பெண்களை குறிவைத்துப் படையெடுக்கும் ரத்தச்சோகை... தவிர்க்க, தப்பிக்க என்ன செய்யலாம்? #AnaemiaAlert



Sponsored



த்தச்சோகை.... உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்னைகளில் முதன்மையானது.  `ரத்தச்சோகை ஏற்பட்டால், ரத்தச் சிவப்பணுக்களின் அளவு குறைந்து, அது உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தக்கூடும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இதன் தீவிரம் தெரியாததால், இந்தப் பிரச்னையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறவர்களே நம்மில் அதிகம். `ரத்த தானம் செய்வதற்காகவோ, வேறு ஏதாவதொரு நோய்க்கான சிகிச்சைக்காகவோ ரத்தப் பரிசோதனை செய்யும்போதுதான், தங்களுக்கு ரத்தச்சோகை இருப்பதையே தெரிந்துகொள்கிறார்கள் பலர்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இதை உறுதிபடுத்துவதுபோலவே, தேசிய குடும்ப சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வு முடிவுகளும் அமைந்துள்ளன. பஞ்சாப் உள்ளிட்ட பல  மாநிலங்களில் ரத்தச்சோகை வெகுவாக உயர்ந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்த விழிப்புஉணர்வு இன்னும் படித்த பெண்கள் மத்தியிலேயேகூட முழுமையாக ஏற்படவில்லை என்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது. 

அனீமியாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் சதவிகிதத்தில்

(மாநிலம் வாரியாக)

load

வட மாநிலங்களோடு ஒப்பிட்டால், `சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலங்கள்’ எனப் பெருமிதப்படும் தமிழகத்திலும் கேரளாவிலும் ரத்தச்சோகை அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்ககூடிய தகவல். அதாவது, தமிழகத்தில் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கடந்த 2005-06-ம் ஆண்டில் 53.2 சதவிகிதமாக இருந்தது. கடந்த 2015-16-ம் ஆண்டுக்கான ஆய்வின்படி 1.8 சதவிகிதம் அதிகரித்து, 55 சதவிகிதமாக இருக்கிறது. கேரள மாநிலத்தில் 32.8 சதவிகிதமாக இருந்தது 34.2 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 

Sponsored


``பெண்களை மட்டும் அதிகம் ரத்தச்சோகை பாதிப்பது ஏன்?’’ என்று ரத்தவியல் நிபுணர் ரேவதிராஜிடம் கேட்டோம்...

Sponsored


"இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகத்தான் பெரும்பாலானவர்கள் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... என அனைத்துத் தரப்பினருக்கும் ரத்தச்சோகை ஏற்படும். என்றாலும், பெண்கள்தான் அதிக அளவில் ரத்தச்சோகைக்கு

ஆளாகிறார்கள். பருவம் அடைதல், மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள்  அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணமாகிறது. தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால், குறை மாதத்தில் குழந்தை பிறக்கலாம் அல்லது குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தைக்கு ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தைக்குப் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். எனவே, பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொண்டு, ரத்தச்சோகை வராமல் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ரத்தச்சோகை பற்றிய விழிப்புஉணர்வை தாயிடமிருந்து தொடங்குவதே சரி. 

ரத்தச்சோகை

ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் (Haemoglobin)  அளவு இயல்பான அளவைவிடக் குறைந்து காணப்படும் நிலையை ‘ரத்தச்சோகை’ (Anaemia) என்கிறோம்.  அதாவது, உடலிலுள்ள பல உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜனைக்  கொண்டு சேர்ப்பதுதான் ஹீமோகுளோபினின் முக்கியப் பணி. இதன் அளவு குறையும்போது ரத்தச்சோகை ஏற்படுகிறது. 

ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 11 -15 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு எல்லோருக்கும் ஒரே அளவாக இருக்காது. வயது, பாலினம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். அதாவது, நோயாளிகள் ஆண்களா-பெண்களா, அவர்களின் வயது, பெண்கள் என்றால், மாதவிடாய்க் காலத்தில் உள்ளவரா அல்லது கர்ப்பமுற்றவரா என்பதற்கேற்ப அதன் அளவீடுகள் மாறுபடும். 

அறிகுறிகள்...

* உடல் சோர்வு
* உடல் பலவீனம்
* தலைமுடி உதிர்வு
* லேசான மூச்சுத்திணறல், 
* பசியின்மை, சுவையின்மை
* கை, கால்கள் குளிர்ந்து போதல் அல்லது வீக்கம்  
* சீரற்ற இதயத் துடிப்பு, 
* உள் உறுப்புகளில் ரத்தக்கசிவு
* நகங்கள் பிளவுறுதல் 
* வெளிறிய சருமம்.

பரிசோதனை

ரத்த அணுக்களின்  எண்ணிகையைக் கண்டறியும் சி.பி.சி (Complete blood count - CBC) என்னும்  அடிப்படையான ரத்தப் பரிசோதனை மூலம் ஹீமோகுளோபின் அளவைக் கண்டறிய முடியும். 

ரத்தச்சோகையில் 400-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. ரத்தச்சோகை ஏற்படும் காரணத்தைப் பொறுத்து அது வகைப்படுத்தப்படும்.  எந்த வகையான  ரத்தச்சோகை என்பதை அறிந்த பிறகே குணப்படுத்த முடியும். எந்த வகை என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டால், அதற்கேற்ப சிகிச்சையளிக்கலாம்.  

யாருக்கு ஏற்படலாம்?

* மகப்பேறு அடையும் வயதை எட்டிய பெண்கள்

* கர்ப்பிணிகள்

* அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள்

* கைக்குழந்தைகள்

* குறைமாதத்தில் பிறந்தவர்கள் 

* வளர்ச்சியில் குறைபாடு உடையவர்கள்

* அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள்.

*இரும்புச்சத்துக் குறைபாடு (Iron deficiency) உள்ளவர்கள்

* வைட்டமின் குறைபாடு (Vitamin deficiency) உள்ளவர்கள்

*சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் 

* குடல் புற்றுநோய், அல்சர் உள்ளவர்கள்.

தீர்வுகள்...

* முதல் இரண்டு வயதுக்குள், 10- 14 இடைப்பட்ட வயதில், கர்ப்ப காலங்களில்தான் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த வயதுகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்துக் குறைபாடு சோதனை செய்துகொள்வது நல்லது. 

* கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், ராகி, சத்துமாவு, இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிக அவசியம். 

* ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

* உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை, நெல்லிக்காய், கேரட் போன்றவையும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.  

*தினசரி ஒரு வகைப் பழம் என்கிற கணக்கில் பழமாகச் சாப்பிடலாம்; பழச் சாறாகக் குடிக்கலாம். 

*உடலில் தேவையான அளவு இரும்புச்சத்து இருக்கவேண்டியது அவசியம். உணவில் கிடைக்கவில்லையென்றால்,  மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடலாம். 

*கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்கள் ஃபோலிக் ஆசிட் மற்றும் அதன் பிறகு கொடுக்கப்படும் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டரி மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

மேலும், பிற நோய்களால் ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 6 கிராமுக்கு கீழ் இருந்தால், மாற்று ரத்தம் ஏற்றவேண்டிய நிலை ஏற்படும்" என்கிறார் ரேவதிராஜ்.
 



Trending Articles

Sponsored