ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?! #Jayalalithaa



Sponsored



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை, தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவிவந்த நிலையில் இந்த வீடியோ மேலும் பரபரப்பைக் கிளப்பியது.

அந்த வீடியோவில் மருத்துவமனைப் படுக்கையில் சாய்ந்தவாறு பழச்சாறு அருந்திக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரின் கழுத்தில் கருவி ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது. அது 'ட்ரக்கியோஸ்டமி' (Tracheostomy) என்னும் கருவி. `ட்ரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்ட ஒருவர் எப்படி பழச்சாறு அருந்த முடியும்?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர். சந்தேகத்துக்கு விடை தேடுவதற்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு ட்ரக்கியோஸ்டமி கருவி ஏன் பொருத்தப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

Sponsored


கடந்த வருடம் செப்டம்பர் 22 - ம் தேதி தீவிரமான காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. நுரையீரல் தொற்றின் காரணமாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தது. சுவாசிக்கத் திணறிய நிலையில் இருந்த அவருக்கு ஆரம்பத்தில் செயற்கை சுவாசக் கருவியின் (Vendilators) மூலமாக சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், 'ட்ரக்கியோஸ்டமி' அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நுரையீரலுக்கு ஆக்சிஜன் நேரடியாகச் செல்லும்படியான சிகிச்சை அளிக்கப்பட்டது.

Sponsored


'ட்ரக்கியோஸ்டமி' சிகிச்சை என்றால் என்ன ? அந்த அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களால் உணவருந்த முடியுமா என்பது பற்றி காது-மூக்கு- தொண்டை மருத்துவ நிபுணர் சங்கர் விரிவாக விளக்குகிறார்...

" `ட்ரக்கியோஸ்டமி' என்பது செயற்கை சுவாச உபகரணங்களின் மூலமாக சுவாசமளிக்கும் ஒரு சிகிச்சை முறை. நுரையீரல் சளி அடைப்பு, குரல்வளைப் புற்றுநோய், குரல்வளையில் அடைப்பு காரணமாக மூச்சுத்திணறல், சுய நினைவிழத்தல் ஆகிய பாதிப்புள்ளவர்களுக்கு இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இயற்கையாக சுவாசிக்க முடியாமல் திணறுபவர்களுக்கு, தொண்டையின் கீழ்ப் பகுதியில் துளையிடப்பட்டு, அதன் வழியே ஒரு ட்யூப் இணைக்கப்படும். அந்த ட்யூப் மூச்சுக்குழாயுடன் இணைக்கப்படும். உள்புறம் மட்டும் ட்யூப் இணைக்கப்படும் முறை, உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இருபுறமும் ட்யூப் இணைக்கப்படும் முறை என்று இதில் இரண்டு முறைகள் உள்ளன. உள்புற ட்யூப், நுரையீரல் பைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி நுரையீரலுக்கு சுவாசம் சீராகச் செல்ல உதவும். இது சுவாசப் பிரச்னை முழுவதுமாக குணமான பின்னர்தான் அகற்றப்படும். ஆனால், வெளிப்புற ட்யூப்பை தேவையானபோது அகற்றிக்கொள்ளலாம். காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் காற்றைச் சுத்திகரிக்கவும் இந்த ட்யூப் உதவி செய்யும்.’’

`` 'ட்ரக்கியோஸ்டோமி பொருத்தப்பட்டவர்களால் பேச முடியுமா? உணவருந்த முடியுமா?’’

``இரண்டு பக்கமும் ட்யூப் உள்ள கருவி பொருத்தப்பட்டவர்களால் பேச முடியும். பேசுவதற்கு உண்டான தனிக்கருவியைப் (Speaking volve) பொருத்தி, பேசிக்கொள்ளலாம். ஜெயலலிதாவுக்குப் பொருத்தப்பட்டிருந்தது இரண்டு பக்கமும் ட்யூப் உள்ள கருவிதான். எனவே, நிச்சயமாக அவரால் பேசியிருக்க முடியும். அதேசமயம், ஆஸ்துமா மற்றும் மூச்சுவிட சிரமப்படுவர்களால் பேச முடியாது.

இந்தக் கருவி, சுவாசக் குழாயுடன் இணைக்கப்படும். உணவு, உணவுக்குழாய் வழியாகச் செல்லும். எனவே, இந்தக் கருவி பொருத்தப்பட்டிருப்பதற்கும், சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அறுவைசிகிச்சை முடிந்து ஒருநாள் மட்டும் எந்த உணவும் உட்கொள்ள முடியாது. அதற்கு பிறகு தாராளமாகச் சாப்பிடலாம், ஜூஸ் குடிக்கலாம்.

கடந்த வருடம் அக்டோபர் 5-ம் தேதிதான் ஜெயலலிதாவுக்கு ட்ரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. எனவே, அந்த வீடியோ அக்டோபர் 7-ம் தேதிக்குப் பின்னால் எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன’’ என்கிறார் மருத்துவர் சங்கர்.



Trending Articles

Sponsored