`மனிதனே... மனம் திரும்பு!’ சாம்பல் புதனின் சிறப்பு - தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்! #AshWednesdayமனிதனே
மனம் திரும்பு!
கல்வாரி நோக்கி, 
கால்களைப் பதித்து
கருணைதேவனைப்
பின்தொடர
மனம்திரும்பி வா!

இன்று முதல் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சில கருத்துகள் சொல்லப்படுகின்றன.  ''இப்போதாவது உண்ணாநோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்துடன் என்னிடம் திரும்பி வாருங்கள்'' என்கிறார் ஆண்டவர். 

Sponsored


Sponsored


நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமை உள்ளவர், பேரன்புமிக்கவர்'' - யோவேல் இரண்டாம் அதிகாரத்தில் 12 முதல் 13 வரையிலான இறைவசனங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Sponsored


'சாம்பல் புதன்', 'விபூதி புதன்', 'திருநீற்றுப் புதன்' (Ash Wednesday) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள், கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் ஒரு சோகமான விழா. சாம்பல் புதனில் தொடங்கி, 40 நாள்களுக்கு மேல் நீடிக்கும் இந்த தவக்காலப் பயணம் என்பது மனிதனின் சுய ஆய்வுப் பயணத்துக்கான காலமாகும். கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி மன மாற்றத்துக்கான காலமாக இதை அனுசரிக்கின்றனர். 

பைபிளில், நோவா காலத்தில் 40 நாள்கள் இரவும் பகலும் மழை பெய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. `இஸ்ரவேல் மக்கள் 40 ஆண்டுகளாக பாலைவனத்தில் கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர்.' `மோசே சீனாய் மலையில் 40 நாள்கள் தங்கியிருந்து திருச்சட்டம் பெற்றார்.' `இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாள்கள் நோன்பிருந்தார்.' இவற்றின் அடிப்படையில் 40 நாள்கள் என்பது மனம் வருந்தி மனம் மாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது.


கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு வழிபாட்டின்போது கையில் ஏந்தி வந்த குருத்தோலைகளை வீடுகளில் பத்திரமாக வைத்திருப்பார்கள். அவை அனைத்தையும் எடுத்து வந்து ஆலயத்தில் எரியூட்டி சாம்பலாக்கி, கிறிஸ்தவ மதகுருக்களால் நெற்றியில் பூசி இந்த ஆண்டு தவக்காலத்தைத் தொடங்குவார்கள். அப்போது. குருவானவர் `மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்' என்று சொல்லிக்கொண்டு சாம்பலை நெற்றியில் பூசுவார்கள். 

'சாம்பல்' என்பது பாவத்துக்காக மனம் வருந்துவதையும், மன மாற்றத்தையும், நிலையாமையையும் நினைவூட்டக்கூடியது. ஏழைகள் மற்றும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு உதவுவது, பிறரை மகிழ்ச்சிப்படுத்துவது, வெளிவேடம் இல்லாத இறை உறவுக்கு வழிவகுக்கும். ஜெபத்தைச் சொல்வது, பாவத்துக்காக மனம் வருந்தி உண்ணா நோன்பு இருப்பது போன்றவை இந்த தவக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய ஒழுங்குமுறைகளாகும்.


பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி கடவுளின் வார்த்தையை மிகவும் கவனமாக வாசிப்பதும் வாசிக்கக் கேட்பதும் அந்த வார்த்தைக்கேற்ப வாழ்வதும் தவக்காலத்தில் பொருத்தமானது. தாம் செய்த பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்பதும் அதே மன்னிப்பை பிறருக்கு வழங்குவதும் தவக்காலத்தின் சிறப்பாகும். தவக்காலங்களில் சாம்பல் புதனன்றும் புனித வெள்ளியன்றும் கிறிஸ்தவர்கள் உண்ணாநோன்பு இருப்பார்கள். இதுதவிர தவக்காலத்தின் மற்ற நாள்களின்போதும் வழக்கமாக உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்வதுண்டு. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி உண்பதைத் தவிர்ப்பார்கள்.

உலகின் பல பகுதிகளில் தவக்காலத்தின்போது சிறப்புக் காணிக்கைகள் பெறப்பட்டு ஏழை நாடுகளில் அவதிப்படுவோரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக அவற்றை நன்கொடையாகக் கொடுப்பதும் உண்டு. இந்தச் செயல்கள் அனைத்துமே உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; இறைவனோடும் பிறரோடும் உறவை ஆழப்படுத்த வேண்டும் என்பதையே முன்னிறுத்துகின்றன.Trending Articles

Sponsored