சர்க்கரைநோய் முதல் எக்மோ சிகிச்சை வரை... ஜெயலலிதாவின் உடல்நிலையும் சிகிச்சைகளும்! #RememberingJayalalithaa



முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அங்கே தொடர்ச்சியாகப் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும், சிகிச்சைகள் பலனளிக்காமல் டிசம்பர் 5-ம் தேதியன்று, கார்டியாக் அரெஸ்ட்டால் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Sponsored


ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைப்போலவே அவரின் உடல்நலமும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வந்திருக்கிறது. இறக்கும் வரையிலும் அவருக்கு என்னென்ன உடல் நலப் பிரச்னைகள் இருந்தன என்பதையும், அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பதையும் பார்ப்போம்

Sponsored


ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைவதற்கு மிக முக்கியக் காரணம் அவரின் உடலிலிருந்த சர்க்கரையின் அளவுதான். 1997-ம் ஆண்டுக்குப் பிறகு, சர்க்கரைநோயின் தாக்கம் அவருக்குப் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.  

Sponsored


உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரிந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமலும், உணவு விஷயத்தில் அக்கறையின்றி இருந்ததாகவும் அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அதனால் அவருக்கு சர்க்கரையோடு, ரத்த அழுத்தமும் சேர்ந்துகொண்டது. 
2014 -ம் ஆண்டு சிறையிலிருந்தபோது சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டுமே அதிகரித்தன. சிறையிலிருந்து வெளிவந்தபோது ஜெயலலிதாவின் உடல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்தபடியே சிகிச்சைகள் எடுத்துக்கொண்டார். பிறகு அவருக்குச் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டது.

இதற்கிடையில், காலில் ஓர் அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட பாக்டீரியா கிருமித் தொற்றுதான் அவரின் இறப்புக்குக் காரணம் என்று பின்னாளில் மருத்துவர்களால் சொல்லப்பட்டது

அந்த `செப்சிஸ்’ (Sepsis) எனப்படும் 'செப்டிமீசியா' (Septicemia) கிருமித்தொற்று அதிகமானதால்தான் செப்டம்பர் 22 -ம் தேதி அவருக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்குக் கிருமித்தொற்றை அழிப்பதற்கான ஆன்டி பயாக்டிக் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆனால், கிருமித்தொற்றை முழுமையாக அழிக்க முடியவில்லை. 

அதன் பாதிப்புகள் நுரையீரல் வரை தாக்கியிருந்ததே அதற்குக் காரணம். அதனால்தான் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தது. 
சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்ய, செயற்கை சுவாசக் கருவியின் மூலம் (Medical Ventilator) அவருக்கு சுவாசம் அளிக்கப்பட்டது. 
நுரையீரல் தொற்று ஓரளவுக்குச் சரியான பின்னர்,  நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜன் செல்லும் வகையில் 'ட்ரக்கியோஸ்டோமி' (Tracheostomy) சிகிச்சையளிக்கப்பட்டது. அதேபோல் கை, கால் செயல்பாடுகளுக்காக, பிசியோதெரபி சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஓரளவுக்கு உடல்நிலை தேறி வந்தார். ஆனால், திடீரென்று இதயமும் நிறுநீரகமும் பாதிப்படைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதயத் துடிப்பு தற்காலிகமாக நின்று போனது.     

இதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சிகிச்சைகள் (Cardiopulmonary resuscitation-CPR) உடனடியாக மேற்கொள்ளப்பட்டன .
அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ (ECMO) கருவியுடன் ரத்த நாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன. தொடர்ச்சியாக 24 மணி நேரம் கடந்த பின்னரும் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்க முடியாமல் போகவே டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போலோ மருத்துவமனையில் அவருக்குத் தொற்றுநோய், கிரிட்டிகல் / இன்டன்சிவ் கேர்,  சர்க்கரைநோய், நுரையீரல், இதயம் ஆகிய பாதிப்புக்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிகிச்சைகள் பலனின்றி கடந்த வருடம் இதே நாளில் நம்மை விட்டுப்பிரிந்தார் ஜெயலலிதா.



Trending Articles

Sponsored