ரஜினியின் `பாபா’ முத்திரை... காப்பிரைட் யுத்தம்... அதன் நிஜ பலன் என்ன?



Sponsored



'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' இது ஔவையார் பொன்மொழி. நாம் இதுவரை கற்றுக்கொண்ட விஷயங்கள் நம் உள்ளங்கையின் அளவைப்போல் மிகக் குறைவானவை. கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள்தான் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அறிவைப் பேணுவதைப் பொறுத்தவரை, ஔவையாரின்  இந்தப் பொன்மொழி  மிகச்சரியானதாக இருக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேறு எங்கும் செல்ல வேண்டாம். நம் கை விரல்களே போதுமானவை. கை விரல்களை முறையாக, சரியான அளவில் வைத்துக்கொண்டு, தினமும் சில பயிற்சிகளைச் செய்தால் உடல் மட்டுமல்ல, மனம் சார்ந்த பல பிரச்னைகளையும் சரிசெய்யலாம். 

யோகாவில், ஆசனங்கள், பிரணாயாமம், தியானம், கிரியா மற்றும் முத்திரை ஆகிய ஐந்து பயிற்சிகள் மிக முக்கியமானவை. அவற்றில், 'முத்திரை’ என்பது கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு பயிற்சிமுறை.

Sponsored


முத்திரையில், பல வகைகள் உள்ளன. கழுத்துவலியைச் சரிசெய்ய `முநீ முத்திரை’, தலைவலி போக்க `சின்மய முத்திரை’, சோர்வைத் தடுக்க `அர்த்தசின் முத்திரை’, முகப்பொலிவைத் தரும் `பங்கஜ முத்திரை’, மாதவிடாய்கால வலி போக்கும் `சக்தி முத்திரை’... என ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு  உடல்நலப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும். இதில் முக்கியமான ஒரு முத்திரை 'அபான வாயு' முத்திரை. 

Sponsored


உடலில் தேங்கியுள்ள நச்சுககளால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அபான வாயு முத்திரை, வயிற்றில் உள்ள தேவையில்லாத நச்சுககளை வெளியேற்றி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். 

நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியைக் கட்டை விரல் நுனியுடன், சேர்த்து வைத்து, மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்குமாறு வைத்திருப்பதுதான் 'அபான வாயு முத்திரை.’ எளிதாகப் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால் `பாபா’ திரைப்படத்தில் ரஜினி வைத்திருப்பது 'அபான வாயு முத்திரை' போன்றதுதான்.

மேலும், இந்த முத்திரையைப் பற்றியும்,  அதனால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும்  சென்னை, அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர்  மணவாளன் விரிவாக விளக்குகிறார்,
 
"யோகாவின் ஒரு பகுதிதான் முத்திரைகள். முத்திரைகள், நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.  அவற்றில்  `ஞான முத்திரை’, `யோக முத்திரை’, `ஹ்ருதய முத்திரை’ , `நாசிக முத்திரை’, `யோனி முத்திரை’, `அபான முத்திரை’  ஆகியவை  நடைமுறையில் அதிகமாகப்  பயன்படுத்தப்பட்டு வருபவை. 

யோகா இயற்கை வைத்திய முறைப்படி, நம் உடலில் மொத்தம் பத்து வகையான வாயுக்கள் உள்ளன. இதில், பிராண, பூர்ணா, அபான  போன்ற  முக்கியமான ஐந்து வாயுக்களும்,  உப வாயுக்களாக ஐந்தும் உள்ளன. இதில், அபான  வாயு மிக மிக முக்கியமான ஒன்று. இது உதரவிதானத்துக்குக் கீழே உருவாகும் . பிராணவாயு உதரவிதானத்துக்கு மேலே உருவாகும்.

வயிற்றில் தேங்கியிருக்கும் நச்சுகளை, தேவையற்ற வாயுக்களை கீழ் நோக்கித் தள்ளி வயிற்றை சுத்தம் செய்ய உதவுவது அபான வாயுதான். இந்த முத்திரைப் பயிற்சி செய்யும்போது அபான வாயு தூண்டப்பட்டு வயிற்றில் உள்ள தேவையற்றக் கழிவுகள்  சுத்தம் செய்யப்படுகின்றன. 

எப்படிச் செய்யவேண்டும் ?

தரையில் நன்றாகச் சம்மணமிட்டு அமர்ந்தோ, முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தோ (மரத்தால் ஆன) செய்யலாம். ஆனால், சாய்ந்தபடி உட்கார்ந்து செய்யக் கூடாது, முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டுதான் செய்ய வேண்டும். அப்போதுதான் மூலாதாரச் சக்கரத்திலிருந்து  மூளைக்கு எனர்ஜி ஃபுளோ சரியாகச் செல்லும். மூளைதான் குறிப்பிட்ட அந்த உறுப்புகளைத் தூண்டி அந்தந்த இயக்கங்களைச் செய்யவைக்கிறது. படுத்துக்கொண்டு செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். ஒரு கையில் மட்டும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அபான வாயு முத்திரையை மட்டும் அல்ல அனைத்து முத்திரைகளையும் வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். 

எப்போது, எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?

விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் (4- 5) செய்தால் அதிகமான பலன் கிடைக்கும். முடியாத பட்சத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகச் செய்யலாம். அப்படியும் முடியாதவர்கள், காலை, இரவு உணவு சாப்பிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு  முன்பாகச் செய்யலாம். பயிற்சியை முடித்துவிட்டு  சாப்பிடுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும் அல்லது, சாப்பிட்டதிலிருந்து மூன்று மணி நேரத்துக்குப் பின்னால் செய்யலாம். குறைந்தது பத்து நிமிடங்களாவது செய்ய வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். அதிகபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். 

என்னென்ன நன்மைகள்?

வாயுப் பிரச்னைகள், ஜீரணக் கோளாறுகள்,  மலச்சிக்கல், மூலம், சர்க்கரை நோய். இதயம் தொடர்பான  பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இது. மனம் தொடர்பான பிரச்னைகளையும் இது சரிசெய்யும். கணையத்தில் உள்ள தேவையற்றக் கழிவுகளை நீக்கி இன்சுலின் உற்பத்திக்கு வழிவகுக்கும். 

யாரெல்லாம் செய்யக் கூடாது ?

கர்ப்பிணிப் பெண்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது. வயிற்றுப்போக்கு வயிற்று வலி பிரச்னை இருப்பவர்கள் இதைச் செய்யக் கூடாது. 

இப்போதெல்லாம் நாம் சாப்பிடும் உணவுகளில், உணவுப் பொருள்களில் ஏகப்பட்ட கெமிக்கல்கள் கலந்துள்ளன. அதனால் உடலில் தேவையற்ற நச்சுகள் தங்கிவிடுகின்றன. அதை மாத்திரை, மருந்துகள் இல்லாமல் எளிய வழியில் வெளியேற்ற இந்த அபான வாயு முத்திரை மிகவும் உதவிகரமாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் மணவாளன்.



Trending Articles

Sponsored