எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்... ஹெச்.வி.ஹண்டே முதல்வரிடம் வழங்கிய ஆவணம் - முழு விவரம்Sponsored1984-ம் ஆண்டு, அக்டோபர் 5 முதல் நவம்பர் 5 வரை அப்பல்லோ மருத்துவமனையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அந்த ஒரு மாத காலத்தில், அவரின் உடல்நிலை குறித்தத் தகவல்களும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைத் தகவல்களும் அடங்கிய ஆவணம் ஒன்றை, தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து வழங்கினார் ஹெச்.வி. ஹண்டே. இவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.

"பல வருடங்களாக என்னிடம் இருந்த கோப்புகளை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வரிடம் அளித்தேன். நூற்றாண்டு விழாவில் யார், யாரோ முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். நியாயமாக எம்.ஜி.ஆரின் ஆயுளை மூன்று ஆண்டுகள் நீட்டித்த லீலாவதி அம்மாவைத்தான் முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும்" என்ற ஹெச்.வி. ஹெண்டே, கோப்புகளில் உள்ள மருத்துவத் தகவல்களைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

Sponsored


1984 - ம் ஆண்டு செப்டம்பர் பதினைந்து வரை எம்.ஜி.ஆர் உடல்நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை. தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜனின் சிலையைக் கோயிலுக்குள் வைப்பது தொடர்பாக இந்திரா காந்தி தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது. அப்போதுதான் அவருக்கு முதன்முறையாக தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு 89-ஆக இருந்தது. சராசரியாக ஒரு மனிதனுக்கு ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு 20 என்ற அளவில்தான் இருக்க வேண்டும். 89 என்றால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கு ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரித்திருந்திருக்க வேண்டும். உடனடியாக இந்தளவு வருவதற்கு வாய்ப்பில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகமாயிருக்கும். எம்.ஜி.ஆரின் தனி மருத்துவர் பி.ஆர்.சுப்ரமணியம் முன்பே இதைக் கவனித்திருக்க வேண்டும். சிறுநீரகவியல் மருத்துவருக்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யத் தவறிவிட்டார். நான்கூட அவரிடம் இதற்காகக் கடிந்துகொண்டேன்.

Sponsored


அதுபோல கிரியேட்டினைன் (Creatinine) 0.8 தான் இருக்கவேண்டும், ஆனால் 8.1-ஆக இருந்தது. கொஞ்ச நாள்கள் அவரின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. மீண்டும், அக்டோபர் 5-ம் தேதி திடீரென்று மேல்மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. ரத்தத்தில் உப்பின் அளவு மேலும் அதிகரித்தால்தான் இந்த பாதிப்பு. அடுத்த நாளே சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் மணி, நரம்பியல் மருத்துவர் நரேந்திரன், ஜப்பானில் இருந்து சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் கானோ ஆகியோரை வரவழைத்தோம். அன்றே அப்பல்லோவில் அவரை அனுமதித்தோம்.

அப்பல்லோவில் சேர்த்தபோது அவருக்கு சிறுநீரக பாதிப்பு மட்டுமே இருந்தது. ஆனால், நவம்பர் 13-ம் தேதி நள்ளிரவில் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்ற தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்று சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையில் சிறிய கட்டி இருப்பதைப் பார்த்தோம். அப்பல்லோவில் இனி சிகிச்சையளித்துப் பலனில்லை என்ற முடிவுக்கு வந்தோம். உடனடியாக அமெரிக்காவில் இருந்த மணலி பெரியசாமியைத் தொடர்பு கொண்டு ஒரு நரம்பியல் மருத்துவர், ரத்த மாற்று நிபுணர் ஆகியவர்களுடன் நான்கு மருத்துவர்களை வரச் செய்தோம். ஜப்பானில் இருந்து மருத்துவர் கானோவையும் வரச் செய்தோம். அனைவரும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு அமெரிக்காவுக்கே கூட்டிச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி, நவம்பர் 15-ம் தேதி அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்றோம்.

அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்றதற்கான காரணம்?

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் மாற்ற டயாலிசீஸ் (Dialysis) கொடுக்கவேண்டியிருந்தது. அதற்கு 'ஹெப்பேரின் ' (Heparin) என்ற மருந்து செலுத்த வேண்டும். இந்தியாவில் 20,000 யூனிட் மருந்து செலுத்துவார்கள். அந்த மருந்தைச் செலுத்திய உடனே ரத்தம் திரவ நிலைக்கு (Fluid) மாறி, இயந்திரத்துக்குள் சென்று சுத்தமாகும். ஹெப்பேரின் மருந்து செலுத்தாமல் இருந்தால் ரத்தம் இயந்திரத்துக்குள் சென்று உறைந்துவிடும்; சுத்தமாகாது.

எம். ஜி.ஆருக்கு ஹெப்பேரின் செலுத்தியபோது அவரின் மூளைக்கு ரத்தம் சென்று, கட்டியில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்து, அவரின் நிலை இன்னும் மோசமானது. சிறுநீரக பாதிப்புக்காக கொடுக்கப்பட்ட மருந்து அவரின் மற்றொரு பாதிப்பான மூளைக்கட்டியை பாதித்தது. வெளிநாடுகளில் 1,500 யூனிட் ஹெப்பேரின் ஸ்பிரேதான் கொடுப்பார்கள். அதனால் மூளைக்கட்டியில் ரத்தக்கசிவு வராது என்பதால், வெளிநாட்டுக்குக் கூட்டிச் சென்றுவிட முடிவுசெய்தோம். அதன்படி, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காகவும், மூளையில் உள்ள கட்டியை அறுவைசிகிச்சை செய்வதற்காகவும்தான் அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்றோம்.

மூளைக்கட்டி எப்படி வந்தது?

டயலிசீஸில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, ஹேமோடயாலிசீஸ் (Hemodialysis). மற்றொன்று, பெரிட்டோனியல் டயலசீஸ் (Peritoneal dialysis). இதில் ஹேமோடயலசீஸ்தான் மிகவும் பாதுகாப்பானது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பெரிடோனியல் டயலசீஸ்தான் கொடுக்கப்பட்டது. இதனால்தான் மூளையில் கட்டி உருவானதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், அப்பல்லோ மருத்துவர்கள் அதை மறுத்தார்கள். சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் மணியும் அதை மறுத்தார்.

சிறுநீரக மாற்று சிகிச்சை?

இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக சிறுநீரகம் மாற்றவேண்டியிருந்தது. அவருடைய அண்ணன் மகள் லீலாவதி அவருக்கு ஒரு கிட்னியை தானம் செய்ய முன்வந்தார். சிறுநீரகப் பிரச்னை சரியானது. மூளைக்கட்டியும் அகற்றப்பட்டது. ஆனால், அதன் பாதிப்புக் கொஞ்சம் இருந்தது.

அதனால்தான் கடைசி மூன்று வருடங்கள் அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அமெரிக்காவில் இருந்து எம்.ஜி.ஆரின் வேட்புமனுவைக் கொண்டு வருவதற்காக இந்தியா வந்தேன். அப்போதுதான், அப்பல்லோவில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை அவருக்குக் கொடுத்த சிகிச்சைகள் பற்றிய ஆவணங்கள் இனி தேவையில்லை என்று அமெரிக்க மருத்துவமனை மருத்துவர்கள் என்னிடம் கொடுத்தார்கள். வரும்போது அந்த ஆவணங்களையும் கொண்டு வந்தேன்.

அந்த ஆவணங்களைத்தான் நான் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து வழங்கினேன். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழவையொட்டி இதை நான் கொடுத்திருக்கிறேன்" என்கிறார் ஹெச்.வி.ஹண்டே.Trending Articles

Sponsored