`காச நோயைக் குணப்படுத்துவது ஈஸி!’ – உலக காசநோய் தினப் பகிர்வு! #WorldTuberculosisDay



ஒரு காலத்தில் உயிரைப் பறிக்கும் நோயாகக் கருதப்பட்டது காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டு, சதா இருமலோடு வேலைக்கும் போய், குடும்பத்தையும் காப்பாற்றிக் கரைசேர்த்து உயிரையும்விட்ட தமிழ் சினிமா கதாநாயகியைப் பார்த்து கண்ணீர் வடித்த ரசிகர்களெல்லாம் இங்கே இருக்கிறார்கள். புற்றுநோயைப்போல அவ்வளவு தீவிரமான நோய் அல்ல காச நோய். ஆனால், இதுகுறித்த பயம், எல்லோரையும் ஆட்டுவிக்கக் கூடிய ஒன்று. காச நோய்க்கு மருந்து உண்டு; அதை குணப்படுத்த முடியும். என்றாலும்கூட, இன்றைய டிஜிட்டல் உலகிலும் அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை. உலக காச நோய் தினமான இன்று, காச நோய் ஏன் ஏற்படுகிறது, அதற்கான சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் பொது நல மருத்துவர் ஆர்.பிரபாகரன்...

Sponsored


`காசநோய்’, `எலும்புருக்கி நோய்’ எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் டி.பி நோய் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மனித இனத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. 3,000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய மம்மிக்களில் இருந்த எலும்புகளைச் சோதித்துப் பார்த்தபோது, அவற்றில் காச நோய் பாதித்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

Sponsored


ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆசியக் கண்டத்திலும் வாழும் மக்கள் காலம் காலமாக காச நோயை எதிர்கொள்வதற்கு ஏற்ற எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மனிதன் காச நோய் என்கிற ஒன்றை நம்பவே இல்லை. சாபத்தாலும், பாவத்தாலும்தான் காச நோய் ஏற்படுகிறது என்ற எண்ணம் மனிதர்களுக்கு மேலோங்கி இருந்தது! அப்போதுதான் ராபர்ட் காக் என்ற அறிவியல் அறிஞர் `காச நோய் பாவத்தால் வருவதல்ல. அது ஒரு பாக்டீரியா வகையைச் சார்ந்த நுண்ணுயிரி தொற்றுவதால் ஏற்படுகிறது’ என்பதை நுண்ணோக்கியின் மூலம் கண்டறிந்தார். அந்த உண்மையை உலகுக்கும் எடுத்துச் சொன்னார். அவர் காச நோய் கிருமியைக் கண்டறிந்த நாளான மார்ச் மாதம் 24-ம் தேதியை உலகச் சுகாதார நிறுவனம், `உலக காச நோய் தினமாக' அனுசரித்துக்கொண்டிருக்கிறது.

Sponsored


இந்த நாளை நமது இந்திய அரசும், மாநில அரசுகளும் காச நோய் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தக் கடைப்பிடிக்கின்றன. 

காச நோய் பற்றிய சில முக்கியச் செய்திகள்…

* முடி மற்றும் நகம் தவிர உடலின் எந்த உறுப்பையும் தாக்கும் காச நோய்.

* நுரையீரல் காச நோய் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இருமல், தும்மல் போன்ற செய்கைகளால் பரவும். நுரையீரல் காச நோயை விரைவில் கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது சமூகத்தில் அதன் பரவலைத் தடுக்கும்!


* மேலும், நுரையீரல் காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது கைக்குட்டை அல்லது துண்டால் முகத்தை மூடிக்கொண்டால், காச நோய் மற்றவருக்குப் பரவும் வாய்ப்புக் குறையும்.

* இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால், காச நோய்க்கான சளிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்தப் பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே செய்யப்படுகிறது.

* காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு மருந்து உட்கொண்டால் பூரண குணமடையலாம். இந்த மருந்துகள் அனைத்தும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே கிடைக்கின்றன’’ என்கிறார் மருத்துவர் ஆர்.பிரபாகரன்.



Trending Articles

Sponsored