உறுப்பு மாற்றினால் நுரையீரல் நோய்த்தொற்று ஏற்படுமா? - எம்.நடராசன் பாதிப்பின் மருத்துவ பின்னணிSponsored'சசிகலாவின் கணவர் எம்.நடராசனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்’ என்று அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் குளோபல் மருத்துவமனை நிர்வாகம் இப்போது தெரிவித்திருக்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இதே குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடராசன். கல்லீரலும் சிறுநீரகமும் மிகுந்த பாதிப்படைந்திருந்ததால், அவருக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. சில நாள்களில் உடல்நலம் சீராக, வீடு திரும்பினார் நடராசன்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று உடல்நலக்கோளாறு காரணமாக மீண்டும் பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும்,வென்டிலேட்டர் மூலமாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இப்போதும், அதே நிலைதான் தொடர்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sponsored


அறுவைசிகிச்சை செய்துகொண்ட பின்னர் நலமாக இருந்த நடராசனுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்படக் காரணமென்ன? அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் பேசினோம். ``நுரையீரல் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்ட நடராசனுக்கு, மருத்துவமனையில் மாரடைப்பும் ஏற்பட்டது. உடனடியாக, மாரடைப்பைச் சரிசெய்வதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தற்போது மாரடைப்பு பாதிப்பு குறைந்திருக்கிறது. ஆனால், நுரையீரல் தொற்று பாதிப்பு அப்படியேதான் இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இருந்ததைவிட, இப்போது அவர் உடல்நலம் சற்று தேறியிருக்கிறது. மருந்து, மாத்திரைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல்நிலை இருக்கிறது. ஆனாலும், அபாயநிலையிலிருந்து வெளியேறிவிட்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இரண்டு, மூன்று நாள்கள் அவரின் உடல்நிலை தாக்குப் பிடித்து மருந்துகளை ஏற்றுக்கொண்டால், குணமடைவதற்கு வாய்ப்பிருக்கிறது" என்றார் அவர்.

Sponsored


உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் என்பது மருத்துவர்களின் கருத்து. ஒருவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுத்து வேறொருவருக்கு மாற்றும்போது, புதிய உடலுக்கு ஏற்ப அந்த உறுப்புகள் பொருந்தி இயல்பானநிலையை அடைவதற்கு சில நாள்கள் ஆகும். அந்த நாள்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். `அவர் பெரிதாக உடல்நிலையில் கவனமோ, அக்கறையோ செலுத்தவில்லை’ என்கிறார்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

` நுரையீரல் நோய்த்தொற்று எதனால் ஏற்படுகிறது, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டால் இந்தப் பாதிப்பு ஏற்படுமா?’ நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம்.

"வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றால்தான் நுரையீரல் தொற்று ஏற்படுகிறது. வயதானவர்களுக்கு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தொற்று ஏற்படும் வாய்ப்புண்டு. அதிலும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு மிக அதிகமான வாய்ப்புள்ளது. இதை மருத்துவரீதியாக 'நிம்மோனியா' (Pneumonia) என்போம்.

உதாரணமாக, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, அந்தப் புதிய உறுப்பை உடல் நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு 'இம்யூனோசப்ரஷன்’ (Immunosuppresion) என்னும் ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த மருந்து சிலருக்கு நுரையீரல் நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். இயற்கையாகச் சுவாசிக்க முடியாது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். இதைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் இருக்கின்றன. இது பலருக்குத் தெரிவதில்லை. சில நேரங்களில் தடுப்பூசிகள் போட்டாலும், நோய்த்தொற்று ஏற்படும். இதனால், இதயத்துக்குச் செல்லவேண்டிய ரத்த ஓட்டம் தடைபட்டு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொள்பவர்கள், அறுவைசிகிச்சை செய்துகொண்ட பின்னரும் கவனமாக இருக்கவேண்டியது மிக அவசியம்" என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.Trending Articles

Sponsored