உணவிலிருக்கும் உப்பு, சர்க்கரை... அளவிட்டுச் சொல்லும் பல் சிப்... பலன் தருமா? - மருத்துவர்கள் கருத்துSponsored`ஒரு நாளைக்கு இவ்வளவு கலோரிதான் எடுத்துக்கணும்; உப்போட அளவு இதுக்கு மேல இருக்கக் கூடாது; சுகர் அளவு கூடாமப் பார்த்துக்கணும்...’ மருத்துவர்கள் பொதுவாக வழங்கும் அறிவுரைகள் இவை. சில உடல்நலப் பிரச்னைகளுக்கு, சிலர் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டியவையும்கூட. ஆனால், இதையெல்லாம் எப்படிப் பின்பற்றுவது, சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்? இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாமென்றால், அவற்றில் பொதுவான அளவீடுகள்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக `இவ்வளவுதான் கலோரி, உப்பு, சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்...’ எனக் கணக்கிடும் கருவிகளோ, முறைகளோ இல்லை.

(Photo Credit : SilkLab, Tufts University)

Sponsored


உணவு தயாரிப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் ஏற்ப மாறுபடும். வெளிநாட்டு இணையதளங்களில், `ஓர் இட்லியில் இவ்வளவு கலோரி இருக்கும்’ என்ற அளவீடு இருக்கலாம். ஆனால், இந்திய இட்லிக்கும், வெளிநாட்டு இந்திய உணவகங்களில் தயாரிக்கப்படும் இட்லிக்கும் வேறுபாடு உண்டு. அவ்வளவு ஏன்... இந்தியாவுக்குள்ளேயே ஆந்திரா இட்லிக்கும், தமிழ்நாட்டு இட்லிக்குமே மூலப்பொருள்களில் வேறுபாடு இருக்கின்றன. இது, வீட்டுக்கு வீடு கூட மாறுபடும்.

Sponsored


அப்படியென்றால், நாம் சாப்பிடும் சாப்பாட்டில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது, எவ்வளவு உப்பு இருக்கிறது என்பதை மருத்துவரின் உதவியில்லாமல் எப்படித்தான் தெரிந்துகொள்வது, வேறு வழி இருக்கிறதா?

இருக்கிறது. அதற்காகவே பற்களில் பொருத்திக்கொள்ளக்கூடிய சிப் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இதைப் பொருத்திக்கொண்டால், நாம் சாப்பிடும் உணவுகளிலிருக்கும் சர்க்கரை, உப்பு, ஆல்கஹால் மற்றும் வேதிப்பொருள்களின் அளவுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடுகிறது இந்தக் குட்டியூண்டு சிப். மூன்று அடுக்குகளுடன் இரண்டு மி.மீ அளவிலிருக்கிறது இந்த சிப். இதை அமெரிக்காவின், மாசா சூசெட்ஸ் நகரிலிருக்கும் டஃப்ஸ் பல்கலைக்கழகம் (Tufts University) கண்டுபிடித்திருக்கிறது. உடலில் சர்க்கரை அல்லது உப்பின் அளவு அதிகரித்துவிட்டதா... அவ்வளவுதான்... ரேடியோ அலைகள் மூலமாக நம் ஸ்மார்ட்போனுக்குத் தகவலனுப்பிவிடும் இந்த சிப்.

இந்தக் குட்டிக் கருவி பயனுள்ளதுதானா? சில மருத்துவர்களிடம் கருத்துக் கேட்டோம்...

பேராசிரியர் வசந்தி, பொதுநல மருத்துவர்:

``ஒரு கண்டுபிடிப்பாக இதை வரவேற்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு சர்க்கரை, உப்பு இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள இது உதவும். அதே நேரத்தில் இந்த சிப் காட்டும் அளவை வைத்துக்கொண்டு சிகிச்சையளிக்க முடியாது. ரத்தத்திலிருக்கும் சர்க்கரை, உப்பின் அளவை வைத்துத்தான் சிகிச்சையளிக்க முடியும். நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது, உப்பு இருக்கிறது என்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

உணவுகளிலிருக்கும் சர்க்கரையோ, உப்போ... அவற்றின் அளவைப் பொறுத்து உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அவை ரத்தத்தில் எவ்வளவு கலக்கின்றன, ரத்தத்தில் எவ்வளவு இருக்கின்றன என்பதைப் பொறுத்துதான் ஆரோக்கியம் மற்றும் ஒரு பிரச்னையின் தீவிரம் கணக்கிடப்படும், சிகிச்சையளிக்கப்படும்.

ஆனால், இதுபோன்ற கருவிகள் சரியான அளவுகளைக் காட்டுவதில்லை. இதில் தெரியும் அளவைப் பார்த்து பலர் பயப்படவும் வாய்ப்பிருக்கிறது. அது உப்பின் அளவோ, கலோரியின் அளவோ... சாப்பிட்டவுடனேயே அதிக அளவில் இருப்பதாக இந்த சிப் காட்டும். அதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அதற்காக மாத்திரை, மருந்துகள் உட்கொள்ள ஆரம்பித்தால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.

மருத்துவரின் பரிசோதனை இல்லாமல், இது போன்ற கருவிகளால் தன்னிச்சையாகக் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளும் அளவுகளால் எந்தப் பயனும் இல்லை. குழப்பம்தான் மிஞ்சும். இந்த சிப் இப்போது சோதனைக் கட்டத்தில்தான் இருக்கிறது. மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால்தான் இதன் சாதக பாதகங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு பேச முடியும்.’’

உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ்

`` `உடலில் சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு அதிகமானால் இந்த சிப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம்’ என்கிறார்கள். இதனால் ஓரளவுக்கு நன்மை இருக்கத்தான் செய்கிறது. அடுத்த முறை சாப்பிடும்போது கொஞ்சம் கவனமாகச் சாப்பிடலாம். அதற்காக, மொபைலைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது சரியல்ல. இதனால் தேவையற்ற பயம்தான் ஏற்படும். என்னதான் கருவிகள் மூலம் இந்த அளவுகளைக் கண்டுபிடித்துவிட்டாலும், மருத்துவப் பரிசோதனைகளுக்கு இது இணையாகாது. உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம்... இப்போதே குளூக்கோமீட்டரில் ரத்தத்திலிருக்கும் சர்க்கரையின் அளவைப் பார்த்து பயந்து, பலர் அதிக மாத்திரைகள் உட்கொள்வது, மருத்துவரைத் தேடிப் போவது போன்ற அவலங்களும் நடக்கின்றன. அதோடு, இது போன்ற கருவிகளால் துல்லியமாக எதையும் அளவிட முடியாது.’’


 Trending Articles

Sponsored