`தமிழகத்தில் 21 மாவட்ட மக்களுக்கு அயோடின் குறைபாடு!’ - சுகாதாரத் துறை! - பக்கவிளைவுகள், தீர்வுகள்! #Iodine



யோடின்... உடலுக்குத் தேவையான தாதுச்சத்து. தைராய்டு ஹார்மோன்களின் முக்கிய பகுதிப் பொருள். மனித உடல் மற்றும் மூளையின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் இதன் தேவை முக்கியமானது. `ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அயோடின் குறித்த விழிப்புஉணர்வு இல்லாததால்,  54 நாடுகள் இன்னும் அயோடின் குறைபாடு உள்ள நாடுகளாகவே இருக்கின்றன’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Sponsored


இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மேற்கத்திய நாடுகளில் 1920-ம் ஆண்டுகளிலேயே  உப்புடன் அயோடின் சேர்ப்பது தொடங்கிவிட்டது. அதனால் அங்கெல்லாம், அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. `தெற்காசிய நாடுகளில்தான் அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் மிக அதிகம்’ என்கின்றன ஆய்வுகள்.

Sponsored


அதனால்தான் இந்திய அரசு, இந்தக் குறைபாட்டை ஒழிக்க அயோடின் இல்லாமல் உப்பு விற்பனை செய்வதைத் தடைசெய்திருக்கிறது.  `இந்தியாவில் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில், அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் அதிகம்’ என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

Sponsored


இதை உறுதிப்படுத்துவதுபோல ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அயோடின் குறைபாடு குறித்த தமிழக பொது சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் 21 மாவட்ட மக்கள் அயோடின் குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 21 மாவட்டங்களைச் சேர்ந்த 5 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் தைராய்டு, பிரசவத்தில் சிக்கல், அறிவுக்கூர்மை குறைதல், மூளை வளர்ச்சி குறைதல், ரத்தச்சோகை உள்ளிட்ட பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒரு பக்கம், அரசு அயோடின் உப்பு குறித்து விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருவதையும், மற்றொரு புறம் ‘உங்க உப்புல அயோடின் இருக்கா...?’ - 'மூளை வளர்ச்சிக்கு உதவும் அயோடின் உப்பு..'. என்றெல்லாம் விளம்பரங்கள் பாக்கெட் உப்பை பிரபலப்படுத்தி வருவதையும் பார்க்கிறோம்.

முன்பெல்லாம் உப்பை மூட்டை மூட்டையாக வீட்டில்வைத்து பயன்படுத்தி வந்த மக்கள், பாக்கெட்டில் அடைத்த உப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். சாதாரண  பெட்டிக்கடைதொடங்கி, பெரிய வணிக வளாகம் வரை வண்ண வண்ணப் பாக்கெட்டுகளில் உப்பு  பகட்டாக இடம்பிடித்திருப்பதே இதற்கு சாட்சி. 

அப்படிப் பெரும்பாலான வீடுகளில் அயோடின் உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று கருதப்பட்டு வந்த நிலையில்தான் இந்த அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகியிருக்கிறது.  அதிலும், தமிழகத்தின்  மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்களில்  அயோடின் பற்றாக்குறை நிலவுகிறது என்ற தகவல் நமக்கு வியப்பைத்தான் ஏற்படுத்துகிறது.

இந்தத் தகவல் பற்றியும், அயோடின் ஏன் அவசியம்... இதன் பற்றாகுறைக்கு என்ன காரணம் உள்ளிட்ட கேள்விகளுடனும்  ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற  தமிழக பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் சோமசுந்தரத்திடம் பேசினோம்...

"அயோடின் பற்றாக்குறை  ஆய்வுக் கூட்டம் மற்றும் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் பிரதீப் சக்சேனா மற்றும் 18 மாநிலங்களைச் சேர்ந்த பொது சுகாதாரத்துறையினர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வில் தமிழக முழுவதும் 603 பிராண்டடு உப்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட 4,218  உப்பு மாதிரிகள் மூலம் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், பல நிறுவனங்கள் உப்பில் அயோடினைக் கலக்காமலேயே கலந்திருப்பதாகக் கூறி போலியாக விற்பனை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்த நிறுவனங்களின் மேல் விரைவில் மத்திய உணவுப் பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அயோடின் குறைபாட்டுக்கு இதுபோல பல்வேறு காரணங்கல் இருந்தாலும், இது குறித்து முழுமையாகத் தெரியாதே முதன்மைக் காரணம். `அயோடின் உப்பு’ என்றால் அதையும் ஒருவகை உப்பு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. அயோடின் என்பது உடலுக்கு அத்தியாவசியமான ஒரு வகை நுண் தாதுச்சத்து.

ஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளின் மணற்பரப்பிலும்,  கடல்நீரிலும், பச்சைத் தாவரங்களிலும் அயோடின் காணப்படுகிறது. அயோடினின் அளவு தாவரங்களிலும் தண்ணீரிலும் அந்தந்த மண்ணைப் பொறுத்து அமையும். விலங்குகளில் அயோடின் இருப்பு, அவை உண்கிற தாவர உணவை பொறுத்து அமையும். இயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்கவேண்டிய அயோடின் சத்து, பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்துக் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது;  பலவிதமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. முக்கியமாக தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான்.

வெறென்ன பாதிப்புகள் ஏற்படும்?

கர்ப்பிணிகளுக்கு...

*கருச்சிதைவு,

* குழந்தை இறந்து பிறப்பது,

* பிறக்கும் குழந்தைக்குப் பிறவிக் குறைபாடுகள்.  

குழந்தைகளுக்கு...

* மூளை பாதிப்பு

* வளர்ச்சிக் குறைவு

* அறிவு மந்தம்

* குறைந்த மதிநுட்பம் (ஐ க்யூ).

பெரியவர்களுக்கு...

*ஆற்றல் குறைந்த மனச் செயல்பாடு

* குறைந்த உழைப்பு திறன்

* முன் கழுத்துக் கழலை.

அயோடின் உப்புதானா என்பதை எப்படிக் கண்டறிவது?

உப்புடன் , ஸ்டார்ச் கரைசலைச் சேர்த்து, உப்பு நீல நிறமாக மாறினால் அது அயோடின்  கலக்கப்பட்டது எனத் தெரிந்துகொள்ளலாம்.

என்ன தீர்வு?

ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான அயோடின்  நாம் உண்ணும் உணவில் கிடைப்பதில்லை. எனவேதான் உப்பில் அயோடின் கலக்கப்படுகிறது. தூள் உப்பு தவிர கல் உப்பிலும் அயோடின் சேர்க்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. ஆனால், உப்பைக் காற்றில் திறந்துவைத்திருந்தால் அயோடின் அளவு குறைந்துவிடும். எனவே, காற்றுப் புகாத டப்பாவில் உப்பை அடைத்துவைக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் அயோடினை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் அளவு வயது அடிப்படையில் வேறுபடும்.

ஒரு நாளில், நாம் உண்ணும் உணவில் அதிகமான அயோடின் உப்பைச் சேர்த்தால், சிறுநீர் வழியாக அது வெளியேறிவிடும். அயோடின் உப்பை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுவதில்லை.

சாதாரண உடல்நிலை உள்ளவர்கள் நாளொன்றுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் கலக்கப்பட்ட உப்பையும், கர்ப்பிணிகள் 200 மைக்ரோ கிராம் அயோடின் கலக்கப்பட்ட உப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களைவிட கர்ப்பிணிகளுக்குக் கூடுதல் அயோடின் தேவை. இல்லையென்றால், அயோடின் குறைபாட்டின் விளைவுகள் கர்ப்பிணிகளையும் குழந்தையையும் பாதிக்க்கும்.

உணவில் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவதால் அதன் மணம், நிறம், சுவை மாறாது.

அயோடின் பற்றாக்குறைக் கோளாறுகள் இல்லாவிட்டாலும்கூட தொடர்ந்து அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும்.

அயோடின் கலந்த உப்பை வாங்கி உட்கொள்வதால், அதன் பற்றாக்குறையிலிருந்து காத்துக்கொள்ள முடியும். இருந்தாலும், காய்கறிகள், பால், இறைச்சி, மீன் மற்றும் தானிய வகைகள் ஆகியவற்றிலும் அயோடின் சத்து கிடைக்கும்" என்கிறார் சோமசுந்தரம்.



Trending Articles

Sponsored