இனி காயங்கள் விரைவில் ஆறும்... மருத்துவ உலகின் முக்கிய கண்டுபிடிப்பு! #WoundHealing



Sponsored



உடலில் ஏற்படும் காயங்கள் மிக விரைவில் குணமாகுதல் சாத்தியம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். அதற்காக அவர்கள் கூறும் மருந்து என்னதெரியுமா?  நமது உமிழ்நீர் (Saliva). ஆம்.. நமது உமிழ்நீர் தான் வருங்காலத்தில் நமது காயங்களை குணப்படுத்தப்போகிறது.

உமிழ்நீர் மருத்துவம்:

விரலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு சில நாள்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், அதுவே வாயினுள் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் ஒரு நாள் இரவிலேயே குணமடைந்து விடுவதை பார்த்திருப்போம். அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள் இருந்தாலும், 2017-ம் ஆண்டின் ஆராய்ச்சியானது ஒரு சுவாரஸ்யமான பதிலினைக் கண்டறிந்துள்ளது. உமிழ்நீரில் உள்ள ஒரு மூலக்கூறானது புதிய செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது என்பதே அந்தக் கண்டுபிடிப்பாகும். இந்தக் கண்டுபிடிப்பானது வாயினுள் ஏற்படும் காயங்கள் மட்டுமல்லாமல் பிற பகுதிகளில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதிலும் உதவப்போகிறது.

Sponsored


Sponsored


உணவினை விழுங்குவதற்கும் மற்றும் உணவுச் செரிமானத்துக்கும் இன்றியமையாத பணியை ஆற்றும் உமிழ்நீரானது வாயினுள், மேல் அண்ணச் சுரப்பிகள் (Parotid),  கீழ்த்தாடைச் சுரப்பிகள் (Submandibular) மற்றும் நாவடிச் சுரப்பிகள் (Sublingual) போன்ற மூன்று இணை நாளமில்லாச் சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது. வாயினை ஈரப்பதத்தோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல் நுண்ணுயிரிகள் மற்றும் கிருமிகளை அழிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. தினந்தோறும் 1 – 1.5 லிட்டர் அளவுக்கு சுரக்கப்படும் உமிழ்நீரானது பல்வேறு நொதிகளையும் (enzymes) கொண்டுள்ளது.

உமிழ்நீரானது, பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் மற்றும் காயங்கள் ஆற்றுவதற்கும் ‘ஹிஸ்டடின்-1’ (histatin-1) என்ற மிகச்சிறிய புரத மூலக்கூறினை பெற்றது என்பதை விஞ்ஞானிகள் அறிவர். 2017-ம் ஆண்டு FASEB (Federation of American Societies for Experimental Biology) ஆய்வறிக்கை வெளியிட்ட ஓர் ஆராய்ச்சியில், சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சிறிய மூலக்கூறானது காயத்தினை குணப்படுத்துவதில் எவ்வாறு உதவுகிறது என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் அந்த ஹிஸ்டடின்-1 மூலக்கூறினை கோழியின் கரு (embryo cells) மற்றும் மனிதர்களின் சிலவகை ரத்தநாளச் செல்கள் (human blood-vessel cells) ஆகியவற்றில் செலுத்தி சில தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தனர்.

பொதுவாக ஒரு காயமானது குணமடைவதற்குப் பல நிலைகள் உள்ளன. முதலில் காயத்தின் விளிம்புகளில் புதிய தோல் செல்கள் (skin cells)  உருவாக வேண்டும். பின்பு அவை படிப்படியாக விளிம்புகளில் இருந்து நகர்ந்து மொத்த காயத்தையும் மறைக்க வேண்டும். இதில் முக்கியச் செல்கள் (active cells) எனப்படும் ஃபிப்ரோபிளாஸ்ட் (Fibroblasts) செல்கள் புதிய தோல் உருவாவதற்குத் தேவையான கொலாஜென் (Collagen), எலாஸ்டின் (elastin) போன்ற புரதங்களையும்  மற்றும் பிற புரதப்பொருள்களையும் உற்பத்தி செய்யும் பணியைச் செய்கிறது. அதன்பின்பு அந்த இடத்தில் புதிய ரத்த நாளங்கள் உருவாக்கப்பட்டு ரத்தத்தைப் பாயச் செய்வதன் மூலம் வேகமாக அவை குணமடைய வழிவகுக்கப்படுகிறது

அவ்வகையில் பார்த்தோமேயானால், ஹிஸ்டடின்-1 புரதமூலக்கூறானது மேற்சொன்ன அனைத்தையும் செய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இவை புதிய தோல் செல்களை உருவாக்கி அவற்றை காயத்தின் மேல் படரச்செய்வது மட்டுமல்லாமல் முக்கியமாக, புதிய ரத்த நாளங்கள் உருவாக்கத்திலும் உதவிபுரிவது இவற்றின் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. 

மேம்பட்ட சிகிச்சைக்கு உதவும்: 

விரல்களில் வெட்டுக்காயம் என்றதும் அந்த விரலினை வாயினுள் வைப்பதும், மற்றும் பிற பகுதிகளில் காயம் என்றால் அந்த இடத்தில் எச்சிலை வைக்கும் பழக்கம் உடைய நம்மில் பலரும் இதைப் படித்ததும் உடனே, ``நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே இதை சங்கப்பாடல்களில் எழுதிவைத்துள்ளனர்” என்று மீம்களைப் போட்டு காலரைத் தூக்கி விடுவர். அப்படிப்பட்டவர்கள், சிறிது ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் பின்வரும் அறிவுரையினைக் கேட்பது நலம்; ”பல ஆண்டுகள் இதை நாம் பின்பற்றி வந்தாலும் இந்தப் பழக்கம் ஆரோக்கியமானது அல்ல. காரணம் நமது வாயானது முழுக்க கிருமிகளாலும் நுண்ணுயிரிகளாலும் சூழ்ந்து காணப்படுகிறது. அதில் 650 வகை பாக்டீரியாக்கள் காணப்படுவதாகவும் சிலர் கண்டறிந்துள்ளனர். ஆகவே, இவற்றுக்குப் பதிலாக ஏற்கெனவே நிறுவப்பட்ட சில முறைகளான; சுத்தமான நீரால் கழுவுதல் மற்றும் பேண்ட்டேஜ் (bandage) மூலம் காயங்களை மூடிவைத்தல் போன்ற முறைகளைக் கையாளலாம்”.

இந்த ஆராய்ச்சி முடிவுகளை வைத்து வருங்காலத்தில் ஹிஸ்டடின்-1 மூலக்கூறுகளைக் கொண்டு காயங்களை விரைவில் குணப்படுத்தும் புதிய மருந்துகளை உருவாக்குவது சாத்தியம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சிலி நாட்டின் ஆராய்ச்சியாளர்கள். மேலும் இதுகுறித்து FASEB ஆராய்ச்சி இதழின் தலைமை ஆசிரியர் ‘தோரே பெடர்சன்’ (Thoru Pederson) கூறுகையில், “தற்போதைய ஆய்வின் தெளிவான முடிவுகள், வருங்காலத்தில் மேம்பட்ட சிகிச்சைக்கான கதவுகளைத் திறக்கும் வகையில் வந்துள்ளது” என்றார். 

எது எப்படியோ, உமிழ்நீரின் குணப்படுத்தும் ஆற்றலானது உயிரித்தொழில்நுட்பம் கண்டறிந்த முக்கிய கண்டுபிடிப்பாகும். காயங்கள் மிக விரைவில் ஆறினால், பல வீரத்தழும்புகள் வாங்குவதற்கு நாமும் ரெடி தான் அல்லவா..!



Trending Articles

Sponsored