கண்டதும் காதல், காதலிக்க ஏற்ற வயது, காதல் ஏன் சிலருக்கு எட்டாக்கனி... மருத்துவம் விளக்கும் உண்மைகள்! #ValentinesDaySponsoredகாதல் இன்றி வாழ்வது சாத்தியமா? இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினத்துக்கும் அது சாத்தியம் இல்லை. காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்... இப்படி யாரோ ஒருவரின் மீதான நேசம்தான்  நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக்கொண்டிருக்கிறது. 

அன்பு, பாசம், நேசம், ஈர்ப்பு, பற்று, இனக்கவர்ச்சி, காமம்... எல்லாவற்றுக்கும் பொத்தாம் பொதுவாக `காதல்’ என்று ஓர் அர்த்தத்தை வைத்ததன் விளைவுதான் காதல் என்றாலே சிலர் முகம் சுளிக்கக் காரணம்!  ஆனால், இவை  அனைத்துமே `காதல்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கிவிடும் என்று அறிவியல் மற்றும் மனித ஒழுங்கியல் தொடர்பான ஆராய்ச்சிகள் கூறுகின்றன’’ என்கிறார் மனநல மருத்துவர் திவ்யா தனஞ்செயன்.

Sponsored


காதல் குறித்து பல மனோ ரீதியான விளக்கங்களையும் தருகிறார். 

Sponsored


``மேலே சொன்ன  இந்த உணர்வுகள் தூண்டப்படும் நேரங்களில், மனித மூளையின் செயலாற்றலை ஆராய்ந்ததில், அனைத்துமே ஒன்றோடொன்று மிகவும் நெருங்கிய தொடர்புடையவை என்பது கண்டறியப்பட்டது. உதாரணமாக. ஒரு குழந்தை தன் தாயைக்கண்டு சிரிக்கும்போதும், ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும்போதும், ஓர் ஆண் தனக்குப் பிடித்த பெண்ணைக் காணும்போதும் ஒரேவிதமான ரசாயன மாற்றங்களும் (Oxytocin, Vasopressin release), சீற்றங்களுமே(Adrenaline surge) நம் மூளையில் நிகழ்கின்றன. ஆக, இவற்றை வித்தியாசப்படுத்துவது எது? நம் வளரும் பருவத்தில் கற்றுத்தரப்படும் பழக்க வழக்கங்களும் (Behavioural learning), சமூக நெறிமுறைகளும் (Social rules and regulations)தான். இந்த விளக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு, இங்கு நாம் காதல் என்பதை, `பருவ வயதினர் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் தீவிர நேசத்தால் ஏற்படும் பாலின ஈர்ப்பு’ என்ற விளக்கத்தோடு மேலும் இதைப்பற்றி அலசுவோம்.

காதல்வயப்படுவது சரியா... தவறா?

உலகில் உயிர்கள் அழியாமல் நிலைத்திருப்பதன் முக்கியக் கோட்பாடு இனப்பெருக்கம். இதற்குச் சமூக ஒருங்கிணைப்பு, ஒன்றுகூடி வாழ்தல், இணை தேடல், கலவி ஆகியவை இன்றியமையாதவை. இவற்றுக்கெல்லாம் முதல் படி காதல் என்று அமையும்போது, நாம் காதல் வயப்படுவது இயற்கையின் செயல்பாடே. மேலும் இனப்பெருக்கத்துக்கு அப்பாற்பட்டு இந்தக் காதல், நம்பிக்கையான நீண்டகால உறவுகளுக்கு வழிவகுப்பதன் மூலம், வாழ்க்கையின் சவாலான சூழ்நிலைகளில் நமக்கு அரவணைப்பும் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கச் செய்கிறது. 

காதலிக்க ஏற்ற வயது எது? 

பிறந்த குழந்தைகூட தாயின் மீது காதல் கொள்ளும்போது, காதலுக்கு வயது வரம்பை எப்படி நிர்ணயிக்க முடியும்? மூன்று வயதிலேயே குழந்தைகள் எதிர் பாலினத்தவரை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். மேலும் பருவ வயதை அடையும்போது, உடலில் ஏற்படும் கூடுதல் உடற்கூறு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் இவர்களை அடுத்த கட்டத்துக்குத் தயார்ப்படுத்துகின்றன... ஏறக்குறைய 12 வயது முதலே நம் உடல் அதற்குத் தயாராகிவிடும். 

கண்டதும் காதல் வருமா?

ஆணும் பெண்ணும் இதில் வேறுபடுகின்றனர். ஆண்களது தேடல் மிக எளிது. ஆண்களுக்கு பெரும்பாலும் புற அழகு ஒன்றே போதுமானது. பார்த்ததும் பொறி தட்டிவிடும். இதில் அவர்களைக் கேலி செய்வதற்கோ, குறை கூறுவதற்கோ ஒன்றுமில்லை. ஏனெனில், இயற்கைத் தெரிவு முறை (Natural selection)-யின்படி இது மறைமுகமாக, ஒரு பெண்ணின் கருவுறுதல் திறனைக் (Fertility) குறிக்கிறது. 
கூடுதலாக, தனக்கு நெருக்கமான பெண்களின் (தாய், அக்காள், பாட்டி) குணநலன்களை இதுபோன்ற பெண்ணிடம் காணும்போது எளிதில் காதல் வயப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்திலும், இதில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை.

ஆனால், ஒரு பெண்ணின் தெரிவுப் பட்டியல் (Selection criteria) சற்று சிக்கலானது. தான் தேர்ந்தெடுக்கும் ஆண், எதிர்காலத்தில் தன்னையும் தன் பிள்ளைகளையும் காக்கும் திறன் உடையவனா என்பதே இவர்களது முதல் தேவை. அந்தக் காலத்தில், ஒருவனது வீரமும் உழைக்கும் திறனும் இதற்குப் போதுமானதாக இருந்தன. ஆனால், பெண்களும் ஆண்களுக்கு இணையாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில், 1,000 ஆண்களுக்கு 940 பெண்களே இருக்கிறார்கள் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி... ) என்கிற பட்சத்தில், சிக்கல் இன்னும் (முக்கியமாக ஆண்களுக்கு) அதிகமாகிறது.  

அழகு, அறிவுத்திறன், தனித்தன்மை, நம்பகத்தன்மை, தன்னுடன் அதிக நேரத்தையும் காசையும் செலவிட யோசிக்காதவன், தன்னைச் சமமாக நடத்துபவன்... என்று நீளும் பட்டியலில் மற்றவனைவிட, தான் சிறந்தவன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆண்கள் தள்ளப்படுகிறார்கள். இது போதாதென்று, சினிமா, சீரியல்கள், வலைதளம் மூலம் ஒரு முன்மாதிரி ஆண் என்பதற்குத் தேவையற்ற ஹீரோயிசம் (ஒரே punch-ல் பத்து பேரைப் பறக்கவிடுவது, பைக்கில், ஏரோப்ளேன் சாகசம் காட்டுவது, சிக்ஸ்பேக் பேர்வழிகள் என்று) முன்வைக்கப்படுகிறது. சொல்லப்போனால் இவற்றையெல்லாம் காணும்போது காதல் உணர்வைவிட, காமெடி உணர்வுதான் பெண்ணுக்கு ஏற்படும். கூடுதலாக, நம் சமூகத்தில் ஊறிக்கிடக்கும் சாதிக்கட்டமைப்பு. இத்தனை குழப்பத்தில், தான் ஓர் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்ற தெளிவுக்கு வந்து, ஒருவனைத் தேர்ந்தெடுப்பதற்குள் சில பல காதல் தோல்விகள் அரங்கேறிவிடும். `கண்டதும் காதல்’ இனிக்கலாம், ஆனால், நிலைக்காது.

காதல் ஏன் பலருக்கு எட்டாக்கனியாக இருக்கிறது?

'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.’ இது காதலுக்கும் பொருந்தும். எடுத்த எடுப்பில் கண்மூடித்தனமாக, அது அங்கீகரிக்கப்படுமா என்பதைப் பற்றி யோசிக்காமல், ஒட்டுமொத்த பாசத்தையும் ஒருத்தியிடம் கொட்டுவது. 

வீட்டில் "உனக்கென்னடா நீ சிங்கக்குட்டி மாதிரி இருக்கே" , "எம்புள்ளைக்கு ஆயிரம் பொண்ணுங்க வரிசையில நிப்பாங்க" போன்ற அடைமொழிகளை ஆணாகப் பிறந்த ஒரே தகுதிக்காக ஊட்டி ஊட்டி வளர்த்துவிடுவது நம் தாய்மார்களின் வாடிக்கை. அதையும் நம்பிக்கொண்டு இந்த ரோமியோக்கள், `எனக்கு என்ன குறை, இந்தப் பொண்ணுங்க ஏன் இவ்ளோ சீன் போடுறாங்க..?’ என்று அங்கலாய்ப்பது இன்னும் வேடிக்கை.

இந்தப் பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? தனக்குப் பொருத்தமானவனா என்று யோசிக்காமலேயே, தனக்கும் ஒரு ரசிகன் கிடைத்துவிட்டான் என்ற குஷியில், சும்மா சுற்றிக்கொண்டிருந்தவனை உசுப்பிவிட்டுவிட்டு, பின்பு அவசரப்பட்டுவிட்டோமோ என்று புலம்புவது. மேற்சொன்ன இரு போக்குகளாலும், இருபாலினத்தவர்களுக்கும் இன்னல்கள் உருவாகும். 
எட்டும் கனிகள் அனைத்தும் ருசிக்காது.

காதலைக் கையாள்வது எப்படி?

`காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...’

காதல் என்பது இணைத்தேடல் எனும் சவாலான அத்தியாயத்துக்கான நுழைவுத்தேர்வு. முதலில் நம் வாழ்க்கைத்துணையிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதில் நாம் தெளிவுற வேண்டும். மேலும், அன்று முதல் இன்று வரை, இந்த உலகம் பெண் வழிச் சமூகமே. என்னதான் ஆணாதிக்கம் என்று நாம் கூப்பாடு போட்டாலும், அப்படிப்பட்ட ஆணையும் ஆளுமை செய்பவள் பெரும்பாலும் ஒரு பெண்ணாகத்தான் (தாய், தமக்கை, மனைவி, தோழி, காதலி) இருப்பாள். ஆக, இங்கு தேர்வின் விதிகளையும், மதிப்பளவையும் நிர்ணயிப்பவள் பெண்ணே. காதலில் ஒரு பெண்ணின் முக்கியத் தேவைகள் என்னவென்று முன்னரே பார்த்தோம். அதற்கேற்பத் தன்னைத் தயார் செய்துகொள்வதே ஓர் ஆண்மகனின் சாமர்த்தியம். இதையெல்லாம் எப்படியோ சமாளித்து, ஒருவழியாக ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், இவன்/இவள் நம்ம சாதி இல்லையே என்று கம்பு சுற்றும் பெற்றோர், உறவினரின் இடர்ப்பாடு இந்த விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது.

பழகப் பழக காதலும் புளித்துவிடுமா?

டைம்பாஸுக்கு, கெத்து காண்பிக்கக் காதலிப்பது, எடுபிடி ஏவலுக்கு ஆள் பிடிப்பது, நம்முடைய விரக்திகளை/செலவுகளை எல்லாம் ஈடுகட்ட ஒருவரை பலிகடா ஆக்குவது, ஒத்திகை பார்ப்பது... இவற்றுக்காக மட்டும் காதலைப் பயன்படுத்தும்போது புளிக்கத்தான் செய்யும். முக்கியமாக, இந்தக் கண்டதும் காதல் வகையறாக்கள். `பழகப் பழகத்தானே உள்ளிருக்கும் உண்மையான குணநலன்கள் வெளிப்படும்... அப்போ, பழகிப் பார்ப்பதில் என்ன தவறு?’ என்பவர்களுக்கு, பழகிப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லையென்றால் எந்த அவப்பெயரும், மனக்கசப்பும், பின்விளைவுகளும் ஏற்படாமல் அவரவர் வாழ்க்கையை வாழத் தயாரா நம் சமூகக் கட்டமைப்பு அதை அனுமதிக்குமா என்ற கேள்வி கேட்டால், அதற்கான பதில் கிடைக்கும். இந்த மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு நாம் மாற, இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது.

என்னவெல்லாம் செய்யக் கூடாது ?

ஆணோ, பெண்ணோ நச்சரிக்கும் குணமுடையவரின் மேல் கவர்ச்சி ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. விடாமுயற்சிக்கும் நச்சரிப்புக்கும் ஒரு மெல்லிய கோடே வித்தியாசம். இதற்கு அடுத்தவர் மனநிலையிலிருந்து ஒரு விஷயத்தை அணுகும் திறன் (Empathy) மிக அவசியம். அடித்துப் பிடித்து ஏறி, இடம் பிடித்துப் பேருந்தில் வேண்டுமானால் பயணம் செய்யலாம்; நம்மேல் ஈர்ப்பு இல்லாத ஒருவர் மனதில் இடம்பிடித்து வாழ்க்கைப் பயணம் மேற்கொள்வது மிகக்கடினம்.

காதலில் உண்மை, போலி என்று எதுவுமில்லை. நம் எதிர்பார்ப்புகளே அதைத் தீர்மானிக்கின்றன. நம் காதலின் நம்பகத்தன்மை ஆட்டம் காண்பது, கருத்து வேறுபாடுகள், முன்னுரிமைகள், விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் பிரச்னை என்று ஒன்று வரும்போதுதான். அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் (Problem-solving skills) என்பதைப் பொறுத்தே, காதல் அடுத்த கட்டத்துக்கு நகரும்.

எல்லாம் செய்தாகிவிட்டது, இருந்தும் கைகூடிய காதல் நிலைக்கவில்லை... எப்படிச் சமாளிப்பது?

பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளுதல் (Reasoning out and acceptance)

மேற்கூறப்பட்ட எந்தக் காரணத்தால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து, அதைக் கோபத்தில், ஆதங்கத்தில், இயலாமையால் கொந்தளிக்கும் மூளைக்குக் கொண்டு சேர்ப்பது.

உணர்ச்சி மடைமாற்றம் (Sublimation) 

நமக்கும் மற்றவருக்கும் இடையூறு இல்லாத வகையில் நம்முள் எழும் உணர்ச்சிக் குமுறலை வெளிப்படுத்துவது. உதாரணமாக கவிதை எழுதுவது, உடற்பயிற்சி, பிராணிகள் வளர்ப்பு... போன்றவை.
நம் நீண்ட நாள் லட்சியத்தை/இலக்கை நோக்கி (அப்படி ஒன்று இன்று வரை இல்லாத பட்சத்தில், தாமதிக்காமல் ஒன்றை நிர்ணயித்து) முழு மனதையும் அதில் செலுத்துவது. (Self-improvisation)

நம்மேல் பிரியமுள்ளவர்கள் (குடும்பத்தார்), நமக்குப் பிரியமானவர்களுடன் (நண்பர்கள்) அதிக நேரம் செலவிடுவது. (Support system)


தவிர்க்க வேண்டியவை... 

நம்மை நாமே குறை கூறுவது (Self-blaming), நம் கோபத்தை/ஏமாற்றத்தை நம்மீது (Self-harm) அல்லது பிறர் மீது காட்டுவது (Displacement/revenge), தங்கள் காதலரையோ, காதலியையோ பற்றி அவதூறு பரப்புவது (Defaming), போதைப் பழக்கங்களுக்கு அடிமை ஆகுதல் (Drugs, Alcoholism). இந்த போதைப் பழக்கம் மேற்சொன்ன, தவிர்க்க வேண்டிய அனைத்தையும் செய்யத் தூண்டும் குருட்டு தைரியத்தைத் தரும் ஆபத்துடையது.

அடுத்த காதலுக்கு மனம் தயாராகும்போது, நம்முடைய கடந்த காலம் கற்றுத்தந்த பாடங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிர்கால உறவுக்கு வழிவகுக்க வேண்டும் (Learn and Move on).

நம் முன்னாள் காதலன்/காதலியை நேரில் கண்டாலோ அல்லது அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டலோ, `எல்லாம் நன்மைக்கே’ என்ற சிறு புன்முறுவலுடன் கடந்து செல்ல முடிகிறதென்றால், நீங்கள் ஒரு மனிதனாக வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்" என்கிறார் மனநல மருத்துவர் திவ்யா தனஞ்செயன்.Trending Articles

Sponsored