``சாப்பாட்டுல நோ ஷெட்யூல்... கலோரி மட்டும்தான் என் கணக்கு!’’ - ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் பகிரும் நடிகர் ஆரவ் #FitnessTips



Sponsored



ரவ்! விளம்பர மாடலாக சில காலம் வலம்வந்திருந்தாலும், இவரைப் பரவலாக எல்லோரையும் அறியச்செய்தது `பிக் பாஸ்’ நிகழ்ச்சிதான். `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், அதற்குப் பிறகான வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. அவர்களில் ஆரவ் மட்டும் விதிவிலக்கா என்ன?! ஏறத்தாழ ஒன்பது வருடங்களுக்கும் மேலாக மாடலிங் துறையில் இருந்தவர், இப்போது வெள்ளித்திரையில் அடியெடுத்துவைத்திருக்கிறார். ஏற்கெனவே `மீண்டும் வா அருகில் வா' திரைப்படத்தின் டீஸர் வெளிவந்திருந்த நிலையில், இப்போது அடுத்ததாக ஒரு படத்துக்கும் கமிட் ஆகியிருக்கிறாராம். தன் ஃபிட்னெஸ், அதற்கு அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், டயட் அனைத்தையும் குறித்து விரிவாகப் பேசுகிறார்...

``நான் எட்டு வருஷமா மாடலிங் ஃபீல்டுல இருந்தேன். அப்போ, `சிக்ஸ்-பேக் வைக்கணும்' என்ற எண்ணம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும். மாடலிங் பண்றவங்களுக்கு ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம். எல்லா விளம்பரத்துலயும், ஒரே மாதிரியான உடலமைப்போட இருக்கவேண்டியிருக்கும். அதுக்கு, ஒரே மாதிரியான எக்சர்சைஸ் முறைகளை ஃபாலோ செஞ்சா போதும். திரைப்படங்கள்ல, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏத்த மாதிரி உடம்பை மாத்திக்கவேண்டியிருக்கும். இப்போ, படங்கள் மேல கவனம் குவிஞ்சிருக்கறதால, கதாபாத்திரத்துக்கு என்ன தேவைங்கறதைக் கேட்டு, அதுக்கேத்த மாதிரி வொர்க்-அவுட் முறைகளை மாத்திக்கிறேன். ஒரு படத்துல பக்கத்து வீட்டுப் பையன்போல இருக்கவேண்டியிருக்கும், இன்னொரு படத்துல வில்லனா நடிக்கவேண்டியிருக்கும். அந்தந்த கேரக்டருக்கு மசில்ஸ் ஃபிட்னெஸ் வேணுமா, ஒல்லியா இருக்கற மாதிரி வேணுமா, கொஞ்சம் எடை அதிகரிக்கணுமானு முன்னாடியே கேட்டுக்குவேன். மாடலிங்ல இருந்தப்போ, ஜிம்முக்குப் போய் வொர்க்-அவுட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ கார்டியோ வகை எக்சர்சைஸ் அதிகமா செய்றேன்.

Sponsored


ஃபிட்னெஸ்ல முக்கியமான விஷயம், டயட். `பேலன்ஸுடு டயட்’தான் என்னோட ஃபார்முலா. `சிக்ஸ் மீல் டயட்’-டை ஃபாலோ பண்ணுவேன். அதாவது, உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேளை சாப்பிடும் பழக்கம். எவ்வளவு சாப்பிடுகிறோம்கிறதுலதான் டயட் இருக்கு. எத்தனை தடவை சாப்பிட்டாலும், குறிப்பிட்ட அளவு மட்டும்தான் சாப்பிடுவேன். பிடிச்ச உணவா இருந்தாலும், குறைவான அளவுதான் சாப்பிடணும்கிற எண்ணம் எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். உதாரணமா, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65-ல்லாம் என்னோட ஃபேவரைட். ஒரு நாள் முழுக்கச் சாப்பிடச் சொன்னாலும், சாப்பிடுவேன். டயட்னு வந்த பிறகு, குறிப்பிட்ட அளவுக்கு மீறி சாப்பிடறதில்லை. 

Sponsored


காலையில 6:30 மணிக்கு எந்திருச்சவுடனே, தேன் கலந்த தண்ணீர் குடிப்பேன். அடுத்து, கிரீன் டீ. கொஞ்ச நேரம் கழிச்சு பழங்கள், பிரெட் ரோஸ்ட் சாப்பிடுவேன். பதினோரு மணிக்கு மேல ஸ்நாக்ஸ் எடுத்துக்குவேன். மதியத்துக்குக் கொஞ்சம் சாதம், சிக்கன் ஸ்லைஸ் சாப்பிடுவேன். சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடும்போது, இடைப்பட்ட நேரங்களில் பசியெடுத்தா, பழங்கள் சாப்பிடுவேன். பெரும்பாலும் நான் மேற்கத்திய உணவுகளைச் சாப்பிடுறதில்லை. நம்ம சூழலுக்கு எந்தெந்த உணவுகள் ஒத்துவருமோ, அதை மட்டும்தான் சாப்பிடுவேன். கேழ்வரகு, கம்பு மாதிரியான உணவு வகைகளும் இதில் அடக்கம். வறுத்த உணவுகளைத் தவிர்த்திடுவேன். இந்த நேரத்துக்கு இந்தச் சாப்பாடு, இந்தக் கிழமைக்கு இந்த மெனுனு இருக்க மாட்டேன். சாப்பாடு விஷயத்துல, நோ ஷெட்யூல். சாப்பாட்டுல எவ்வளவு கலோரி இருக்குங்கிறது மட்டும்தான் என் கவனத்துல இருக்கும். ஒவ்வோர் உணவுக்கும் கலோரி அளவு வேறுபடும். கலோரி அளவை தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி உடற்பயிற்சி செய்வேன். 

எவ்வளவு சாப்பிடுறோமோ, அந்தளவுக்கு உடலுழைப்பு இருக்கணும். நம்ம பாட்டி-தாத்தா காலத்துல, அவங்களோட அன்றாட வேலைகளிலேயே உடலுழைப்பு கலந்திருந்துச்சு. அதனால அவங்க ஹெவியான உணவுகளைச் சாப்பிட்டாலும் ஆரோக்கியமா இருந்தாங்க. இன்னைக்குச் சூழல் அப்படியில்லை. சாப்பிடுறதுக்கு ஏற்ப உடலுழைப்பும் இருக்கணும். இல்லாட்டி, தேவையில்லாத ஆரோக்கியக் குறைபாடுகளெல்லாம் ஏற்படும். அதுக்காகத்தான் எக்சர்சைஸ்! 

சில எக்சர்சைஸ் நம்ம மனசுக்கும் புத்துணர்ச்சி தரும். அந்த வகையில, என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர் சைக்கிளிங்தான்! தி.நகர்லருந்து பெசன்ட் நகர் வரைக்கும் சைக்கிளில் அடிக்கடி வேகமா போவேன். ஒருநாள் மகாபலிபுரம் வரைக்கும் சைக்கிள்லயே போயிட்டு வந்திருக்கேன்னா பாருங்க... அதிகபட்சமா ஒரே நேரத்துல 60 கி.மீ வரைக்கும் பெடல் பண்ணியிருக்கேன். காலையில சைக்கிளிங் போக முடியலைனா, நைட்ல போவேன். தினமும் எக்சர்சைஸைத் தவிர்க்க எந்தக் காரணமும் சொல்லக் கூடாது. நாம வாழுற வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது நம்ம ஹெல்த்தான். இன்னைக்குச் சூழ்நிலையில, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏகப்பட்ட நோய்களை நம்மகிட்ட கொண்டு வருது. நோயில்லாத வாழ்க்கையை வாழணும்னா, தினமும் எக்சர்சைஸ் பண்ணித்தான் ஆகணும். 

என்னைக் கேட்டா, தேவை இருப்பவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் வீட்டிலேயே எக்சர்சைஸ், வொர்க்அவுட்ஸ்லாம் பண்ணலாம். நான் அதிகமா நம்புறது, கிரவுண்ட் வொர்க்-அவுட்ஸைத்தான். இப்போகூட, ஒரு படத்துக்காக ஒன்பது கிலோவரைக்கும் எடை குறைச்சிருக்கேன். நம்ம உடம்புக்கு என்ன தேவை, எது சரிங்கிறதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி பயிற்சிகளைச் செய்யணும். க்ராஸ் ஃபிட்னெஸ் (Cross Fitness) வொர்க்-அவுட்ஸ்தான் என்னோட பயிற்சி முறை. புல் அப், புஷ்-அப்ஸ், சைக்கிளிங், ரன்னிங், பார்கர் ரன் (Parkour Run) மாதிரியான எல்லா வகை எக்சர்சைஸ் முறைகளையும் செய்றதுதான் க்ராஸ் ஃபிட்னெஸ்.’’



Trending Articles

Sponsored