற்கு ஹார்வர்டு தமிழ் இருக்கை கண்டிப்பாக உதவி புரியும்" என்கிறார் பேராசிரியர் ஆறுமுகம்.

இது தொடர்பாக ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, உலகளவில் ஒருங்கிணைப்புகளைச் செய்துவருபவர்களில் ஒருவரான அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிரவீனாவிடம் பேசினோம். “உலகின் தலைசிறந்த மொழி தமிழ். பல்வேறு மொழியியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்ட விஷயம் இது. அதேபோல், சித்த மருத்துவத்தில் சொல்லப்படாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. உதாரணமாக, தாயின் கருவறையில் இருக்கும் ஒரு சிசு, ஆறு வாரங்களில் என்ன செய்யும், பத்து வாரங்களில் என்ன செய்யும், அதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் 'திருமந்திரத்தில்' சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நவீன மருத்துவத்தில் ஸ்கேன் போன்ற கருவிகள் வந்த பின்னர்தான் கருவறையில் இருக்கும் சிசு என்ன செய்யும் என்று நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், நம் தொன்மை உலகளவில் இன்னும் போய்ச் சேரவில்லை.

அதற்கு ஹார்வர்டு தமிழ் இருக்கை கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறோம். இன்னும் பத்துக் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் இதற்காக நம் தமிழர்கள் நிதி உதவி அளித்து வருகிறார்கள். மதுரையிலிருந்து ஓர் ஆட்டோ ஓட்டுநர் ஆயிரம் ரூபாய் அனுப்பியிருந்தார். அவரின் இரண்டு நாள் வருமானத்தை நம் மொழிக்காகத் தந்திருக்கிறார். அவரைப் போன்ற பற்றாளர்களால்தான் தமிழ் இன்னும் செழிப்போடு வாழ்கிறது.

நவம்பர் 18-ம் தேதி பெண்கள் அனைவரும் சேர்ந்து அமெரிக்காவில் 'மொய் விருந்து' ஒன்று வைக்க இருக்கிறார்கள். அதன் மூலம்

கிடைக்கும் வருமானத்தையும் தமிழ் இருக்கைக்காகக் கொடுக்கப் போகிறோம். எங்கள் ஆசையெல்லாம் எப்படியாவது நம் தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை வேண்டும். அவ்வளவுதான்" என்கிறார் மென்பொறியாளர் பிரவீனா.

தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் வேலாயுதத்திடம் ஹார்வர்டு தமிழ் இருக்கை குறித்துப் பேசினோம்... “தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்த பண்டைய ஓலைச் சுவடிகளில், எழுபது சதவிகிதம் மருத்துவம் தொடர்பான சுவடிகள்தான். அதனால் பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்தால், மருத்துவம் பற்றி அதிகச் செய்திகள் கிடைக்கும். அதேபோல் இருக்கை உறுதியானால், சித்த மருத்துவம் பற்றிய அதிகமான பாடங்களைச் சேர்க்க வேண்டும். இதைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவர்கள் அனைவரும் இந்த ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுவுடன் இணைந்து செயல்படுவோம்" என்றார்.

சமஸ்கிருதத்துக்கு இந்திய அரசின் உதவியால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை இருக்கிறது. ஆனால், பழைமை, தனித்தன்மை, மொழிக்கு ஆதாரமான ஒட்டுமொத்த எழுத்துகள், பலமொழிகளை உருவாக்கும் தாய்மைத்துவம், இலக்கிய வளம்... எனப் பல தகுதிகளை உடைய மொழியான தமிழுக்கு இருக்கை இல்லை.

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நாற்பது கோடி ரூபாய் தேவை. தமிழ்நாடு அரசு பத்துக் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. இந்திய அளவில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்ததாக அதிகமாக வரிசெலுத்தும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், மத்திய அரசு இதற்காக ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை. திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும், தன்னார்வலர்களும்தான் நிதியைத் திரட்டிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored