காப்பர் தொழிற்சாலைக் கழிவுகளால் என்னென்ன நோய்கள் ஏற்படும்...? பட்டியலிடும் மருத்துவர்கள்! #BanSterlite



Sponsored



'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா ' தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் முழக்கமிட்ட வாசகம் இது.  அவர்கள் ஏந்திய பதாகைகளிலும் இந்த  வாசகம்தான் அதிகளவில்   இடம் பிடித்திருந்தன. 

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையில் முதன்மையாக காப்பர் கேத்தோடு ( Copper Cathode) மற்றும் காப்பர் ராடுகள் (Copper rods) உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் வயர்களில் உள்ள   மின்சாரக் கம்பிகள் (Wires) காப்பரால்  ஆனவையே. ட்ரான்ஸ்பார்மரில் மின்சாரத்தைக் கடத்துவதற்காக காப்பர் ராடுகள்தயாரிக்கப்படுகின்றன. 

Sponsored


காப்பர் ராடுகள், கேத்தோடுகள் தயாரிக்கும்போது வெளிப்படும் நச்சுக்காற்றால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகளும், காப்பர் கலந்த உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன. 

Sponsored


உண்மையில், காப்பர், உடல்நலப்பாதிப்புகளை ஏற்படுத்துமா? அந்த மக்களின் அச்சம் உண்மை தானா? 

 நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம். 

"தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களால் கண்டிப்பாக காற்று மாசடையும். அதிலும்  காப்பர் தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளிவரும் வாயுக்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. என்னதான் முறையாகப் பராமரித்தாலும் கூட காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.  

காப்பர் கலந்த நச்சுக்காற்றை நேரடியாகச் சுவாசிக்கும்போது, அதில் உள்ள  தனிமங்கள் மூச்சுப்பாதையில் அப்படியே படிந்துவிடும். இது

ரத்தத்தில் கலக்கும்போது சுவாச மண்டலம் விரைவாகப் பாதிக்கப்பட்டு,  நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, அலர்ஜி, சி.ஓ.பி.டி ( Chronic Obstructive Pulmonary Disease ) சுவாசக்கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடும். இதன் தாக்கம் இப்போது ஓரளவுக்குத்தான்  தெரியவந்திருக்கிறது. அடுத்த தலைமுறை இதன் பாதிப்பை அதிகமாக எதிர்கொள்ளும்" என்கிறார் அவர்.  

இது குறித்து நம்மிடம் பேசிய சிறுநீரக மருத்துவ நிபுணர் சேகர், "காப்பர் கலந்த உணவையும், தண்ணீரையும்  எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. காப்பர் போன்ற தனிமங்கள்  சிறுநீரகத்தின் ஃபில்ட்ரேஷன்  ஆற்றலை  குறைக்கும். சிறுநீரகத்தில்  அப்படியே  தங்கி ஃபில்ட்ரேஷன்  இஞ்சுரியை (Filteration injury) ஏற்படுத்தும். நாளடைவில் சிறுநீரகம் முழுமையாக பாதிப்பைடைய வாய்ப்புள்ளது" என்கிறார். 

புற்றுநோய் சிறப்பு மருத்துவர் இராமநாதனிடம் பேசினோம்.  "காப்பர் நிறைந்த உணவையோ, தண்ணீரையோ அதிகமான அளவில்  எடுத்துக் கொள்ளும்போது, அதன் பி.ஹெச் அளவு மாறும்போது கேன்சர் வரக்கூடிய வாய்ப்புள்ளது. காப்பர் மட்டுமல்ல எந்தவொரு தனிமமும் உடலில் அதிகமாகும்போது புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. " என்கிறார் அவர்.

உலகளவில் மனித இறப்புக்கான காரணிகளில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் 5,56, 400 இறப்புக்கள் புற்றுநோயால் ஏற்படுகின்றன. ஒவ்வொருவருடம் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் .

இந்தநிலையில் இதுபோன்ற ஆலைகளில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்றால், கழிவுகளால் புற்றுநோய் பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது. ஒருவேளை இதெல்லாம் மக்களுக்கு எழும் தேவையில்லாத அச்சம், புரளி என்பது ஆலை நிர்வாகத்தின் வாதமாக இருந்தால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு  மருத்துவப் பரிசோதனை செய்து மக்களின் அச்சத்தைப் போக்கலாம்.



Trending Articles

Sponsored