நடைப்பயிற்சி, சுடுநீர் ஒத்தடம், நுணா இலைக் குளியல்... முதுமைக்கால மூட்டுவலியைப் போக்க சில ஆலோசனைகள்!முதுமைக் காலங்கள் இனிமையானவை. ஆனால், நோய் நொடியின்றி மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் இந்தக் காலங்கள் கழிய வேண்டும். `வயதாகிவிட்டதே...' என்று சோர்ந்து போகாமல் உடல் நலனில் அக்கறை செலுத்தினால் முதுமை இனிமையாகக் கழியும்.  

`எனக்கு வயதாகி விட்டது. இனிமேல் எப்படி நாள்களைக் கடத்துவது? எனது உடல்நிலை மட்டுமல்ல... மன நிலையும்கூட கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது?' - 50 வயதைக் கடந்த பலருக்கு இதுபோன்ற  எண்ணங்கள் எழுவது இயல்பு.

Sponsored


Sponsored


ஆடி ஓடிக் களைத்த கால்கள் ஓய்வு கேட்கும். கை நிறைய காசு இருந்தாலும் மனம் ஆசைப்பட்ட இடத்துக்குச் செல்ல உடல் ஒத்துழைப்பு தராமல் போகும். மனதளவில் தனிமை சூழும். வேலை செய்து ஓய்வு பெற்றோருக்கு, வேலை இல்லை' என்ற ஏக்கமும் சளி, காய்ச்சல், தலைவலி வந்தால்கூட தனக்கு ஏதோ பெரிய நோய் வந்துவிட்டதைப் போன்ற உணர்வும் உண்டாகும். 

Sponsored


ஓய்வுபெற்ற முதியவர் ஒருவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். ஓய்வுபெற்ற ஆறாவது மாதத்தில் ஒருநாள் சளி, இருமலால் மிகுந்த அவதிப்பட்டார். அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இப்போது இந்த மழைக் காலம் தொடங்கியதும் சளியின் தொடர்ச்சியாக வறட்டு இருமல் ஏற்பட்டது.  மீண்டும் நமக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதோ? என்ற பயத்துடன் என்னிடம் வந்தார். அவரிடம், தினமும் செய்யும் வேலைகளை கேட்டறிந்தேன். 

தினமும் அதிகாலையில் கண்விழிக்கும் அவர், இரண்டு மைல் தூரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கூடுதலாக தினமும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும்படி கூறினேன்.  உணவு முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னேன். இப்போது குணமடைந்து வருகிறார்.

பொதுவாக இதுபோன்ற சூழல்களில் அவர்களுக்குத் தேவை அவர்களது மனதில் இருக்கும் பயத்தை போக்குவதுதான். நிறைய குழப்பங்கள் இருக்கும். அவற்றையும் உடல் நிலை பற்றிய சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினால் முதுமைக்காலங்கள் இனிமையாகும். மன ஆரோக்கியத்துக்கு தினமும் மூச்சுப்பயிற்சி, தியானப் பயிற்சி, இசைப் பயிற்சி, யோகா பயிற்சி செய்ய வேண்டும். மேலும், மனதுக்குப் புத்துணர்ச்சி தரும் இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பிரார்த்தனைகளில் ஈடுபடுவதுடன் நெடுங்காலமாகச் செய்ய விரும்பிய சில நற்காரியங்களை இந்த ஓய்வுக் காலங்களில் செய்யலாம்.  

வயதானவர்கள் தங்களை அதிகமாகப் பாதிக்கும் பிரச்னைகளாகச் சொல்வது, முழங்கால் வலி, இடுப்பு வலி, தூக்கமின்மை, பசியின்மை போன்றவற்றையே. அதுவும் இந்த மழை மற்றும் குளிர் காலங்களில் ஒவ்வொரு மூட்டுகளாக வலி வந்து படுத்தி எடுக்கும். இதுபோன்ற வலிகளில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.  

· அதிகாலையில் வலி அதிகமாக இருக்கும். அதேபோல் மாலை நேரங்களில் பனிப்பொழிவு ஆரம்பிக்கும்போது வலி அதிகரிக்கும். அத்தகைய சூழலில் உடலை தளர்வுபடுத்தும் பயிற்சிகள் செய்யலாம். 
·    சுடுதண்ணீர் ஒத்தடம் நல்ல பலன் தரும். மூட்டுகளுக்கு எண்ணெய் தடவி 30 நிமிடங்கள் கழித்து ஒத்தடம் கொடுக்கலாம். 
·     இஞ்சிக் கஷாயம் வலிகளுக்கு உதவும். இவை மூட்டுகளில் சேரும் நீரை வெளியற்ற உதவுகிறது. 
·    எளிதாக செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
·    தினமும் குளிப்பதற்கும் சுடுதண்ணீர் பயன்படுத்தலாம். இவை உடல் வலியைக் குறைக்கும்.

மழைக் காலங்களில் சளி, வறட்டு இருமல், தும்மல், தொண்டையில் தொற்றுவரும். சில நேரங்களில் காய்ச்சல் வரும். இவற்றிலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
·    நான்கு துளசி இலைகளை தினமும் மென்று சாப்பிடலாம்.
·     எலுமிச்சைப் பழம் அல்லது தேனை சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். 
·    அதிமதுரம் பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம். 
·    தேனை, நாவால் எடுத்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் குறையும். 
·    உணவுடன் குறைந்த அளவு நெய் சேர்த்துச் சாப்பிடுவது இருமலைக் கட்டுப்படுத்தும்.
இவற்றையெல்லாம் கடந்து, வயதானவர்கள் தினமும் ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இவற்றில் சிறந்த பயிற்சியாக நான் பரிந்துரைப்பது யோகா பயிற்சிகளைத்தான். இவை எளிமையானதாக இருப்பதுடன் உடலுக்கும், மனதுக்கும் ஏற்ற பயிற்சியாக இருக்கும். 

இவைதவிர யூகலிப்டஸ், நொச்சி போன்ற மூலிகைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளிப்பது நல்லது. வாதநாராயணன் இலைகளுடன் நுணா இலையைச் சேர்த்தும் கொதிக்க வைத்துக் குளிக்கலாம். இவை கை-கால், மூட்டுகளில் வரும் வீக்கம், வலி போன்றவற்றில் இருந்து விடுபட உதவுவதுடன் வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் விரட்டும்.
கோதுமை மாவை வெறுமனே சட்டியில் போட்டு வறுத்து அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிடுவது மூட்டு வலி பாதிப்புகளில் இருந்து நிவாரணம் தரும். வலி உள்ள இடங்களில் வேப்பெண்ணெயை சூடுபடுத்தி தேய்த்து அதன்மீது ஒத்தடம் கொடுத்துவந்தாலும் இதம் தரும்.Trending Articles

Sponsored