சர்க்கரைநோய் பாதித்தவர்கள் கால்களைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை, கூடாதவை! #DiabetesAlert



Sponsored



மாறிவரும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகி வருகிறது. 'சர்க்கரைநோய் வந்துவிட்டாலே.,  'கால்களை கவனிச்சுக்கணும்' என்ற மருத்துவர்கள் அறிவுரை  சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

சர்க்கரை நோய்க்கும் கால்களுக்கும் என்ன தொடர்பு? 

Sponsored


`டயாபடிக் ஃபுட் சொஸைட்டி ஆஃப் இந்தியா (Diabetic Foot Society of India)' என்ற அமைப்பு ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான சர்க்கரை நோய் மாநாட்டை நடத்திவருகிறது. இந்தாண்டு சென்னையில் நடந்த 15-வது சர்வதேச மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எலும்பு சிறப்பு மருத்துவர் அரவிந்த் ராஜகோபாலனிடம் கேட்டோம்.

 “சர்க்கரை நோயாளிகளுக்கு முதலில் பாதிக்கப்படுவது கால்கள். 'உச்சி முதல் உள்ளங்கால் வரை பரிசோதிக்க வேண்டும்' என்று பொதுவாக மருத்துவத்தில் சொல்வார்கள். அதை நாங்கள் 'உள்ளங்கால் முதல் உச்சி வரை' என கொஞ்சம் மாற்றிச் சொல்வோம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் மிகவும் முக்கியம். உணர்ச்சி இழப்பது, தடிப்புகள் வருவது, பாதம் வெடிப்பது, வறண்டு போவது என எந்தவொரு அறிகுறியும் முதலில் கால்களில்தான் ஏற்படும். காலில் ஏற்படும் பாதிப்புகளில் மிகவும் ஆபத்தானது, புண்.

Sponsored


எது ஆறாத புண்?

சாதாரணமாக ஒருவருக்கு புண் வந்தால், மூன்று வாரத்துக்குள் ஆறிவிடும். மூன்று வாரங்களையும் தாண்டி புண் ஆறாமல் இருந்தால், அது ஆறாத புண். அந்த ஆறாத புண்ணுக்கான காரணிகள் என்னவென்று பார்த்தால் ரத்தக்குழாய் பாதிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பராமரிப்பின்மை, சர்க்கரைநோய். புண் ஏற்படும்போது, சர்க்கரையின் அளவு 400 mg/dl-க்கும் அதிகமாக இருக்கும். பொதுவாக 200 mg/dl-க்குள் சர்க்கரையின் அளவு இருப்பதுதான் ஆரோக்கியமானது. 

ஆறாத புண் ஏற்பட்டுள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு, முதலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சிகிச்சைகள்  மேற்கொள்ளப்படும். அதன்பிறகு அறுவை சிகிச்சை மூலம் காயத்தின் உள்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் திசுக்களை வெளியேற்றிவிட்டு, கொலாஜன் புரதம் செலுத்தப்பட்டு புண்கள் ஆற சிகிச்சை அளிக்கப்படும்.

 

சர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்? என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு பாதத்தில் உணர்ச்சிகள் குறைந்துவிடும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடும்.  நரம்புகள் பாதிப்படையும். பாதத்தைப் பொறுத்தவரை எலும்புப் பகுதியில் பாதிப்பு, காலில் சுளுக்கு  போன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலும், வீக்கம் இருக்கும்; வலி தெரியாது, உணர்ச்சி இருக்காது. பாதிப்புகள் எதுவும் தெரியாத நிலையில், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் அசைவு கொடுப்பதால் அழுத்தம் ஏற்பட்டு புண் பெரிதாகும்.

* காலில் புண் ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது கால் நரம்புகளே. காலப்போக்கில் பாதிப்படைந்த பகுதியில் அழற்சி ஏற்படும். அதைக் கவனிக்காமல் விடுவதால் நரம்பில் பாதிப்புகள் தீவிரமடைந்து தசைகளின் செயல்பாடுகள் தடைபடும். காலை ஊன்றமுடியாமல் அவதிப்பட நேரிடும்.

* கால் ஆணி, பாத வெடிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். குறிப்பாக இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கால்களைப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், தங்களின் தோல், பாதம், ஊட்டச்சத்து, எலும்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

கால்களை எப்படிப் பராமரிப்பது?

* சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்குமுன் சூடான நீரைக் கொண்டு கால்களைக் கழுவ வேண்டும். காலில் உணர்ச்சி இருக்கிறதா? என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

* கால் கழுவும்போது, காலில் அடிபட்டிருக்கிறதா? புண், காயங்கள், சிராய்ப்புகள் காணப்படுகிறதா? தடித்திருக்கிறதா? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

* கால் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வறண்டு போகும்பட்சத்தில், மருத்துவர் ஆலோசனையுடன் லோஷன், க்ரீம் பயன்படுத்துவது நல்லது.

* கால் விரலின் நகங்களை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். நகம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நகம் வெட்டும்போது, மிகவும் கவனமாக வெட்ட வேண்டும். சதையை வெட்டிவிட்டால், அது புண்ணாகி பிரச்னை ஏற்படுத்தும்.

* கால் நகங்களைப் பாதுகாக்க, லெதரால் செய்யப்பட்ட ஷூ-ஷாக்ஸ் போன்ற காலணிகளை அணிவது நல்லது. காலின் அளவுக்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

* காலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். உட்காரும்போது கால்களை நீட்டி உட்கார்வது, காலுக்கான தனிப்பயிற்சிகள் செய்வது அவசியம்.

* காலில் சிறு மாற்றம் தெரிந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..."



Trending Articles

Sponsored