ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகத்தான் சாப்பிட வேண்டுமா? - மருத்துவம் என்ன சொல்கிறது?பசிக்கும்போது தனக்குத் தேவையான அளவுக்கு, தான் செயல்படத் தகுந்த அளவுக்கு உணவைச் சாப்பிடுவது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. ஆனால், உணவு விஷயத்தில் பெண்களுக்கு மட்டும்  பல கட்டுப்பாடுகளும் கண்டிப்புகளும்  தொடர்ந்து திணிக்கப்பட்டுவருகிறது. பெண்களால் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் தங்களுக்கு விருப்பமான உணவுகளைச் சாப்பிட முடிகிறது. ஆனாலும், இப்போதும்கூடப் பெண்கள் அளவாகச் சாப்பிட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொலைக்காட்சிகளில் இது தொடர்பான விவாதங்கள் நடத்தப்படுகின்றன. 

Sponsored


ஒரு பெண், ஹோட்டலில் சாப்பிடுவதை தெய்வக்குத்தத்துக்குச் சமமாகப் பார்க்கிறவர்களெல்லாம்கூட இருக்கிறார்கள். அதிலும்     ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நீர்க்கட்டிகள், தைராய்டு போன்ற பிரச்னைகளெல்லாம் வரும் என்று இலவசமாக ஏகப்பட்ட அறிவுரைகள் வேறு வழங்கப்படுகின்றன.

Sponsored


Sponsored


``பெண்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாதென்று ஏன் சொல்லப்படுகிறது... ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் பெண்களுக்கு மட்டும்தான் அதிகமான பாதிப்புகள் வருமா?’’ மகளிர் நல மருத்துவர் மனு லெஷ்மியிடம் கேட்டோம்... 

``உணவு விஷயத்தில் ஆண் - பெண் என்ற வேறுபாடெல்லாம் தேவையில்லை. ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது. அதற்கேற்ப சாப்பிட வேண்டும். உடல் எடையைப் பராமரிக்கக்கூடிய அளவுக்குச் சாப்பிடலாம். பெண்களுக்கு 35 - 40 வயதுக்கு மேல் உடலில் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அப்போது மட்டும் டயட்டில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை துரித உணவுகள், இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. சமோசா, பர்கர், பீட்சா, ஃப்ரைடு ரைஸ்,  சிக்கன் ரைஸ் போன்றவற்றைக் கடையில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

பொதுவான டயட் என்று ஒன்று கிடையாது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடலமைப்பு, பார்க்கும் வேலை ஆகியவற்றின் அடிப்படையில் உணவு முறை இருக்க வேண்டும். 20 வயதில் என்ன சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். 35 - 40 வயதுக்கு மேல் அப்படி ஆகாது. எனவே, அப்போது உணவில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்கிறார் மனு லெஷ்மி.

தாம்பரம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணை மருத்துவ கண்காணிப்பாளரும், சித்த மருத்துவ நிபுணருமான வேலாயுதத்திடம் பேசினோம்... 

``அந்தக் காலத்தில் ஆண்கள் கடினமான வேலைகளையும், பெண்கள் எளிதான வேலைகளையும் செய்துவந்தார்கள். உடல் உழைப்புக்கு ஏற்றவாறுதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதால், பெண்கள் அளவாகச் சாப்பிட வலியுறுத்தப்பட்டார்கள். அதேசமயம் மாதவிடாய்க் காலங்களில், ஆரோக்கியமான, அதிக அளவு உணவுகளைச்  சாப்பிட்டார்கள். ஆனால், தற்காலச் சூழலுக்கு இது பொருந்தாது. பெரும்பாலும் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான வேலைகளைத்தான் பார்த்துவருகிறார்கள்.

வயது, உயரம், எடை, செய்யும் வேலை இவற்றின் அடிப்படையில்தான் உணவு உட்கொள்ள வேண்டும். குறைவாக, அதிகமாக என்ற வரையறை சரியாக இருக்காது. உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், அனைத்துச் சுவைகளும் கொண்ட உணவாகவும், காய்கறிகளும், பழங்களும் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை, துரித உணவுகளை, பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளைக் கண்டிப்பாக அனைவருமே தவிர்க்க வேண்டும். இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவை  பெண்களுக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது.  
வயது, உயரம், எடை ஆகியவை ஒரே அளவுள்ள ஆண் -பெண் இருவரையும் ஒப்பிட்டால், பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. பெண்களின் சிறுநீரகம், கல்லீரல் போன்ற பல உள்ளுறுப்புகள் அளவில் சிறியதாகவும், குறைந்த அளவு செயல்பாட்டிலும் இருக்கும். ஹார்மோன், என்சைம் சுரப்பும்கூட ஆண்களைவிட குறைவாகத்தான் இருக்கும்.

அதனால்தான் `துரித உணவுகளை உட்கொள்ளும்போது பெண்களை பல நோய்கள் எளிதாகத் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு’ என்று சொல்லப்படுகிறது. ஆனால், தற்காலச் சூழலில் பல ஆண்களுமேகூட உடலில் போதிய வலுவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களும் இதுபோன்ற உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது" என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.Trending Articles

Sponsored