பாண்டியம்மாள் வயது 97, அருணாச்சலம் வயது 67... மதுரை மருத்துவர்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகம்! #SaveOldAgePeopleSponsored``வயதான, உடல்நலமில்லாத உங்கள் பெற்றோரையோ, தாத்தா-பாட்டிகளையோ உங்களால் கவனிக்க முடியவில்லை என்பதற்காக அவர்களை சாலையோரம் தூக்கி எறிந்துவிடாதீர்கள், அவர்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். கடைசிவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்'' அழுத்தம் திருத்தமாக உறுதிமொழி கொடுத்து, இருகரம் நீட்டி அழைக்கிறது... `நேத்ராவதி - வலி நிவாரணம், பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம்.’

மதுரையைச் சேர்ந்த இந்த அமைப்பின் லட்சியம், மனித நேயம், மகத்தான மருத்துவச் சேவை. கேள்விப்பட்டதும், கிளம்பிவிட்டோம். மதுரை கடச்சனேந்தலில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது `நேத்ராவதி’. கால்நடைகள் உள்ளே நுழையாமல் இருக்க முள்வேலி போடப்பட்டிருக்கிறது. வாசலில் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. மேலும் சில இருசக்கர வாகனங்கள் நிறுகொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்தோம். கீழ்த்தளத்தில் 25 படுக்கைகளுடன் செயல்பட்டுவருகிறது இந்த அமைப்பு. அங்கே 24 முதியவர்கள் தங்கியிருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளாலும், உறவினர்களாலும் `இனி நீங்கள் எங்களுக்கு வேண்டாம்’ என உதறி எறியப்பட்டவர்கள். சிலரு யாருமற்ற அனாதைகள். இவர்களைப் பரிவோடும் அக்கறையோடும் பார்த்துக்கொள்வதை, வேண்டிய உடை, உணவோடு மருத்துவச் சிகிச்சைகளையும் கொடுத்து கவனித்துக்கொள்வதை ஒரு சேவையாகக் கருதுகிறார்கள் `நேத்ராவதி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

Sponsored


Sponsored


நம்மை வரவேற்றார் டாக்டர் பாலகுருசாமி. இவரும், இவருடைய நண்பர்களான டாக்டர்கள் அமுதநிலவன், சபரி மணிகண்டன், வித்யா மஞ்சுநாத், அருண்குமார், வெங்கடேஷ், பிரபுராம் நிரஞ்சன், பிசியோதெரபிஸ்ட் ரம்யா ஆகியோரும் சேர்ந்து இந்த மையத்தை நடத்திவருகிறார்கள். தங்களுடைய மருத்துவப் பணி நேரம் போக, மீதி நேரங்களில் `நேத்ராவதி’-க்கு வந்து சேவை செய்கிறார்கள். ஏழை, எளிய மக்களுக்காகவே செயல்படுகிறது `நேத்ராவதி’.

``இந்த மையத்தை எப்படி ஆரம்பித்தீர்கள்..?’’ என்று பாலகுருசாமியிடம் பேச்சைத் தொடங்கினோம்.

``நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக வேலை பார்க்கிறவர்கள். வேலை நேரம் போக, மீதியுள்ள நேரத்தில் மற்றவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது. கூடிப் பேசினோம். யாருமற்றவர்கள், கைவிடப்பட்டவர்களுக்காக ஒரு வலி நிவாரண மையம் தொடங்கலாம் என்று முடிவெடுத்தோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் வலிகளுடன் அவதிப்படுபவர்கள், நோய்வாய்ப்பட்டு அனாதைகளாக சாலையோரங்களில் விடப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களது வாழ்வின் இறுதிநாள் வரை அவர்களை எந்த வலியுமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மையத்தைத் தொடங்கினோம்.

முதலில் `ஐஸ்வர்யம் அறக்கட்டளை' என்ற பெயரில், எங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினோம். 2015-ம் ஆண்டு, இந்த வாடகைக் கட்டடத்தில் 10 படுக்கைகளுடன் மையத்தைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் மணிகண்டன் என்ற சமூக சேவகர் எங்களுக்கு தோளோடு தோள் கொடுத்து உதவியாக இருந்தார். அவரைப்போல் பலர் உதவியிருக்கிறார்கள். இப்போது ஜனார்த்தனன் - ஜலஜா தம்பதியரின் உதவியில் மையத்துக்காகச் சொந்தமாகவே ஒரு கட்டடம் கட்டிவருகிறோம். எதிர்காலத்தில் 100 படுக்கைகள் கொண்ட மையமாக இதை மாற்றுகிற முயற்சியும் நடந்துவருகிறது; மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் செயல்திறனை அதிகரிப்பதற்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கவும் திட்டம் வைத்திருக்கிறோம்.'' என்றவரிடம், `நேத்ராவதி’ என்று இந்த மையத்துக்கு பெயர் வந்த காரணத்தை விசாரித்தோம்.

``எங்கள் குழுவிலிருக்கும் டாக்டர் அமுதநிலவனின் அம்மாவின் பெயர்தான் நேத்ராவதி. அவரின் நினைவாகத்தான் இந்தப் பெயரை மையத்துக்குச் சூட்டியிருக்கிறோம். அவர் ஒரு மருத்துவர். அவருக்குப் புற்றுநோய் இருந்தது. அதைப் பற்றி அறியாமல், அவர்பாட்டுக்கு மருத்துவச்சேவை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நோய் முற்றி இறக்கும் வரை அவர் ஏழை, எளியோருக்கு மருத்துவ சேவை செய்துகொண்டிருந்தார். அந்தத் தாயின் நினைவாக, ஏழை மக்களுக்கு உதவுவதற்காக இந்த மையத்தைத் தொடங்கினோம்.

ஒருநாள் ஒரு மூதாட்டி, கள்ளந்திரி என்ற இடத்தில், ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரத்தில் அனாதையாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே அவரைப் பார்க்கக் கிளம்பினோம். அந்த மூதாட்டி, சோழவந்தானைச் சேர்ந்தவர், பெயர் சந்தனம்மாள். 72 வயது. இரண்டு கண்களிலும் பார்வை பறிபோயிருந்தது. அவரை மீட்டு சிகிச்சையளித்தோம். கண் மருத்துவர்கள், `ஒரு கண்ணில் மட்டுமே அறுவைசிகிச்சை செய்து, பார்வை வரச்செய்ய முடியும்’ என்றார்கள். அதன்படி சந்தனம்மாளுக்கு சிகிச்சையளித்து, ஒரு பார்வை கிடைக்க வழி செய்தோம்.

உடல்நலம் தேறிய பிறகு, அந்த மூதாட்டி, வீட்டுக்குச் செல்வதாகக் கூறினார். `எங்கே போவீர்கள்?’ என்று கேட்ம். `எனக்கு மகன், மகள் இருக்கிறார்கள்’ என்றார். வறுமையான சூழலில் இருந்த மகன்தான் சந்தனம்மாளை ரோட்டில் விட்டுச் சென்றிருக்கிறார். அவரின் மகனை அழைத்து விசாரித்தோம். தன் தவறை ஒப்புக்கொண்டார். இப்போது மகனோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார் அந்தத் தாய்.

இன்னொரு சம்பவம்... மதுரை பெல்ஹோட்டல் பகுதியில் தலை, கை, கால்களில் அடிபட்டு ஒரு மூதாட்டிக் கிடக்கிறார் என்று தகவல் வந்தது. போய்ப் பார்த்ததில், அவர் பெயர் பாண்டியம்மாள் என்று அறிந்துகொண்டோம். அவர், 97 வயது மூதாட்டி. அவர் பேச்சு தெளிவாக இல்லை. அவருக்கு உறவுகள் என்று யாரும் கிடையாது. நாங்கள் ஆடைகளைக் கொடுத்தால்கூட அதை அவர் அணியவில்லை. ஒரு பெட்ஷீட்டை எடுத்துத் தன் உடலில் சுற்றிக்கொண்டார். குளிர்காலமாக இருந்தால்கூட எதையும் விரிக்காமல், தரையில்தான் படுத்துக்கொள்வார். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை, மறதி காரணமாக அவரிடமிருந்து வேறு விவரங்கள் எதையும் பெற முடிவில்லை. அவர் இங்கேதான் இருக்கிறார். தன் விருப்பப்படியே நடந்துகொள்கிறார். அதில் நாங்கள் தலையிடுவதில்லை. இவர்கள்போல ராமானுஜமம்மாள், அருணாச்சலம் போன்ற முதியவர்கள் இந்த முதுமையிலும் நிம்மதியாக இங்கே இருக்கிறார்கள்'' என்றார்.

மையத்தைச் சுற்றி வந்தால் நெஞ்சம் பதறுகிறது. `முதியவர்கள் குழந்தைக்குச் சமம்’ என்று சொல்வார்கள். குழந்தையை `வேண்டாம்’ என்று ஒதுக்கித்தள்ள மனிதர்களுக்கு மனம் வருமா? முதுமை அடைவது பாவமா? முதியவர் அருணாசலம் அருகே நின்றோம். அவருடன் பேச்சுக்கொடுத்தோம். அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை. பார்வை தெரியவில்லை. குழறிக் குழறிப் ஒவ்வொரு வார்த்தையாகப் பேரைச் சொல்கிறார். ``அ... ரு... ணா... ச... ல... ம்...’’ அவர் இந்த மையத்துக்கு வந்து சேர்ந்த கதையைச் சொன்னார் டாக்டர் அமுதநிலவன்...

``வயசு 67ஆகுது. இவருக்கு சொந்த ஊரு ராஜபாளையம். உறவுனு யாரும் இல்லை. எப்படியோ பொழைப்புக்காக மதுரைக்கு வந்தார். கிடைக்கிற வேலையைப் பார்ப்பார். கூலி வேலைதான். வேலை கிடைக்கலைனா சும்மாதான் இருக்கணும். ஓட்டல்ல சாப்பிட்டுட்டு, பிளாட்பாரத்துல தூங்குவார். ஒருநாள் ராத்திரி பிளாட்பாரத்துல தூங்கிக்கிட்டு இருந்தப்போ, ஒரு கார் அவரோட கால்ல ஏறிடுச்சு. யாரோ காப்பாத்தி, மதுரை அரசு மருத்துவமனையில சேர்த்திருக்காங்க. அந்த விபத்துல அவரோட வலது கால் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டுருச்சு. அந்தக் காலை மடக்க முடியாது. வளைஞ்ச மாதிரிதான் இருக்கும். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில சரவணன்னு ஒருத்தர்தான் உதவியா இருந்திருக்கார். கொஞ்சம் இவர் உடம்பு தேறினதும், ஆஸ்பத்திரியில இவரை வச்சுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் மணிகண்டன்னு ஒருத்தர், சரவணன்கிட்ட நம்ம அமைப்பைப் பத்திச் சொல்லியிருக்கார். சரவணன், இவரை இங்கே வந்து சேர்த்தார். இங்கே அருணாசலம் வந்து சேர்ந்து ஒரு வருஷம் ஆகுது. அவர் பாட்டுக்கு இருப்பார். கொடுக்கறதைச் சாப்பிடுவார். என்ன... நடக்க முடியலை. பெட்லயேதான் இருந்தாகணும். அந்த சரவணனும் ரெண்டு தடவை வந்து பார்த்துட்டுப் போனதோட சரி. எங்களுக்கு இவங்க எல்லாருமே குழந்தைங்க. பெட்ஷீட்டை டிரெஸ்ஸா போட்டுக்குற பாண்டியம்மா, நடக்க முடியாத அருணாச்சலம், அப்பப்போ சிரிப்புக் காட்டுற ராமானுஜமம்மா... இவங்க எல்லாருக்கும் நாங்க முதியோர் இல்லம் நடத்தலை. இது எங்களைப் பொறுத்தவரைக்கும் குழந்தைகள் காப்பகம்!’’ என்கிறார் அமுதநிலவன்.

`மருத்துவம் புனிதமானது’... இதன் அருமையை நன்கு உணர்ந்திருக்கிறார்கள் `நேத்ராவதி’ அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள். அதனால்தான் சக மனிதர்களின்பால், குறிப்பாக முதியோரின் மேல் அக்கறைகொள்கிறார்கள். இவர்களின் சேவையை மனதார வாழ்த்தலாம்.Trending Articles

Sponsored