பாத்ரூமில் ஸ்ட்ரோக், மாரடைப்பு வருவதற்கு தவறாகக் குளிக்கும் முறை காரணமா?



ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் காலையில் பாத்ரூமில்தான் பெரும்பாலும் ஏற்படுகின்றன’ என்ற செய்தி பரவிவருகிறது. `ஷவரில் குளிக்கும்போது நீர் நேரடியாகத் தலையில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதனால், மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும். இப்போது நாம் குளிக்கும் முறை மிகவும் தவறானது. முதலில் தலையில் தண்ணீர் ஊற்றவே கூடாது. காலிலிருந்துதான் நீரூற்றத் தொடங்க வேண்டும். குளத்தில் குளிக்கும்போது யாரும் நேரடியாகத் தலையை மூழ்கவைத்துக் குளிப்பதில்லை. முதலில் காலை உள்ளே வைப்போம். பிறகு, இடுப்பு, மார்பு எனப் படிப்படியாகத்தான் தலை மூழ்குவோம். குளத்தில் மட்டுமல்ல... வீட்டில்கூட நம்மில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் குளித்துவந்தோம். அதனால்தான் அப்போதெல்லாம் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் அதிகம் இல்லாமலிருந்தன. இப்போது அவை அதிகமாகக் காரணம் நாம் குளிக்கும் முறைதான்’ என்றும் அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது.

Sponsored


இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை? சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையின் நரம்பியல்துறைத் தலைவரும், நரம்பியல் நிபுணருமான

லஷ்மி நரசிம்மனிடம் பேசினோம்... ``பொதுவாகவே, வயதானவர்களுக்கு மலச்சிக்கல் பாதிப்பு இருக்கும். மலத்தை வெளியேற்ற மிகவும் கஷ்டப்படுவார்கள். உள்புறமாக வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுப்பார்கள். அப்படி, அதிக அழுத்தம் தரும்போது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

Sponsored


அதேபோல, மலம் கழிக்கும்போது காலை மடக்கி உட்கார்ந்திருக்கும் முறையாலும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையலாம்; மயக்கம் வரலாம். சில நேரங்களில், மலம் கழிக்க அதிகமாக ஸ்ட்ரெயின் செய்யும்போது ரத்தக்குழாய் வெடித்து, பக்கவாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Sponsored


சிறுநீர் கழிக்கும்போதுகூட சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். வெகுநேரம் அடக்கிவைத்திருந்து, சிறுநீரை வெளியேற்றும்போது சிறுநீர்ப்பையில் உள்ள `வேகஸ்’ (Vagus ) என்ற நரம்பு தூண்டப்படுவதால் இந்த மயக்கம் ஏற்படும். இதற்கு `மிக்ட்யூரிஷன் சின்கோப்’ (Micturition syncope) என்று பெயர்.

`தலையிலிருந்து தண்ணீர் ஊற்றிக் குளித்தால் ஹார்ட் அட்டாக் வரும்’ என்பதெல்லாம் மிகவும் தவறான தகவல். சிலருக்கு பாத்திங் எபிலெப்ஸி (Bathing epilepsy) பாதிப்புகள் சிறு வயதிலிருந்தே இருக்கும். அவர்களுக்கு மட்டும் தலையில் நீர் ஊற்றும்போது சின்னதாக அதிர்வு ஏற்பட்டு, சிறு மயக்கம் உண்டாகலாம். கொஞ்ச நேரத்தில் அவர்கள் தாங்களாகவே எழுந்துவிடுவார்கள். இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. இதற்காக சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்ளவும் தேவையில்லை" என்கிறார் பேராசிரியர் லஷ்மி நரசிம்மன்.

இதய நோய் சிறப்பு நிபுணர் சதானந்த், "மலம் கழிக்கும்போதும் குளிக்கும்போதும் மட்டுமல்ல, எந்தச் செயலையும் மிகத் தீவிரமாகச் செய்தால் இது போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இதயத் தசைப்பகுதியில் அழுத்தம் அதிகமாகும்போது இது போன்ற பாதிப்புகள் கண்டிப்பாக ஏற்படும்.

மலம் கழிக்கையில் அதிகமாக முக்கும்போதும், குனிந்து தண்ணீரோடு பக்கெட்டைத் தூக்கும்போதும் இதய ரத்தக்குழாயில் அடைப்பு

ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு `இஸ்சேமியா’ (Ischaemia) என்று பெயர். பலருக்கு இந்த பாதிப்பு இருந்தாலும், வெளியே தெரியாது. அதிகமாக ஸ்ட்ரெயின் செய்யும்போது இதயம் சீரில்லாமல் துடிக்கும்; இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, மயக்கம் ஏற்படும். இந்த நிலையில் சிலருக்கு மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது" என்கிறார்.

சென்னை, அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணவாளனிடம் பேசினோம்... ``நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு நேரத்தில் செயல்பட ஆரம்பிக்கும். இதயத்தின் செயல்பாடு, காலை 5 மணி முதல் 7 மணிவரைதான் தீவிரமாக இருக்கும். அந்த நேரத்தில், தலையில் குளிர்ந்த நீரை ஊற்ற்றினால், ரத்தநாளங்கள் சுருங்கி ரத்த அழுத்தம் அதிகமாகும். மனஅழுத்தம் உள்ளவர்கள், உயர் ரத்தஅழுத்த பாதிப்பு உள்ளவர்கள், சரியாகத் தூங்காதவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது மயக்கம், ரத்தக்குழாய் வெடிப்பு ஆகிய பாதிப்புகள் உண்டாகும்.

குளிக்கும்போது தலையில் இருந்து தண்ணீர் ஊற்றுவது தவறான முறை. அதிகமான ரத்த ஓட்டம் உள்ள இடம் தலை. அதனால் தலையில் முதலில் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்த்துவிட்டு, குறைவான ரத்த ஓட்டம் உள்ள பாதத்தில் இருந்து குளிக்க ஆரம்பிக்க வேண்டும். படிப்படியாகத்தான் தலைக்குத் தண்ணீர்விட வேண்டும்.

மலம் கழிக்கும்போது அதிகமாக ஸ்ட்ரெயின் செய்யக் கூடாது. மேற்கத்தியபாணிக் கழிவறைகளைத் தவிர்த்துவிட்டு நம் இந்திய பாணிக் கழிவறையைப் பயன்படுத்தலாம். இதய பாதிப்பு உள்ளவர்கள், நம் பாணிக் கழிவறையில் உட்கார்ந்து எழும்போது ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே, அவர்கள் மேற்கத்தியபாணி கழிவறைகளைப் பயன்படுத்தலாம்" என்கிறார் மணவாளன்.



Trending Articles

Sponsored