புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் கோபால்ட் அலகுகள்... பயன் தருமா அரசு அறிவிப்பு? #CobaltTherapy



புற்றுநோய், யாருக்குமே வரக் கூடாத கொடிய நோய். காரணம், இதன் சிகிச்சைக்காகும் செலவு மிக அதிகம். அதனாலேயே ஏழைகள் பலர் சிகிச்சையைத் தொடர முடியாமல் தவிக்கிறார்கள். ஆனாலும், இன்றைக்கு `இவருக்கு புற்றுநோய்’, `அந்தம்மா புற்றுநோயால இறந்துட்டாங்களாம்...’ போன்ற செய்திகளைச் சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் 2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. `விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருக்கும் அரசு மருத்துவமனைகளில் 34 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கோபால்ட் அலகுகள் (Cobalt therapy units) அமைக்கப்படும்’ என்றும் `10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இப்போதுள்ள அலகுகள் மாற்றியமைக்கப்படும்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

Sponsored


``ஏழைகளுக்கு பயன்தரக்கூடியதுதானா கோபால்ட் அலகுகள்?’’ கதிர்வீச்சு புற்றுநோயியல் மருத்துவர் ரத்னாதேவியிடம் கேட்டோம்.

Sponsored


"புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கோபால்ட் எந்திரத்தின் மூலம் கதிர்வீச்சு செலுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் புற்றுநோயால் உருவாகும் செல்களும் திசுக்களும் அழிக்கப்படும்; பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடலாம். கோபால்ட் எந்திரத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும்போது அதற்கான பராமரிப்புச் செலவுகள் மிகவும் குறைவுதான். அதே நேரத்தில், அந்த எந்திரத்தின் ஆயுள்காலம் அதிகம் என்பதால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கோபால்ட் சிகிச்சையே பயன்படுத்தப்படுகிறது. 

Sponsored


புற்றுநோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளில், `கதிர்வீச்சு’, `கீமோ’, `சர்ஜரி’ என மூன்று முக்கியமான வகைகள் உள்ளன. இவற்றில், கோபால்ட் சிகிச்சை கதிர்வீச்சு முறையில் அளிக்கப்படுகிறது. கீமோ, சர்ஜரி போன்ற மற்ற இரண்டு வகைகளைக் காட்டிலும், கதிர்வீச்சு முறை சிகிச்சை பல்வேறு புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும். கதிர்வீச்சு சிகிச்சையைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, டெலிதெரபி (Teletherapy) மற்றொன்று பிராச்சிதெரபி (Brachytherapy). டெலிதெரபி சிகிச்சையில் கதிர்வீச்சு எந்திரம் உடலின்மேல் படாது. பிராச்சிதெரபியில், ரேடியம் ஊசிகளைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படும். 

கோபால்ட் சிகிச்சை டெலிதெரபி வகையைச் சேர்ந்தது. அந்த வகையில், அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், லீனியர் அக்ஸலரேட்டர் - லிநாக் (Linear accelerator - LINAC) போன்ற நவீன சிகிச்சை முறைகள் இப்போது வந்துவிட்டன. பராமரிப்பு, செலவு அடிப்படையில் கோபால்ட் சிகிச்சையே  சிறந்தது. தரத்தின் அடிப்படையில் பார்த்தால் லிநாக் போன்ற சிகிச்சையே நல்லது. 

கோபால்ட் சிகிச்சையில், கதிர்வீச்சு முறை மாறுபட்ட (Divergent) தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால், லிநாக் முறை மூலம் சிகிச்சை

அளிக்கும்போது பாதிக்கப்பட்ட பகுதியின்மீது மட்டும் கவனம் குவிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். பாதிக்கப்படாத பகுதியின்மீது கதிர்வீச்சுப் பட்டால், அந்தப் பகுதி பிற்காலத்தில் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அது, இரண்டாவது முறையாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்பாகக்கூட இருக்கலாம். லிநாக் போன்ற நவீன கருவிகள், பாதிக்கப்பட்ட இடத்தை மட்டும் சரிசெய்வதால், வருங்காலத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் ஒருவருக்குச் சிகிச்சையளிக்கலாம்" என்கிறார் ரத்னாதேவி.

"புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் கதிர்வீச்சு எந்திரம்தான் கோபால்ட். இது, காமா கதிர்வீச்சை (Gamma Rays) வெளிப்படுத்தக்கூடியது. கோபால்ட் சிகிச்சை சென்னை, மதுரை போன்ற தமிழகத்தின் மிக முக்கியமான சில பெருநகங்கள் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் கிராமங்களில், சிறுநகரங்களில் வசிப்பவர்கள் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் தவித்துப்போவார்கள். சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் பெருநகரங்களை நோக்கியே அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. இது, நோயாளிகளுக்கு அதிக சிரமத்தைக் கொடுத்தது. தமிழக அரசின் அறிவிப்பால், இனிமேல் அப்படிப்பட்ட சூழல் வராது என்று நம்பலாம். 

புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் கதிர்வீச்சு எந்திரங்கள், அடுத்தடுத்த நிலைகளை நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கின்றன. அப்படிப்பட்ட எந்திரங்களில் அடிப்படையானது கோபால்ட் அலகு. அடிப்படையான ஓர் எந்திரம் இவ்வளவு நாள்களாகக் கிராமப்புற மக்களிடம் சென்று சேராமலிருப்பதே வருந்தத்தக்க ஒரு விஷயம். இப்போது மாநகர மருத்துவமனைகளைச் சென்றடைந்திருக்கிறது. இதற்காக அரசைப் பாராட்டலாம். ஆனாலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும் சூழல் விரைவில் உருவாக வேண்டும்" என்கிறார் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் மருத்துவர் சரவணன் பெரியசாமி.



Trending Articles

Sponsored