"மருத்துவம்தான் நிஜமான இறைப்பணி!" - 10 ரூபாய் டாக்டர் ஜனார்த்தனன்Sponsored" நான் என்ன சாதனை பண்ணிட்டேன்னு என்னை இன்டர்வியூ பண்ண வந்திருக்கீங்க. ஃபீஸ் இல்லாம டீரீட்மென்ட் கொடுக்கிறதுக்கு 'சேவை' ன்னு நீங்கதான் பேர் வச்சுருக்கீங்க, எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் தெரியல..." -இயல்பாகப் பேசுகிறார் மருத்துவர் ஜனார்த்தனன்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கும், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கும் மருத்துவர் ஜனார்த்தனன்தான் ஆதர்சம். ஃபீஸ் வாங்காமல் வைத்தியம் பார்ப்பது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. "ஒரே சிட்டிங்ல வந்திருக்கிறது என்ன நோய்ன்னு கண்டுபிடிக்கிறதுல அவர் அளவுக்குத் திறமையுள்ள மருத்துவரை பார்த்ததேயில்லை" என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

Sponsored


பணியிலிருந்து ஓய்வு பெற்று 20 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவரது பணி ஓயவில்லை இன்றளவும் வைத்தியம் பார்த்துவரும் ஜனார்த்தனனுக்கு 79 வயது.

Sponsored


ஜனார்த்தனன் மருத்துவர் மட்டுமல்ல... எழுத்தாளரும் கூட. 'மனித இயல்பும், வாழ்க்கை நெறியும்’ என்ற இவரது புத்தகம் பலரால் பாராட்டப்பட்ட ஒன்று. சர்வதேச அளவில் வெளிவரும் மருத்துவ இதழ்களில் தீவிரமாக எழுதியும் வருகிறார்.

பரபரப்பு ஓய்ந்து சற்று இயல்பான நிலையில், ஜனார்த்தனனிடம் பேசினோம்.

" என் சொந்த ஊர் பல்லடம். என் அப்பாவும் டாக்டர். புதுக்கோட்டை மாகாண மருத்துவராக இருந்தார். நான் 1966 -ம் ஆண்டில் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல மருத்துவப் படிப்பை முடிச்சேன். மேலூருக்குப் பக்கத்துல இருக்கிற வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலதான் முதல் வேலை. அதற்குப் பிறகு, கொஞ்சநாள் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜுல ட்யூட்டரா இருந்தேன்.

மேல்படிப்புக்குப் போகலாமேன்னு அரசு வேலையைவிட்டேன். ஆனா, அதுக்கப்புறம் ஒரு மனமாற்றம். 'மருத்துவ சேவைக்கு இந்தப் படிப்பே போதும்... நேரடியா மக்கள்கிட்ட போவோம்'ன்னு மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1970- ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தேன். அப்பவே ஓய்வு நேரங்கள்ல தனியா சிகிச்சை கொடுப்பேன். அப்போ 3 ரூபாய் வாங்குவேன். இப்போ 10 ரூபாய். அவ்வளவுதான்.

மருத்துவம்ங்கிறது தொழிலில்லை. அது ஒரு தெய்வப்பணி. மனுஷன் சாமியைப் பார்த்துத்தான் கையெடுத்துக் கும்பிடுவான். அடுத்து அய்யா நீங்கதான் காப்பாத்தணும்னு டாக்டரைப் பார்த்துக் கும்பிடுவான். அப்படின்னா அது எவ்வளவு மகத்தான வேலை.

1997 -ம் வருஷத்துல சுகர் ஃபாக்டரியில இருந்து ஓய்வு பெற்றேன். ஆனா, என்னால சும்மா இருக்க முடியாது. தொழிலாளர்களும் இந்த டாக்டர் எங்களுக்கு வேணும்னு கேட்டதால ஆலை நிர்வாகம் `நீங்க வரணும் சார்’னு சொன்னாங்க. சரி... எங்கேயிருந்தாலும் வேலைதான்... `சரி வர்றேன்’னு சொல்லிட்டு போய் வந்துக்கிட்டிருக்கேன். மருத்துவப் பணிக்கு இந்த இடம்னு இல்லை. போற வழியில ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைன்னாலும் இறங்கி சிகிச்சை கொடுத்துட்டுப் போவேன். வீட்லயும் ட்ரீட்மென்ட் கொடுப்பேன். யார்கிட்டயும் ஃபீஸ்னு கேட்கிறதில்லை.

பணம் பெரிய விஷயம் கிடையாது. எங்க ஆலைத் தொழிலாளர்கள் எல்லார் வீட்டுலயும் நானும் ஓர் ஆள். மூணு தலைமுறையா வைத்தியம் பார்த்துட்டு இருக்கேன். இதைவிட வாழ்க்கையில பெரிய பாக்கியம் ஏதும் இல்லை. ஆலையில ரிட்டயர்டு ஆன பலபேருக்குக் குறைவான பென்ஷன்தான் வருது. அதுனால அவங்களுக்கு வெளியில போயி வைத்தியம் பார்க்குற அளவுக்கு சக்தி இல்லை. அவங்களை எல்லாம் நாமதான் பார்த்துக்கணும்.

`ஜனார்த்தன்கிட்டப் போனா கண்டிப்பா சரியாயிடும்’னு எல்லாரும் நம்புறாங்க. அவங்க நம்பிக்கைக்குக் பாத்திரமா கடைசி வரை இருந்தாலே போதும்" என்கிறார் மருத்துவர் ஜனார்த்தனன்.

சர்க்கரை ஆலையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மோகனூர் பழனியப்பனிடம் பேசினோம்.

"என் குடும்பத்துக்கு மட்டும் இல்லை. இங்கே வேலை பார்க்குற 1,200 பேரோட குடும்பத்துக்கும் அவர்தான் தெய்வம். அவர் ரிட்டையர்டு ஆனப்போ, இவரே மருத்துவராகத் தொடரணும்னு எல்லாத் தொழிலாளர்களும், அதிகாரிகளும் சேர்ந்து மனு கொடுத்தோம். நிர்வாகமும் அவர்கிட்ட கேட்டுக்குச்சு.

அவரோட ட்ரீட்மென்ட் அவ்வளவு நல்லா இருக்கும். அவர் கண்ணால பார்த்தே இது இன்ன வியாதினு சொல்லிடுவார். நாம டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம்னா கரெக்டா இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் குறைஞ்சது 20 நிமிசமாவது ஒதுக்குவார். இந்த மாதிரி மனிதரை பார்க்குறதே ரொம்ப அபூர்வம்" என்று நெகிழ்ந்து பேசுகிறார் பழனியப்பன்..!Trending Articles

Sponsored