தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தால் என்ன பலன்? - மருத்துவர்கள் கருத்து #VikatanExclusive



Sponsored



தமிழகம் முழுவதும் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான கிளினிக்குகள், ஸ்கேன் மையங்கள், பரிசோதனை மையங்கள், மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன. ஆனால், இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது கிடையாது. அதாவது, சாதாரணமாக ஒரு கிளினிக்கையோ, மருத்துவமனையையோ தொடங்குவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. கண்காணிப்பில்லாமல், யாருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயமில்லாமல் தனியார் மருத்துவமனைகள் தன்னிச்சையாகச் செயல்பட்டுவருகின்றன. முக்கியமாக, மருத்துவமனையின் அன்றாட நடைமுறைகளில் அரசு தலையிட முடியாது. ஸ்கேன் சென்டர், கிளினிக்குகளுக்கும் இது பொருந்தும். இதனாலேயே, வணிக நோக்கில் பல மருத்துவமனைகள் முளைத்தன; முளைத்துக்கொண்டிருக்கின்றன. இப்படி, தெருவுக்குத் தெரு புற்றீசல்போல் பெருகிவரும் கிளினிக்குகளும், தனியார் மருத்துவமனைகளும், வர்த்தக நோக்கத்தைக் கொண்டிருப்பதால், அடிப்படை வசதிகள்கூட அவற்றில் இருப்பதில்லை என்பது கண்கூடு. 

இப்படிச் செயல்படும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பரிசோதனைக்கூடங்களை முறைபடுத்துவதற்காக, முதலில் தனியார் மருத்துவமனைகளைப் பதிவுசெய்யவும், அவற்றை முறைப்படுத்திக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசால் 1997-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்பட்டது.  இருந்தாலும், மருத்துவர்களின் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், விதிமுறைகள் வகுக்கப்படாததாலும் இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. 2010-ம் ஆண்டில் மத்திய அரசு நிறைவேற்றிய மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தையும் மாநில அரசு அமல்படுத்தவில்லை. 

Sponsored


அதே ஆண்டில், மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ நிறுவனங்கள் (பதிவு செய்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம், ஏற்கெனவே, மாநில அரசு கொண்டு வந்த சட்டம் இரண்டையும் ஆராய்ந்து அறிக்கை அளிக்க, வல்லுநர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த பரிந்துரைகளைப் பரிசீலித்து, இப்போது, `தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம், 2018’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (22-ம் தேதி) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்த மருத்துவம், யுனானி ஆகிய மருத்துவப் பிரிவுகளில் சேவைசெய்யும் மருத்துவ நிலையங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ``இந்தச் சட்டம் விரைவில் ஆளுநர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்" என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

Sponsored


``இந்தச் சட்டத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன... இதனால் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன... போலி மருத்துவர்களை ஒழிக்க இந்தச் சட்டம் எந்த வகையில் உதவும்?’’ சுகாதாரத் துறையின் செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். 

``தமிழகத்தில் ஏற்கெனவே உடல் உறுப்பு தானங்களை முறைப்படுத்துதல், குடும்பக்கட்டுப்பாடு, காப்பீடு போன்ற மருத்துவச் சேவைகளைக் கண்காணிக்க தனிச்சட்டங்களும், கண்காணிக்கும் ஆணையமும் செயல்பாட்டில் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் செயல்படும் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த எந்த ஆணையமோ, அமைப்போ இல்லை. ஆனால், இப்போது நிறைவேற்றப்படும் சட்டத்தில் மருத்துவமனை குறித்த விவரங்கள், மருத்துவமனைகளிலிருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கை, அங்கே அளிக்கப்படும் சிகிச்சை, அங்கிருக்கும் வசதிகள் போன்ற விவரங்களைப் பெற முடியும். மருத்துவமனைகளில் பராமரிக்கப்படவேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை, சிகிச்சைத் தரம் போன்றவற்றை நிர்ணயிக்க முடியும். இதனால் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யவும் முடியும். 

இந்த சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் மருத்துவ நிறுவனங்கள், அறிவிப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள்ளும், புதிதாகத் திறக்கப்படும் மருத்துவ நிறுவனங்கள் ஆறு மாத காலத்துக்குள்ளும் பதிவு செய்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டிருக்கும் மருத்துவமனைகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அவற்றின் விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தமிழக அரசிதழில் வெளியிடப்படும். இந்தச் சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்படும். போலி மருத்துவர்களைக் கண்டறியவும், மருத்துவமனைகளை முறைபடுத்தவும் இந்தப் புதிய சட்ட விதிமுறைகள் உதவும்.

இந்தச் சட்ட பிரிவு, மாநில அளவிலான அறிவுரைக் குழு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் தலைமையிலும், மாவட்டக் குழு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துணை இயக்குநர் (குடும்ப நலம்) தலைமையிலும் அமைக்கப்படவிருக்கிறது. 

மேலும், மருத்துவ நிறுவனம் ஒவ்வொன்றும், தேசிய மற்றும் மாநிலச் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் பங்குகொள்ள வேண்டும். தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; வகுத்துரைக்கப்படும் படிவத்தில் மருத்துவப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். மருத்துவ நிறுவனங்கள், இந்தச் சட்டத்தையோ, இயற்றப்படவுள்ள விதிகளையோ மீறினால் விசாரணை, ஆய்வு மற்றும் தேவைப்பட்ட இனங்களில் இந்தத் திருத்தச் சட்டத்தில் தண்டனை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, விதிகளை மீறும் மருத்துவ நிறுவனங்களுக்கு 5,000 முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். விதிமீறல் தொடர்ந்தால்,  மருத்துவமனையின் பதிவு ரத்துசெய்யப்படும்" என்றார் ராதாகிருஷ்ணன்.

``இப்போது நிறைவேற்றப்படவிருக்கும் சட்டம் போதுமானதுதானா... இதிலுள்ள நிறைகள், குறைகள் என்னென்ன?’’ என்று மருத்துவரும் சமூக ஆர்வலருமான புகழேந்தியிடம் கேட்டோம். 

``மருத்துவமனைகளை முறைப்படுத்தும் முன்னெடுப்பு வரவேற்கக்கூடியதுதான். அதைவிட பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் சிகிச்சை முறைகளைப் பற்றிய வரையறைச் சட்டம் நிறைவேற்றுவதே முக்கியமானது. வெளிநாடுகளில் ஒரு நோய்க்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்; எவ்வளவு மருந்து பரிந்துரைக்க வேண்டும் என்பன உள்பட சிகிச்சை முறைகள் பற்றி தெளிவான சட்டங்களும் அதை மீறும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் மருந்து மாத்திரை, சிகிச்சை முறைகள் பற்றிய வழிகாட்டுதல் மட்டுமே இருக்கிறது. அவற்றைச் சட்டமாக இயற்றி கண்காணித்தால் மட்டுமே பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்" என்கிறார் புகழேந்தி.

இது குறித்து தனியார் மருத்துவமனை நடத்தி வரும், மருத்துவர் அருணாசலத்திடம் பேசினோம்.... ``மருத்துவமனையைப் பதிவுசெய்து முறைப்படுத்துவது பாராட்டுக்குரியது. அதிலும் அறுவைசிகிச்சை, பிரசவம் பார்க்கும் சாதாரண மருத்துவமனைகளிலும் ஆபரேஷன் தியேட்டர் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பில்லாமல் மருத்துவமனைகளும், முறையான மருத்துவம் பயிலாமல் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்களின் எண்ணிக்கையும்  குறையும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் மருத்துவமனைகளிலுள்ள அடிப்படை வசதிகளை அதிகரிக்கச் சொல்வதால், சேவை அடிப்படையில் குறைந்த விலையில் மருத்துவம் பார்க்கும் சிறிய அளவிலான மருத்துவமனைகளும், கிளினிக்குகளும் அதைத் தொடர முடியாமல் போகலாம். அதனால் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கே இது சாதகமாக அமையவும் வாய்ப்பிருக்கிறது" என்கிறார். 

இந்த மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் பல்வேறு மருத்துவச் சங்கங்களையும், மருத்துவ வல்லுநர்களையும் கலந்தாலோசித்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அந்த முழுமையான விதிமுறைகள் ஒருவார காலத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. 

தனியார் மருத்துவத்தை ஒழுங்குபடுத்த உதவும் இந்தச் சட்டம் சாதாரண மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், குறைந்த செலவில் தரமான சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதாக  இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.



Trending Articles

Sponsored