கொக்கிப்புழுக்கள் எப்படி உருவாகின்றன, பாதிப்புகள், பரிசோதனைகள், சிகிச்சைகள்! #HookWormsCauses



அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் ரத்தச்சோகை பாதிப்பு காரணம் என்று சொல்லப்பட்டு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அந்தச் சிறுவனுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் பலனளிக்காத நிலையில், குடல் பகுதியில் பரிசோதனை செய்தார்கள் மருத்துவர்கள். அதில் நூற்றுக்கணக்கான கொக்கிப்புழுக்கள் (Hook worms) இருப்பதைக் கண்டறிந்தார்கள். அந்தச் சிறுவனின் குடலில் தங்கியிருந்த அந்தக் கொக்கிப்புழுக்கள் சுமார் 22 லிட்டர் ரத்தத்தைக் குடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Sponsored


`கொக்கிப்புழுக்கள் அத்தனை அபாயகரமானவையா... அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன... அவற்றைக் கண்டுபிடிப்பது எப்படி?’ - குடல், இரைப்பை நோய் நிபுணர் டாக்டர் ஆர்.கண்ணனிடம் கேட்டோம். 

Sponsored


“கொக்கிப்புழுக்கள் மனிதனின் உடலில் நிகழ்த்தும் செயல்கள் அதிர்ச்சிகரமானது. `Ancylostoma duodenale', `Necator americanus’ என்ற இரண்டு வகை கொக்கிப்புழுக்கள் மனிதர்களைப் பாதிக்கின்றன. பெரும்பாலும் இந்தப் புழுக்கள் ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற கண்டங்களிலுள்ள வெப்பமண்டல நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

Sponsored


கொக்கிப்புழுக்கள் தனது லார்வா (Larva) பருவத்தில் மண்ணில், அதாவது நிலங்களில், வயல் பகுதிகளில் காணப்படுகின்றன. அவை அந்தப் பகுதியில் நடமாடும் மனிதர்களின் கால் வழியாக தோலுக்குள் ஊடுருவிச் செல்லும் திறன் படைத்தவை. வெறும் காலுடன் செல்பவர்கள்தான் இந்தக் கொக்கிப்புழுக்களின் இலக்கு. அதிலும் குழந்தைகளின் தோலில் இந்தப் புழுக்கள் ஊடுருவுவது மிகவும் எளிது. விலங்குகளையும் இந்தப் புழுக்கள் விட்டுவைப்பதில்லை.

கொக்கிப்புழுக்கள்   
முதலில் கொக்கிப்புழுக்களின் முட்டைகள் ஒருவரின் மலத்தின் மூலம் நிலத்துக்குச் செல்லும். அதன் பிறகு நிலத்திலுள்ள ஈரப்பதம், வெதுவெதுப்பான சூழலில் முட்டைகள் பொரிக்கப்படும். அந்த நிலப்பகுதியில் செழித்து வளரும். சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கும். அப்போது வெறும் காலுடன் செல்பவர்களின் கால் வழியாக உடலுக்குள் சென்றுவிடும். அதன் பிறகு ரத்தக்குழாய் மற்றும் நிணநீர் வழியாக உள்ளே நுரையீரலைச் சென்றடையும்.

நுரையீரலில் இருந்து வாய்ப்பகுதிக்குச் சென்று, சிறுகுடலைப் போய்ச்சேரும். அங்கேதான் அதன் ஆதிக்கம் தொடங்கும். லார்வா இங்கே புழுக்களாகி மிகவும் வசதியாக உட்கார்ந்துகொண்டு ரத்தத்தில் உள்ள சத்துப்பொருள்களை முடியுமட்டும் உறிஞ்சிக்கொண்டே இருக்கும். எந்தச் சிரமமும் இல்லாமல் உயிர்வாழ இந்த இடம் வசதியாக இருக்கும். இந்த வசதியின் காரணமாக கொக்கிப்புழுக்கள் தம் இனப்பெருக்கத்தைத் தொடங்கும். ஆயிரக்கணக்கில் முட்டைகளை இட்டு சந்ததியைப் பரப்பும் முக்கியப் பணியில் ஈடுபடும்.

ரத்தசோகை
குடல் பகுதியில் இருக்கும் இந்த முட்டைகள் மலம் கழிக்கும்போது அவ்வப்போது வெளியேறும். கழிப்பறைகள் அல்லாமல் திறந்தவெளி மற்றும் வயல்வெளிகளில் மலம் கழிக்கும் மனிதர்களால் முட்டைகள் அங்கே முதிர்ச்சி அடைந்து லார்வா புழுவாகும். ஆக, ஒரு சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் மனிதர்களின் வயிற்றுக்குள் உள்ளே, வெளியே விளையாட்டுபோல சென்று வருகின்றன. லார்வா என்னும் இளம் பருவத்தை அடையும் புழுக்கள் மீண்டும் மனிதர்களின் தோல் வழியாக உள்ளே செல்கின்றன.

கொக்கிப்புழுக்கள் மனிதனின் உடலில் ஊடுருவதால் ரத்தச்சோகை ஏற்படுகிறது.  `அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகையால் பலர் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அடுத்ததாக பசி குறைதல்,  எடை குறைதல் என ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் பாதிப்புகளால் மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, நமைச்சல், படை, சொறி உள்ளிட்ட தோல் நோய்களும் வரிசைகட்டி நிற்கும்.

பரிசோதனை
நாளடைவில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும். தோல் வழியாக உள்ளே செல்லும் லார்வா, நுரையீரலுக்குள் சென்று வருவதன் மூலம் சுவாசப் பிரச்னைகள், இருமல், காய்ச்சல் என நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி மனிதர்களைப் பாடாகப்படுத்தும் கொக்கிப்புழுக்கள் ஒருவரின் உடலில் இருக்கிறது என்பதை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மூலமே கண்டுபிடிக்க முடியும்.

கொக்கிப்புழுக்கள் வளரும் நாடுகளில் வசிப்பவர்களையே பெரும்பாலும் பாதிக்கின்றன. காரணம், சுகாதாரமற்ற சூழலில் வசிக்கும் பலர் வளரும் நாடுகளில்தான் இருக்கிறார்கள். மேலும், கருவுற்ற பெண்கள், சிறுவர்கள், விவசாயிகள், பிளம்பர்கள்  மற்றும் மண்ணில் விளையாடக்கூடியவர்களில் உடலில் எளிதாக புகுந்துவிடுகின்றன.

சிகிச்சை
பொதுவாகவே புழுக்களை நீக்குவதற்காக ஆல்பெண்டசோல் (Albendazole) என்ற மாத்திரையை பள்ளிக்குழந்தைகளுக்கு அரசின் சார்பில் கொடுக்கிறார்கள். ஒன்று முதல் இரண்டு வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு 200 மில்லிகிராம் உள்ள இந்த மாத்திரையில் பாதி மாத்திரை கொடுக்கலாம். இரண்டு வயது முதல் 19 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு 400 மில்லி கிராம் கொடுக்கலாம்.  

கொக்கிப்புழுக்களை அழிப்பதற்காக கொடுக்கப்படும் ஆல்பெண்டசோல் மாத்திரையைப்போல மெபெண்டசோல் (Mebendazole) என்ற மாத்திரையையும் கொடுக்கலாம். இந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் சாப்பிடுவது நல்லது.
கொக்கிப்புழுவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றாலும் கீரை வகைகள், பீட்ரூட், புரோக்கோலி, சுண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மேலும் ஈரல், பேரீச்சம்பழம், உலர் திராட்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, பிரௌன் அரிசி, முட்டை, சிவப்பு அவல், பாதாம், ராகி, கம்பு போன்றவற்றைச் சாப்பிட்டு வருவது நல்லது.

காலில் செருப்பு, ஷூ அணிந்து செல்வதன் மூலம் அவை உடலில் நுழையாதபடி தடுக்கலாம். திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கக் கழிப்பறைகள் கட்ட வேண்டும். மலத்தால் தயாரிக்கப்படும் உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. தோட்டவேலை செய்யும்போது கைகளுக்கு உறை அணிந்துகொள்ளவேண்டியது, கால்களுக்கு ஷூ அணிந்துகொள்ளவேண்டியது அவசியம். செல்லப்பிராணிகளுக்கு அவ்வப்போது தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும்.



Trending Articles

Sponsored